அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு விவகாரம் : ஆளுநரின் முடிவு தெரியும் வரையில் கலந்தாய்வு கிடையாது – தமிழக அரசு..!

Author: Babu
16 October 2020, 12:46 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

மதுரை : மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், ஆளுநரின் முடிவு வரும் வரையில் கலந்தாய்வை நடத்தப்போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதனடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

HC Madurai 01 updatenews360

இதனிடையே, தமிழக அரசு அறிவித்துள்ளபடி, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு நடப்பாண்டு முதலே அமலுக்கு வருமா..? என்ற கேள்வி எழுந்து வந்தது. இது தொடர்பாக வழக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதா, ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநரின் செயலர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 16ம் தேதி பதிலளிக்க வேண்டும் ஆளுநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சட்டமசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது, நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது :- மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைவாக முடிவெடுக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உள்ஒதுக்கீட்டை ஆதரித்துள்ளனர். உணவில்லாத, சமூக ரீதியாக பின்தங்கிய ஏழைகளே பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர்.

முடிவெடுக்க ஒருமாத காலம் போதாதா..? நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின் முடிவெடுத்து என்ன பலன். உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும். கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாது என கூறி நீதிபதி கண் கலங்கினார்.

மேலும், நீட் தேர்வு முடிவுகளுக்கு பிறகு, எப்போது கலந்தாய்வு என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான மருத்துவக் கலந்தாய்வை தற்போது அறிவிக்கப் போவதில்லை. உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வரும் வரையில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்போவதில்லை,” எனக் கூறியுள்ளது.

Views: - 45

0

0