தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : 18 மசோதாக்கள் நிறைவேற்றம்..!

16 September 2020, 4:45 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக இந்த முறை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மேலும், முதலமைச்சர் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

உரிய மருத்துவப் பாதுகாப்புடன் கடந்த 14ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் உள்பட 23 மக்கள் பிரதிநிதிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று 2வது நாள் கூட்டத்தில், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட தி.மு.க.வினரின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடத்தப்பட்டது.

அதோடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 3வது நாள் கூட்டமான இன்றைய நாளில், திருமண பதிவு செய்தல், வேதா இல்லத்தை அரசுடைமையாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மொத்தம் இந்தக் கூட்டத் தொடரில் மட்டும் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 3 நாட்கள் நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா சூழலிலும் பேரவையை நடத்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் பழனிசாமிக்கு சபாநாயகர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply