புதுவையில் ஜெகத்ரட்சகன் எம்.பி. போட்ட குண்டு : தமிழகத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி டமார்!

19 January 2021, 11:56 am
dmk - congress - updatenews360
Quick Share

புதுச்சேரி அரசியலில் நேற்று ஒரு அதிரடி திருப்பம் அரங்கேறியது. அது அகில இந்திய அரசியலையே ஒரு கலக்கு கலக்கி விட்டுள்ளது.

ஆம், அங்கு நடந்த மாநில திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் வெடிகுண்டு போன்ற ஒரு ஆயுதத்தை அதிரடியாக வீசி காங்கிரசை நிலைகுலையச் செய்து இருக்கிறார்.

அவர் பேசும்போது, “புதுச்சேரியில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்தே போட்டியிட்டு 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இல்லை என்றால் இதே மேடையில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று ஆவேசமாக பேசி தேசிய அளவில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

Narayanasamy updatenews360

அவருடைய இந்த பரபரப்பு பேச்சு புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பதை பட்டவர்த்தனமாகவே அறிவித்து விட்டது. இதனால் புதுவை முதல்வர் நாராயணசாமியை விட அதிகம் அதிர்ந்து போனது சோனியாதான். நான்கு நாளைக்கு முன்புதான் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் ராகுல் காந்தியை சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூட்டணியை உறுதி செய்ததாக நம்பப்பட்டது.

இதனால் தமிழக காங்கிரசார் மிகவும் குஷியாக இருந்தனர். ஆனால் அவர்களின் இந்த மகிழ்ச்சி 4 நாட்கள் கூட நீடிக்கவில்லை. அதற்குள் புதுவை காங்கிரசுக்கு திமுக வேட்டு வைத்துவிட்டது.

புதுவையில் நிகழ்ந்த இந்த அரசியல் நிலநடுக்கம் தமிழகத்தையும் குலுக்கி விட்டுள்ளது. திமுக திடீரென்று ஏன் இப்படி அறிவித்தது? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

அரசியலில் திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த மாதிரியான அரசியல் ‘டுவிஸ்ட்’டை இதுவரை யாருமே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

Pondy Kiran Vs Narayanasamy-Updatenews360

கடந்த சில மாதங்களாகவே புதுவையில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரி உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. அந்த மாநில கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே உள்ள உறவுபோல் ஏடாகூடமாகத்தான் இருந்தது.

புதுவையில் காங்கிரஸ் நடத்தும் எந்த கூட்டு போராட்டத்திற்கும் திமுக ஒத்துழைப்பு தரவில்லை. கடந்த வாரம் ‘கவர்னர் கிரண் பெடியே வெளியேறு’ என்று ஒரு உச்சகட்ட போராட்டத்தை முதல்வர் நாராயணசாமி நடத்தினார்.

இதில் கலந்து கொள்ளுமாறு புதுவை திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. 4 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த காத்திருப்பு போராட்டத்தை திமுக எட்டிக் கூட பார்க்காமல் அப்படியே புறக்கணித்துவிட்டது.

இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் புதுவையில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்டி திமுகவை ‘தாஜா’ செய்திருந்தார், நாராயணசாமி. ஆனாலும் திமுக கொஞ்சமும் மசியவில்லை. இது இரு கட்சிகளின் உச்சகட்ட பூசலை அம்பலப்படுத்தும் வகையில் இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாக இது பற்றி புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று உணர்ந்த நாராயணசாமி ராகுல் காந்தியிடம் புகார்ப் பட்டியல் வாசித்துள்ளார்.

Rahul_Gandhi_UpdateNews360

இந்த நிலையில் வரும் 23-ம் தேதி முதல் மூன்று நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் ராகுல் காந்தி இந்த புகார்கள் குறித்து சோனியாவிடம் விரிவாக விவரித்துள்ளார். அதைக் கேட்டு அப்படியே ஷாக் ஆகி விட்டாராம், சோனியா. ஸ்டாலினா இப்படி நடந்து கொண்டார்? என்று நம்ப முடியாமல் இதுபற்றி மகனிடம் மீண்டும் மீண்டும் கேட்டாராம்.

இத்தனைக்கும் புதுவையில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.

சரி, புதுவை காங்கிரசை திமுக இப்படி போட்டு தாக்கியது ஏன்?..இதற்கு விடை தெரியாமல் காங்கிரஸ் விழிபிதுங்கி போய் நிற்கிறது. ஆனால் காங்கிரசுக்கு திமுக அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம், புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே காங்கிரசை கழற்றிவிட மெல்ல மெல்ல திமுக காய்களை நகர்த்தி வந்தது. செல்வாக்கு இழந்த காங்கிரசுக்கு
ஏன் அதிக தொகுதிகளை அள்ளிக் கொடுக்க வேண்டும்?… அவர்களுடன் கூட்டணி ஏன் அமைக்கவேண்டும் என்று திமுக சிந்திக்கத்தொடங்கியது.

குறிப்பாக, பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பின்பு காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தாராள போக்கை கடைபிடிக்க திமுக விரும்பவில்லை.

congress - dmk - updatenews360

இந்த நிலையில்தான் திமுகவிடம் 40 இடங்களை ஒதுக்க கோரி தமிழக காங்கிரஸ் கடும் நெருக்கடி அளித்தது. ஆனால் 20 தொகுதிக்கு மேல் கொடுக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிதும் மனமில்லையாம். இதனால் டெல்லி தலைமை மூலம் தமிழக காங்கிரஸ் தொடர்ந்து நெருக்கடி அளித்து 40 இடங்களை கேட்டுக்கொண்டே இருந்தது.

எனவேதான் காங்கிரஸை கழற்றிவிடும் முடிவுக்கு திமுக வந்தது என்கிறார்கள். காங்கிரசை வெளியே தள்ளினால் அந்த இடத்திற்கு திமுக கூட்டணியில் யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கேதான் திமுகவின் சூட்சமம் வெளிப்பட்டது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள பாமகவை திமுக அணிக்கு கொண்டு வந்தால்தான் ஆட்சியை எளிதில் கைப்பற்ற முடியும் என்கிற முடிவுக்கு திமுக வந்ததுள்ளது.

காங்கிரசுடன் சேர்த்து விசிகவையும் வெளியேற்றினாலும் கூட பரவாயில்லை என்றும் திமுக கருதுகிறது.புதுவையில் ஜெகத்ரட்சகன் எம்.பி. போட்ட குண்டு திமுகவின் மிரட்டல் நாடகமாகக் கூட இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தமிழகத்தில் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டால் புதுவையில் கூட்டணி தொடரும் என்பதை மறைமுகமாக திமுக சொல்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் புதுச்சேரியில் ஆட்சியமைக்க திமுக ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. ஆக இது தமிழக காங்கிரசுக்கு விடுத்த பகிரங்க மிரட்டல் தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் நம்புகிறார்கள்.

DMK - Congress - Updatenews360

ராகுல் காந்தி தமிழகம் வருவதற்கு முன்பு இந்த செய்தியை போட்டு உடைத்தால்தான் தமிழக காங்கிரஸ்தான் தானாக கீழே இறங்கி வரும் என்பது திமுகவின் மனக் கணக்கு. ஒருவேளை, காங்கிரஸ் இறங்கி வந்து விட்டால் பாமகவையும் அரவணைத்து தேர்தலை திமுக சந்திக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் ஆருடம் கூறுகின்றனர். அப்படின்னா மதிமுக, விசிக கதி?… அம்போதான்!…

அதேநேரம், நாடாளுமன்ற எம்பி ஒருவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று பகிரங்கமாக பேசலாமா?… இது தற்கொலை செய்துகொள்ள தூண்டிவிடுவதுபோல் அல்லவா இருக்கிறது?… என்று ஜெகத்ரட்சகனுக்கு எதிராக சமூக ஆர்வலர்களின் கண்டன கணைகள் பாயத் தொடங்கியுள்ளன.

சமூக ஆர்வலர்கள் எழுப்பவதும் நியாயமான கேள்விதான்.

Views: - 0

0

0