தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டியா..? அடுத்த வாய்ப்பு யாருக்கு..?

8 July 2021, 7:12 pm
bjp head - updatenews360
Quick Share

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதோடு, பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினத்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பிரதமர் மோடியின் அமைச்சரவையை அலங்கரித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவை பொறுத்தவரையில் கட்சி விதிப்படி அரசு பதவி பெறும் ஒருவர் கட்சி பொறுப்புகளை வகிக்க முடியாது என்பதாகும். தற்போது, கட்சியின் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்டோர் உள்ளனர். அதிலும், வானதி சீனிவாசன் தேசிய மகளிர் அணியின் தலைவராக இருப்பதால், நயினார் நாகேந்திரனுக்கும், அண்ணாமலைக்குமே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக தமிழகத்தில் அதள பாதாளத்தில் பாஜக இருந்து வந்த நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காரணம், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதும், அவரது சிறப்பான நடவடிக்கையும் காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும், உயர்சாதியினருக்கானது பாஜக என்னும் பிம்பத்தை மாற்றும் முயற்சியில் கடந்த சில நாட்களாக நியமனங்கள் இருந்து வருகின்றன.

எனவே, தென்தமிழகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அண்ணாமலை என இவர்களில் யாரேனும் ஒருவரை மாநில பாஜக தலைவராக நியமித்தால், அக்கட்சிக்கு நல்ல பலன் கொடுக்கும் என பாஜகவினரின் நம்பிக்கையாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

Views: - 133

0

0