ஸ்டாலினின் முதல் தமிழக பட்ஜெட்… பூஜ்ஜியமா..? ராஜ்ஜியமா..?

Author: Babu Lakshmanan
13 August 2021, 9:31 pm
budget - updatenews360
Quick Share

திமுக அரசு பதவியேற்ற 95 நாட்களுக்கு பிறகு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

கவர்ச்சி வாக்குறுதிகள்

தேர்தலின்போது திமுக 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு
5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா கால நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நேரடி பணப் பயன்கள் தரும் சுமார் 50க்கும் மேற்பட்ட கவர்ச்சிகர வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது.

stalin grama sabha - updatenews360

ஆட்சிக்கு வந்தபின் கடந்த மே மாதம் 7-ம் தேதி முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டர் 3 ரூபாய் குறைப்பு ஆகிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். கடந்த ஜூன் 3-ம் தேதி கொரோனா கால நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கும் திட்டம் இரு தவணைகளாக செயல்படுத்தப்பட்டது.

இதனால் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி எஞ்சிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் என்று குடும்பத் தலைவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் என்று அனைத்து தரப்பினருமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆய்வில் இருக்கும் வாக்குறுதிகள்

இந்த நிலையில்தான் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். சுமார் 3 மணி நேரம் பேசிய அவர் கூறும்போது, “திமுக அரசு பொறுப்பேற்ற உடன் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி தேர்தல் நேரத்தில் அளிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது.

தமிழக நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும். தேர்தல் அறிக்கை கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். ஒரே ஆண்டில் முடிக்க முடியாத அளவிற்கு பணிகள் மிகக்கடுமையாக உள்ளன. இவற்றை செய்து முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் வரிமுறை, மாநில அரசின் நிதியை திசை திருப்பி கூட்டாட்சி தத்துவ முறைக்கு மாறாக உள்ளது. 2014-ம் ஆண்டில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி 10 ரூபாய் 35 காசுகள். டீசல், மீதான வரி 3 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. தற்போது பெட்ரோல் மீதான வரி 32 ரூபாய் 90 ஆகவும், டீசல் மீதான வரி 31 ரூபாய் 80 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டில் பெட்ரோல் டீசல் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் 63 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. அதேநேரம் மாநிலங்களின் பங்கு கடுமையாக சரிந்துள்ளது. எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.

Petrol Pirce - Updatenews360

தமிழகத்தில் 2 கோடியே 30 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஓடுகின்றன. இவை பணிபுரிவோருக்கான ஆதாரமாக இருப்பதால் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படுகிறது. இதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்து இருக்கிறார். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது என்பது, ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியதாகும். பணக்காரர்களுக்கும், சம்பளம் பெறுவோருக்கும் இந்தத் தொகை வழங்கப்படக்கூடாது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதனால் குடும்ப அட்டை வைத்திருப்போரில் உண்மையிலேயே ஏழ்மை நிலையில் உள்ளோர் கண்டறியப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பயனாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி தற்போதைக்கு இல்லை.
இந்த இரண்டிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவதால் ஆய்வு செய்யப்பட்ட பின்புதான் இதுபற்றி முடிவெடுக்கப்படும்.

வரிமுறை சீர் செய்ய சட்ட பொருளாதார வல்லுனர்களை கொண்ட குழு அமைக்கப்படும். அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுநிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஏமாற்றம் கொடுத்த பட்ஜெட்

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது,”குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகியவற்றை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்றும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.

1000 ரூபாய் உரிமைத் தொகை என்பது பஸ்களில் அனைத்து தரப்பு பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு போல இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் தற்போது அதில் ‘செக்’ வைத்திருப்பது தெரிகிறது. தமிழகத்தில் சுமார் 2 கோடியே 35 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் குடும்பத் தலைவிகள் ஆவர். பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள், சம்பளம் பெறுவோர் என்று கணக்கெடுத்தால் சுமார் 50 லட்சம் பேர் வரை இருக்கலாம்.

ration card - cash - updatenews360

கொரோனா இரண்டாம் அலை எப்போதும் ஓயும், மூன்றாம் அலை எப்போது வரும் என்பது தெரியாத நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு உடனடியாக மாத 1,000 ரூபாயை வழங்கவேண்டும். பயனாளிகளை கணக்கு எடுக்கிறோம் என்று கூறி இந்த வாக்குறுதியை நீண்ட காலம் தள்ளிப்போட்டு விடக்கூடாது. இந்த கணக்கெடுப்பை விரைவில் முடித்து, தீபாவளிக்கு முன்னதாகவே குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்திருப்பது, ஆடம்பரக் கார் வைத்திருக்கும் பணக்காரர்களுக்கும் சேர்த்து கிடைக்கும் சலுகை ஆகும். எனவே அவர்கள் இச்சலுகையை பெறாதவாறு நடைமுறைகளை உருவாக்கவேண்டியது, அரசின் கடமை.
உரிமைத்தொகை வழங்குவதில் பணக்காரர்களையும், சம்பளம் பெறுவோரையும் தவிர்க்கும் தமிழக அரசு இதிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

டீசல் விலை குறைப்பு எங்கே?

பெட்ரோல் விலையை சிறிது குறைத்து இருப்பதுபோல் டீசல் விலையையும் சற்று குறைத்திருக்கலாம். ஏனென்றால் அரசி, பலசரக்கு, மளிகை பொருட்கள்,முட்டை, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் மூலம்தான் மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தால் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் பெட்ரோல் விலை 5 ரூபாய் அளவிற்கு குறைக்காததும், டீசல் விலை குறைப்பு பற்றி கண்டு கொள்ளாததும் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் தருவதாகும். அதேபோல் கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லாதது குடும்பத் தலைவிகளுக்கு கவலை தரக்கூடியது.

மொத்தத்தில் ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்பதுபோல் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் அமைந்துள்ளன என்பதே உண்மை” என்று குறிப்பிட்டனர்.

Views: - 279

0

0