தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா : அரசு நடவடிக்கையால் 29 மாவட்டங்களில் சரிந்தது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை !!

By: Babu
13 October 2020, 7:42 pm
tamilnadu corona - updatenews360
Quick Share

சென்னை: பொருளாதார நடவடிக்கைகளை வேகப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பல தளர்வுகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்திய நிலையிலும், பொதுப் போக்குவரத்து தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆனபோதும், அதிமுக அரசின் தீவிர நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனாத் தொற்று குறைந்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 747ஆகக் குறைந்துள்ளது.

மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கிறது. தளர்வுகள் அதிகரித்தால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்ற அஞ்சப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகளை அரசின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கொரோனாத் தொற்று பரவலும் வெகுவாகக் குறைந்துள்ளது.

Corona checkup - updatenews360

கடந்த செப்டம்பர் மாதம் புதிதாகத் தொற்று கண்டுபிடிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆறாயிரத்துக்கும் குறைவாக ஆனது. தற்போது, புதிதாக வரும் தொற்றின் எண்ணிக்கை ஐந்தாயிரத்துக்கும் கீழே சென்றுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் அரசுப் பேருந்து அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.

தமிழ்நாட்டில் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டது. மாநிலத்திற்குள் பயணியர் ரயில் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது. சென்னைக்குள் இயங்கும் மெட்ரோ ரயில் சேவைகள் ஏழாம் தேதியிலிருந்து இயங்கி வருகிறது. சென்னை புறநகர் ரயில் சேவைகளைத் தவிர அனைத்து போக்குவரத்தும் இயங்கி வருகிறது. வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் பெருமளவில் சென்றுவருகின்றனர். அனைத்து அரசு அலுவலங்களும் தனியார் அலுவலங்களும் வணிக நிறுவனங்களும் கடைகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.

Bus corona- updatenews360

பொதுப்போக்குவரத்தைத் தொடங்கினால் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பயணம் செய்தாலும், சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை என்ற நிலையும் சென்னையில் பல இடங்களில் காணப்பட்டது. மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழ்நாடு அரசு கொரோனாத் தொற்றைக் எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்போகிறது சந்தேகம் தெரிவித்ததோடு மீண்டும் கொரோனாப் பரவல் வாய்ப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தைத் தெரிவித்தனர். ஆனால், அரசு திறமையாக செயல்பட்டு கொரோனாப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மொத்த பரிசோதனையில் நோய்த்தொற்றின் அறிகுறி 6.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் தொடர்ந்து நாள்தோறும் 100-க்கு கீழேயே காணப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44-ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் பதிய கொரோனா அலை தோன்றலாம் என்று சுகாதார நிபுணர்களும் மருத்துவ ஆலோசகர்களும் எச்சரித்த நிலையில், தமிழகத்தில் கொரோனாப் பரவல் குறைந்தே வருகிறது.

coimbatore_airport_corona_updatenews360

தென்மாவட்டங்களில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்ட பரவல் வெகுவாகக் கட்டுக்குள் வந்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் எந்த இடத்திலும் சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத்தொடவில்லை. இதுபோல், காவிரி டெல்டா மாவட்டங்களில் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய பகுதிகளிலும் மொத்த சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழே சரிந்திருக்கிறது.

வட மாவட்டங்களிலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. சென்னையிலும் அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு திருவள்ளூரிலும் கொங்கு மாவட்டங்களிலும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் காரணமாக கொரோனாத் தொற்று விரைவில் கட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 36

0

0