பகுஜன் சமாஜ், புதிய தமிழகம்… யாருடைய ஓட்டுகளை பிரிக்கும்…? குழப்பத்தில் தவிக்கும் கட்சிகள்…!

Author: Babu Lakshmanan
25 March 2021, 11:45 am
politics - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற 6-தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், நமது கண்களுக்கு தெரிந்து, 5 அணிகள் களத்தில் நிற்பது தெரிகிறது. அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் இதில் சரிநிகர் சமமாக மல்லுக்கட்டுகின்றன. இது தவிர,கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக – விஜயகாந்தின் தேமுதிக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்றும் 234 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்தக் கட்சிகளில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது பல வேட்பாளர்கள் மாயமாய் மறைவதற்கும், கட்சி தாவுவதற்கும் வாய்ப்பு உண்டு.

மக்களால் பரவலாக அறியப்பட்ட இந்த கட்சிகள் தவிர இன்னும் சில கட்சிகளும் வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளன.

Mayawati - updatenews360

குறிப்பாக வடமாநிலங்களில் பிரபலமாகத் திகழும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 60 தொகுதிகளில் களமிறக்கி விட்டுள்ளது. பட்டியலின மக்களின் தேசிய தலைவி என்று வர்ணிக்கப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஏற்கனவே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறது. சென்னையில் இக்கட்சிக்கு சில குறிப்பிட்ட தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. மற்ற 14 மாவட்டங்களில் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஒரு தொகுதிக்கு1000 முதல் 2000 வரை வாக்குகள் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. தேசிய கட்சி என்பதால் கவுரவமான பதவியைப் பெறுவதற்காகவே பகுஜன் சமாஜில் சேர்ந்தவர்களும் உண்டு.

தேர்தல் நேரத்தில் மட்டுமே இந்த கட்சி தமிழ்நாட்டில் இருப்பது நினைவிற்கு வரும். ஒரு காலத்தில் மாயாவதி கூட தமிழகம் வந்து பகுஜன்சமாஜ் கட்சிக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார். என்றாலும்கூட ஒரு சில தொகுதிகள் தவிர, பகுஜன் சமாஜ் பத்தாயிரம் ஓட்டுகளுக்கு மேலாக வாங்கியதில்லை.
பிரதான கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை பிரிக்கும் கட்சியாகத்தான் தமிழகத்தில் இதுவரை பகுஜன்சமாஜ் இருந்து வருகிறது.

அக்கட்சி இந்தத் தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை ஓரளவுக்கு பிரிக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் வட மாவட்டங்களில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கும், மற்ற மண்டலங்களில் அதிமுகவுக்கு கிடைக்கக்கூடிய ஓட்டுகளை சிறிதளவு இழுத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

ஆயிரம் இரண்டாயிரம் ஓட்டுகள் கூட இந்தத் தேர்தலில் முடிவைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்பதால் மாயாவதியின் பகுஜன் சமாஜைக் கண்டு பிரதான கட்சிகள், சற்று கலக்கமடைந்து இருப்பது என்னவோ உண்மைதான்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி தமிழகத்தில் 65 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது. இக்கட்சியும் பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி 1996-ம் ஆண்டு ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இந்த தேர்தலிலும் அவர், அதே தொகுதியில் களம் காண்கிறார்.

இந்த தொகுதியில், உண்மையிலேயே வலுவான நான்கு முனைப்போட்டி நிலவுகிறது என்றே சொல்லவேண்டும்.
புதிய தமிழகம் கட்சிக்கு தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கும் உண்டு. சில தொகுதிகளில் 5 ஆயிரம் ஓட்டுகள் வரை கூட இக்கட்சிக்கு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தனித் தொகுதிகளில் புதிய தமிழகம் தனிக் கவனம் செலுத்துவதால் அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் நிச்சயம் ஒரு அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பு உள்ளது.

நாடார் வகுப்பினருக்காக அரசியல் இயக்கமாக செயல்பட்டு வருவது பனங்காட்டு படை கட்சி. இதன் தலைவர் ஹரி நாடார். நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் இவர், தமிழ்நாட்டில் 44 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். நாடார் வகுப்பு இளைஞர்களிடையே இவருடைய கட்சிக்கு ஆதரவு தென்படுகிறது. ஆலங்குளம் தொகுதியில் கூட, ஹரி நாடார் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இணையாக
தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவருடைய கட்சி வேட்பாளர்களும் அதிமுக, திமுக தரப்பு வாக்குகளை சிதற அடிப்பார் என்றும் கணிக்கப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த கிரானைட் கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம். விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரியான இவர் தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சி ஆகியவற்றின் சார்பில்
35 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார்.
நடுநிலை மற்றும் முதல்முறை வாக்காளர்களிடம் இவரது வேட்பாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

பட்டியலின சமூகத்திற்காக குரல் கொடுக்கும் இன்னொரு அரசியல் இயக்கமான இந்திய குடியரசு கட்சி வடமாவட்டங்களில்16 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இக்கட்சிக்கு செங்கல்பட்டு வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் சில தொகுதிகளில் 2000 முதல் ஐந்தாயிரம் ஓட்டுகள் வரை உள்ளது.

இதுதவிர மை இந்தியா பார்ட்டி என்ற ஒரு புதிய கட்சியும் தனது பிரச்சார உத்தியின் மூலம் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இந்த இந்தக் கட்சிகள் பெறும் ஓட்டு அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளின் போதுதான் தெரியவரும்.

Views: - 76

0

0