கல்விக்கடன் தள்ளுபடி, டீசல் விலை குறைப்பு அறிவிப்பு எங்கே..? திமுக தேர்தல் வாக்குறுதியும்… தமிழக பட்ஜெட்டும் ஒரு பார்வை..!!

Author: Babu Lakshmanan
13 August 2021, 2:01 pm
budget -- updatenews360
Quick Share

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, கல்விக்கடன், கூட்டுறவு வங்கி நகைக்கடன் மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அறிவித்தது. இதையடுத்து, திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்து 100 நாட்களை கடந்து விட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அறிவிப்பு இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

Go Back Stalin- Updatenews360

ஆனால், இந்த வாக்குறுதிகள் பற்றி பொத்தாம் பொதுவான அறிவிப்பை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது :- கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். விவசாய நகைக்கடன்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழக அரசு செயல்படுத்தும்.

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை ரூ.3 அளவிற்கு குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் .பெட்ரோல் மீதான வரி குறைப்பால் அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இது மாநிலத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும், நடுத்தரக் குடும்பங்களுக்கும் பெரிய நிவாரணமாக அமையும், என தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்காமல், முன்னுரிமை அளிக்கப்படும் என்றே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நகைக்கடன் தள்ளுபடி என்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது. மேலும், கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் உயர்கல்விச் சலுகை பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறாதது இளைஞர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், “தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைந்தால் நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மற்றும் மகளிருக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்தது. மேலும் 100 நாட்களில் மக்களின் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். இதனை நம்பி பெரும்பாலானோர் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால், ஆட்சியமைந்தவுடன் கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டதால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

சரி, பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், இந்த முறையும் ஏமாற்றமே எங்களுக்கு மிஞ்சியது. நகைக்கடன் தள்ளுபடியை அறிவிக்காமல், முன்னுரிமை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என தெரியவில்லை. ஏற்கனவே ஆட்சியமைந்து 3 மாதங்களுக்கு வட்டி கட்ட வேண்டியுள்ளது. இனியும் தாமதித்தால் நகைக்கான வட்டி அதிகமாகும்.

Petrol Pirce - Updatenews360

பெட்ரோல், டீசல் விலை குறைப்பிலும் இதேதான். முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார், இவ்வளவு அரசுக்கு இழப்பு எனக் கூறியுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விலை குறைப்பிற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து விட்டு, ரூ.3 குறைக்கப்போவதாக பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர். மேலும், டீசல் விலை குறைப்பு மற்றும் சிலிண்டருக்கான ரூ.100 மானியம் பற்றி எந்தவிதமான அறிவிப்பும் இடம்பெறவில்லை.

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, தேதி போட்டோமா..? என்று பதிலளித்தவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மேலும், தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதையும் தமிழக அரசு கூறிவிட்டதால், தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பது எங்களுக்கு கானல் நீராகவே இருந்து வருகிறது,” என்று கூறினர்.

Views: - 365

0

0