2024-ல் திமுக ஆட்சி கலைப்பு…? அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி..! திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’

Author: Babu Lakshmanan
23 September 2021, 9:47 pm
admk - dmk - updatenews360
Quick Share

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரபரப்புடன் செய்திகளை வெளியிட்டன. விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தின.

ஊடகங்கள் ஆதரவு

இவற்றில் பங்கேற்கும் பிரமுகர்களில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி என்று ஒவ்வொரு கட்சியிலும் தலா ஒருவர் இருந்தாலும் மறைமுகமாக திமுகவையும், காங்கிரசையும் ஆதரிக்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் என்று சிலரும் இந்த விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்கப்பட்டு விடுவார்கள். இதனால், அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் விவாதங்களில் பேசக்கூடிய நேரம் குறைவாக கிடைத்தது. திமுகவுக்கு ஆதரவாக பேசுவோர் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது.

இதைவிட வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட சில ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் நெறியாளர்களும் இடையிடையே புகுந்து இவர்களுக்கு ஆதரவாக அதிமுக, பாஜக தரப்பினரை மட்டுமே குறிவைத்து முழு கருத்து சுதந்திரத்துடன் கேள்விகளை எழுப்புவதும் உண்டு.

சட்டப்பேரவை தேர்தலில், வெற்றி பெற்று திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகும் கூட பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவை குறித்து எதிர்மறையான கருத்துக்களை பல தனியார் செய்தி சேனல்கள் இப்போதும் வெளியிட்டு வருவதையும் காண முடிகிறது.

இதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று அதிமுகவும், பாஜகவும் முடிவு செய்தன.

திமுகவுக்கு ஜால்ரா ஏன்..?

இந்த நிலையில்தான், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக ஊடகங்களின் நடுநிலைத்தன்மை பற்றி வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் சரமாரி கேள்விகளை எழுப்பி அவர்களை திணறடித்தார்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,”திமுக, தேர்தல் அறிக்கையை என்றைக்கும் நிறைவேற்றியதாகச் சரித்திரம் இல்லை. முதல் கையெழுத்து போட்டு நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் தற்போது சட்டப் பேரவையில் நிறைவேற்றியுள்ளனர்.

eps 1-updatenews360

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை நம்பி 43 லட்சம் மக்கள் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக்கடன் கூட ரத்து செய்யவில்லை.

திமுகவில் 13 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால், அது குறித்து நீங்கள் யாரும் எதுவும் பேசுவதில்லை. அதிமுகவை குறித்து மட்டுமே ஊடகங்கள் பேசி வருகின்றன. 12 முன்னாள் அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்-னு நீங்கதான் செய்தி போடுகிறீர்கள், எங்களுக்கு ஒன்றும் வரவில்லை. ஆட்சியில் இருக்கும்போதும், இப்போதும் அதிமுகவை மட்டுமே குறிவைத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. மக்கள் பிரச்சினையை எடுத்துச் சொன்னால் நீங்கள் யாரும் வெளியிடுவதில்லை.

ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் 8 பேர் மட்டுமே மருத்துவ கல்வி பயின்ற நிலையில், அதிமுக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால் 435 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு தற்போது, எங்கள் அரசு கொண்டு வந்த நடை முறையை பின்பற்றுகிறார்கள்” என்று அதிரடி காட்டினார்.

2024ல் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல்

அதில் குறிப்பாக அவர் சொன்ன ஒரு முக்கிய தகவல் மட்டும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “2024-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது” என்று ஒரு சரவெடியை கொளுத்தி போட்டார்.

TN Sec -Updatenews360

இதனால் தமிழக சட்டப்பேரவை கலைக்கப்பட்டு 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாகவே, மாநிலங்களில் அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் காரணமாக நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதால் இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும், இதர தேர்தல்களையும் நடத்தலாம் என `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ யோசனையை வலியுறுத்தி வருகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை, தேர்தல் ஆணையம் ஏற்கிறது. தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், இதை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்து இருக்கிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2024-ல் நாடாளுமன்றம் 1000 எம்பிக்களுடன் அமையும் என்பது உறுதியாக தெரிகிறது.

அதற்கு முன்பாகவே நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேநேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் அப்போது தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் என்ற யூகமான தகவலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

திமுக எதிர்க்கும்

இதுபற்றி டெல்லியில் அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறும்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவைக்கும் நிச்சயம் தேர்தல் நடக்கும்.

மேலும் 2 ஆண்டுகள் ஆட்சி நடத்த வாய்ப்புள்ள நிலையில் இதை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏற்குமா? என்பது சந்தேகம்தான். இதனால் கடுமையாக எதிர்க்கலாம். ஏனென்றால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் என்றால், எப்போது நடத்துவார்கள் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. 3,4 மாதத்திற்கு முன்பாகவே அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை கலைக்கப்படலாம். அப்படி நடந்தால் மாநில அரசின் பிடி தற்காலிகமாக கவர்னர்களின் கைகளுக்குள் சென்றுவிடும்.

cm stalin- updatenews360

மேலும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்ததுபோல் வெற்றி கைகூடுமா? என்பதும் திமுக கூட்டணி கட்சிகளிடம் எழும் கேள்வியாக உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் சேர்த்து நடத்தப்படக் கூடாது என்பதில் திமுகவை விட அதன் கூட்டணிக் கட்சிகளே அதிக அக்கறை காட்ட வாய்ப்புள்ளது.

திமுகவை பொறுத்தவரை தேர்தல் என்றால் எப்போதுமே சுறுசுறுப்பு காட்டும். 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் மேலும் ஒரு 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கலாம் என்று கருதுவதற்கும் இடமுண்டு.

ஒரே நேர தேர்தலைக் காரணம் காட்டி தமிழகத்தில் முன்கூட்டியே ஆட்சியை கலைத்தால் திமுகவுக்கு பலமும் கிடைக்கலாம். பலவீனமும் ஏற்படலாம். எனினும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய பிறகே இது குறித்து தீர்மானமாய் எதுவும் கூற இயலும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 177

0

0