என்னது, காங்கிரஸ் தொண்டர்கள் குண்டர்களா…? இறங்கி அடித்த மார்க்சிஸ்ட் : பதுங்கிய தமிழக காங்.,!!

Author: Babu Lakshmanan
11 January 2022, 5:41 pm
Quick Share

நாடு சுதந்திரம் பெற்றது முதலே காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் எலியும், பூனையாகத்தான் இருந்து வந்ததுள்ளன என்பது, வரலாறு கூறும் உண்மை. கேரளாவில்1959-ல் முதன்முறையாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் அரசை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு கலைத்தது.

பலமில்லாத கூட்டணி

ஆனால் 1995க்கு பின் தேசிய அளவில் பாஜகவின் கை ஓங்க ஆரம்பித்ததால், இரு கட்சிகளும் இடத்திற்குத் தகுந்தாற்போல் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தொடங்கின.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு 43 மார்க்சிஸ்ட் எம்பிக்கள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கட்சிகளும் பரம எதிரிகளாக இருந்தன. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தாவையும், பாஜகவையும் எதிர்ப்பதற்காக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வியப்பில் ஆழ்த்தின.

அதைவிட ஆச்சரியம் இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் ஒன்றாக கூட்டணி வைத்து போட்டியிட்ட போதிலும் அதன் பலன் பெரும் பூஜ்யமாக இருந்ததுதான்.

இது சந்தர்ப்பவாத கூட்டணியா?… சாமர்த்திய கூட்டணியா?… என்ற வாதங்கள் அரசியல் அரங்கில் எழுந்தாலும் பாஜகவை எதிர்ப்பதற்காக ஒன்றாக இணைந்து இருக்கிறோம் என்ற பதில்தான் இரு கட்சிகளிடம் இருந்தும் வரும். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளன.

அதேநேரம் பக்கத்து மாநிலமான கேரளாவில் மட்டும் காங்கிரசும், மார்க்சிஸ்ட்டும்
65 ஆண்டுகளுக்கும் மேலாக ஜென்ம விரோதிகள் போல் மோதிக்கொள்வது வாடிக்கையாக உள்ளது.

படுகொலை

இந்த நிலையில்தான், கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீரஜ் ராஜேந்திரன் என்ற அரசு எஞ்ஜினீயரிங் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கேரள மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நிகில் என்ற மாணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த கொடூர சம்பவம் தமிழக அரசியலிலும் சூறாவளியை கிளப்பி விட்டிருக்கிறது.

அதற்கு இதுதான் காரணம்.

தீரஜ் ராஜேந்திரனின் படுகொலையை கண்டிக்கும் விதமாக கேரள மார்க்சிஸ்ட் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் குண்டர்களால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட இந்திய மாணவர் சம்மேளன தோழர் தீரஜ் அவர்களுக்கு வீரவணக்கம்!” என்று பதிவிட்டது.

அதை தமிழக சிபிஎம் கட்சியும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அப்படியே ஒரு வரி பிறழாமல் மொழிபெயர்த்து, வெளியிட்டு உள்ளது. அதில் காங்கிரஸ் குண்டர்கள் என்ற வார்த்தைகளும் இடம் பிடித்திருந்தன.

இதையறிந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கடும் எரிச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களால் வெளிப்படையாக இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

பாஜக விமர்சனம்

இந்த நிலையில் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினர் பதிவிட்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்விட் செய்து சில கேள்விகளையும் எழுப்பி இருந்தார்.

“கேரளாவில் வீர வணக்கம். தமிழகத்தில் வேற வணக்கம்! கேரளாவில் ‘காங்கிரஸ் குண்டர்கள்’! தமிழகத்தில் காங்கிரஸ் நண்பர்கள். இதெல்லாம் ஒரு அரசியல் பிழைப்பா?…
காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கட்சியினரை கொலை செய்கிறார்கள் என்று அழுது புலம்புகிறார்கள். ஆனால், தமிழகத்தில் அவர்களோடு கூட்டணி. மலிவான தரம் தாழ்ந்த அரசியல். கட்சி தொண்டர்களே உங்கள் விலை 10 கோடி?… 2 சீட்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு கட்சியை அடகு வைத்ததோடு, தொண்டர்களையும் பலி கொடுக்கிறீர்களே?” என்று சூடாக கேட்டிருந்தார்.

ஆனால் அவருடைய இந்தக் கேள்விக்கு, தமிழக காங்கிரசோ, மார்க்சிஸ்ட் கட்சியோ எந்த பதிலும் சொல்லவில்லை. பொதுவாக நாட்டில் எந்த ஒரு மூலையில் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக கொந்தளித்து நீண்ட நெடிய அறிக்கை விடும், மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் கூட இது குறித்து மூச்சு காட்டவில்லை.

பாஜக கேட்ட கேள்விக்கு எந்த தமிழக மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களும் சொல்லவில்லை. காங்கிரசோ தங்களை குண்டர்கள் என்று, கேரள மார்க்சிஸ்ட் கட்சியினர் வர்ணித்ததை கண்டுகொள்ளவே இல்லை.

தமிழகத்தில் ஒரே கூட்டணியில் இருப்பதால் இரு கட்சிகளுக்கும் இடையேயும் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாஜக இப்படி செய்து இருக்குமோ என்று காங்கிரசும்,மார்க்சிஸ்ட்டும் கருதுவதுபோல் தெரிகிறது.

என்றபோதிலும் காங்கிரஸ் தொண்டர்களை குண்டர்கள் என சிபிஎம் கூறியிருப்பதை தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவ்வளவாக ரசிக்கவில்லை என்கிறார்கள். அந்தப் பதிவை அவர்கள் இங்கே வெளியிட்டதன் நோக்கம் என்ன? என்ற கேள்வியை எழுப்பி தங்களது அதிருப்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியிடம் அவர்கள் கொண்டு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணியிலும் விரிசல்?

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “கேரள மாநிலத்தில் மட்டுமே தற்போது காங்கிரசும் மார்க்சிஸ்ட்டும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. அதற்கு முக்கிய காரணம், அங்கு வலிமையான போட்டியாளராக பாஜக இல்லை என்பதுதான். அங்கும் பாஜகவால் கடுமையான போட்டியை கொடுக்க முடியும், என்றால் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அண்மைக்காலமாக கேரளாவில் நடக்கும் அரசியல் ரீதியான படுகொலைகள், நாட்டையே உலுக்குவதாக அமைந்துள்ளது. தற்போது ஆளும் மார்க்சிஸ்ட் தனது கட்சியின் தீவிர ஆதரவாளர் ஒருவரை இழந்து இருப்பதால் அதை வெளியுலகிற்கு அறிவித்திருக்கிறது. ஆனால் இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் அதை ஏன் வெளியிட்டனர் என்பதுதான் புரியவில்லை. இது உண்மையில் காங்கிரசை அவமதிக்கும் செயல் போலத்தான் உள்ளது. திமுக கூட்டணியில் ஒன்றாக இருப்பதால் அதை இங்கே அவர்கள் பதிவிட்டு இருக்கவேண்டிய அவசியமும் கிடையாது. அதனால் இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸ் அதிருப்தியடைந்து இருப்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு.

KS Alagiri - Updatenews360

கேரள காங்கிரஸ் குறித்து தாங்கள் போட்ட ட்விட்டர் பதிவை நீக்காமல் அப்படியே வைத்திருப்பதும், காங்கிரஸ் தொண்டர்களை குண்டர்கள் என்று தாங்கள் கூறுவதும் சரி என்றால் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினர் பதில் அளிப்பதுதான் முறையான செயலாக இருக்கும்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் பதிவு செய்த கருத்துக்கு தமிழக காங்கிரசார் ஒருபோதும் பதில் சொல்லவே போவதில்லை. அது வேறு மாநிலத்தில் நடந்த விஷயம் என்று கண்டுகொள்ளாமலே போய்விடுவார்கள். இதை பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது என்றும் நினைப்பார்கள்.

ஏனென்றால் தமிழகத்தைப் பொறுத்தவரை இப்பிரச்சினைக்காக மோதிக்கொண்டால் அதில் திமுக தலையிட்டு சமரசம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். தவிர கூட்டணியிலும் விரிசல் ஏற்படலாம். அது தங்களுக்கு பாதகமாக அமையும் என்று காங்கிரஸ் கருத வாய்ப்பு உண்டு.

எனவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இதை ஒரு பெரிய பிரச்சினையாக கருதி பதில் அளிக்க மாட்டார்கள் என்பதே எதார்த்தம். ஏனென்றால் சில நேரங்களில் அரசியலில் இதெல்லாம் மிக சாதாரண விஷயங்களாகி விடும்” என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 297

0

0