8 மாதங்களுக்கு பிறகு வரும் நவம்பரில் பள்ளிகள் திறப்பு…! 10,11 மற்றும் 12 பொதுத்தேர்வு எப்போது தெரியுமா..?
6 August 2020, 1:34 pmசென்னை : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ள பள்ளிகள் வரும் நவம்பர் மாதம் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதேபோல, அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுத்தேர்வு எழுதுபவர்கள் மற்றும் பிற மாணவர்கள் என அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்து விட்ட நிலையில், மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத வரைக்கும், பள்ளி, கல்லூரிகள் திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தற்போது, தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது என்றும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு, அதிகாரப்பூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.