ஒரு கை மட்டுமே ஓசை தராது… சமூகப் போராளிகள் முன்கள பணியாளர்களாக மாறுவார்களா? அரசின் அனைத்து துறைகளும் களமிறங்கினால் கொரோனா காலி!!

18 May 2021, 7:57 pm
corona cover - updatenews360 (2)
Quick Share

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்துள்ளன.
மண்ணின் மக்களுக்கான உரிமைக்குரல் என்று இந்தப் போராட்டங்களை ஜெகத் கஸ்பார், திருமுருகன் காந்தி, சுப. உதயகுமார், பியூஸ் மனுஷ், பாத்திமா பாபு, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தினர் போன்றோர் முன்னெடுத்தனர்.

கடந்தாண்டு மார்ச் மாத இறுதி வாக்கில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்தபோது கூட இந்த சமூக போராளிகளின் போராட்ட குணம் தீவிரமாகவே இருந்தது.

இவர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி,விஜய் சேதுபதி, சித்தார்த், விஜய் போன்றோரும் பின்னே அணிவகுத்து நின்றனர். போராட்டங்களை ஊக்கப்படுத்தும் வகையில் சர்ச்சை கருத்துகளையும் பதிவிட்டனர்.

Corona_UpdateNews360

இந்த நிலையில்தான் தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது

தமிழ் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்காததாலும், அரசுக்கு போதிய ஒத்துழைப்பு தராததாலும் கொரோனா தொற்று மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் புகுந்துவிட்டது.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்த, கடந்த10-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,978. அன்று ஒரே நாளில் 232 பேர் உயிரிழந்தனர். மே 17-ம் தேதி நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 75 ஆகும். ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகபட்சமாக 335 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதை 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபோல் மிக அதிக சோதனை நடத்தினால்தான் நோய்தொற்று பரவலை விரைவாக கட்டுப்படுத்த இயலும் என்று மருத்துவ வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Corona_UpdateNews360

அவர்கள் இப்படி கூறுவதற்கு காரணம், தொற்று ஆரம்ப நிலையில் உள்ளவர்களை எளிதாக அடையாளம் கண்டு, வீடுகளிலேயே தனிமைப்படுத்தி அவர்களை சிகிச்சை எடுத்துக்கொள்ள
வைப்பதுதான். இதனால் இவர்கள் மருத்துவமனைக்கு வராமலேயே டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொண்டு விரைவில் குணமடைந்து விட முடியும்.

இதை செய்யவேண்டுமென்றால், நகர கிராமப்புற பகுதிகள் அனைத்திலுமே நடமாடும் காய்ச்சல் முகாம்களை அதிகமாக வேண்டும் என்பதும் அவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

ஆனால் இதை நடை முறைப் படுத்த அரசு ஊழியர்களை அதிகம் பயன்படுத்த வேண்டி இருக்கும்.
தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும், அதிகாரிகளும்தான் அதிக அளவுக்கு போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

பொதுப்பணித்துறை சமூகநலத்துறை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள ஊழியர்களில் 50 சதவீதம் பேரை கொரோனா பரவல் தடுப்பு பணிக்கு பயன்படுத்தலாம்.

TN Secretariat - Updatenews360

இப்படி அனைவரும் ஒருசேர களமிறங்கினால் கொரோனாவை இரண்டே மாதங்களில் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடித்து விட முடியும்.

இதுகுறித்து, சமூகநல ஆர்வலர்கள் கூறும்போது, “தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் வேகமாக அதிகரித்து வருவதால், மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றுவோருடன் மற்ற இலாகாக்களை சேர்ந்த ஊழியர்களும் கைகோர்க்க வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு மற்ற துறைகளின் உதவி கிடைக்காததால் இந்த இரு இலாகாக்களை சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே தினமும் 14 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரியும் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது.

ஒவ்வொரு தேர்தலுக்கும் 50 சதவீதம் வரை அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் எப்படி தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகிறார்களோ, அதேபோல் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள். எனவே, அவர்களையும் முன் களப்பணியாளர்களாக அரசு அறிவித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால், மீண்டும் போக்குவரத்து தொடங்கும் வரை போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் இந்தப் பணிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த 4 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட சமூக போராளிகள் அமைப்புகள் தமிழக மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்து மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டன. இதற்கு பிரபல திரைப்பட நடிகர்களான சூர்யா, கார்த்தி, விஜய், சித்தார்த், விஜய் சேதுபதி போன்றவர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அவ்வப்போது தனிப்பட்ட முறையிலும், ஆவேசமாக கருத்துகளை பதிவு செய்தனர்.

இதுபோன்ற சமூக செயற்பாட்டு அமைப்புகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தமிழக மக்களுக்காக தங்களின் உயிரை துச்சமென கருதும் ஜெகத் கஸ்பார், உதயகுமார், திருமுருகன் காந்தி, பியூஸ் மனுஷ், பாத்திமா பாபு மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தினர் உள்ளிட்டோர் தாங்களாகவே முன்வந்து அரசிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கொரோனா தடுப்பில் முன்கள பணியாளர்களாக செயல்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது” என்று குறிப்பிபிட்டனர்.

அடுத்த 4 மாதங்களில் கொரோனா 3-வது அலையும் தமிழகத்தை தாக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்காக இப்போதே தயாராவது, தமிழக மக்களுக்கு நன்மை தருவதாகவே இருக்கும்.

Views: - 194

0

0