தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.,லில் தேர்தல் : கசிந்தது தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்..!!!

20 January 2021, 4:10 pm
Election_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசின் பதவி காலம் வரும் மே 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சூழலில், மே, ஜூன் மாதங்களில் சி.பி.எஸ்.சி. பள்ளி தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளும் அதே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமியரின் புனித ரம்ஜான், ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது.

எனவே, தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஏப்.,15ம் தேதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒருகட்டமாகவும், மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் 3 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.

Views: - 0

0

0