108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

7 August 2020, 4:38 pm
Cm edappadi - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு முன்பை விட தற்போது சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்று சராசரியாக 5 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. ஏற்கனவே, இந்த நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான துறைகளைச் சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். ரேசன் அட்டை தாரர்களுக்கான இலவச ரேசன் பொருட்களை கடந்த 3 மாதங்களாக வழங்கி வந்த தமிழக அரசு, கூடுதல் விலையில்லா அரிசியை நவம்பர் மாதம் வரை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேவேளையில், நலிவடைந்தவர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். விரைவில் இந்த உத்தரவுப்படி, ரூ.5,000 வழங்கும் பணி தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.