1 லட்சம் கொரோனா உயிரிழப்பை தமிழக அரசு மறைத்ததா…? டாக்டர் ராமதாஸ் கிளப்பிய திடீர் சூறாவளி!!

18 June 2021, 3:00 pm
Corona death - pmk- updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி பலியாவோர் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் திடீரென உச்சம் பெற்று தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

மயானங்கள் ஹவுஸ்புல் :

மே இரண்டு மற்றும் மூன்றாவது வாரங்களில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நூற்றுக்கணக்கானோர் கொத்து கொத்தாக உயிரிழக்கவும் நேரிட்டது. மருத்துவமனைகளுக்குள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைந்த நிலையிலேயே படுக்கைகள் கிடைக்காமல் உயிரிழந்தவர்களும் ஏராளம். கொரோனாவுக்கு வீடுகளில் சிகிச்சை எடுத்து மாண்டவர்களும் உண்டு.

அந்த 2 வாரமும் மாவட்ட தலைநகரங்களின் அனைத்து மயானங்களிலும் 24 மணி நேரமும் சடலங்கள் எரியூட்டப்பட்ட துயர காட்சிகளையும் காணமுடிந்தது.

எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

இந்த நிலையில்தான், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார். “மாநிலம் முழுவதும் உள்ள மயானங்களில் சடலங்கள் எந்நேரமும் எரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஊடகங்களில் வரும் செய்தியோ, கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதுபோல உள்ளன. எனவே தமிழக அரசு ஒளிவுமறைவின்றி மறைக்காமல் கொரோனாவால் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிவிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.

eps - updatenews360

இதே குற்றச்சாட்டை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், தமிழக பாஜக தலைவர் முருகனும் வைத்தனர்.

ஆனால், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இதை மறுத்ததுடன் ஒளிவுமறைவின்றி கொரோனாவுக்கு பாலியனவர்கள் பற்றி தினமும் தகவல் வெளியிட்டு வருகிறோம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இதேபோல் இந்த ஆண்டு மே மாதம் மட்டுமே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 840 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாக ஒரு தகவல் வேகமாக பரவியது. ஆனால் மருத்துவமனை அதிகாரிகளோ 24 பேர்தான் பலியானதாக மறுத்தனர்.

எனினும், மே மாதம் கொரோனாவால் அன்றாடம் பாதிக்கப்படோர் எண்ணிக்கை
30 ஆயிரத்துக்கு மேலாக இருந்ததாலும், உருமாறிய கொரோனா வீரியம் மிக்கதாக இருந்ததாலும், கடுமையான மூச்சு திணறலுக்கு உள்ளாகி ஆறேழு நாட்களிலேயே உயிரை விட்டோர் அதிகம் என்பதால், பலி எண்ணிக்கை கூடுதலாக இருக்க வாய்ப்பு உண்டு என்று குற்றச்சாட்டு திரும்பவும் எழுந்துள்ளது.

பகீர் குற்றச்சாட்டு

இப்பிரச்சினையை டாக்டர் ராமதாஸ் தற்போது எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை படித்தால் பகீர் என்கிறது.

அவருடைய அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக அறப்போர் தொண்டு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமக்கள் ஆய்வில் கொரோனா உயிரிழப்புகள் குறித்து அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தவறானவை; திரிக்கப்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர், வேலூர் ஆகிய 6 மாநகரங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 11,699 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, இதே காலகட்டத்தில் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 7262-ம், 2020-ஆண்டு உயிரிழப்புகளை விட 8438-ம் அதிகம். அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட
6 மருத்துவமனைகளில் மட்டும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7262 முதல் 8438 வரை இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட
6 மருத்துவமனைகளில் கடந்த 2 மாதங்களில் 863 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ramadoss updatenews360

இதே அளவீட்டை தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருத்திப் பார்த்தால் கொரோனாவால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தாக்குதலுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 126 பேர் வரை உயிரிழந்திருக்கவேண்டும். ஆனால் 12,870 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 256 சாவுகள் மறைக்கப்பட்டு இருக்கக்கூடும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த புள்ளிவிவரம் யூகத்தின் அடிப்படையிலானதுதான். இது துல்லியமாக இருக்க வேண்டியதில்லைதான். அதேநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டது உண்மை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

இந்தத் தவறை செய்துவிட்டு, ஐ.சி.எம்.ஆர் விதிகளை காரணம் காட்டி பொறுப்பை தமிழக அரசு தட்டிக் கழிக்கக் கூடாது. கொரோனா உயிரிழப்புகளை உறுதி செய்வதற்கான இந்த அளவீட்டை அரசு ஏற்கவேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதி உதவிகளை தமிழக அரசும், மத்திய அரசும் அறிவித்துள்ளன. கொரோனா தாக்குதலால் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய உதவிகளைப் பெற கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும், அதற்கான உண்மையான காரணங்களுடன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். எனவே, கடந்த ஏப்ரல், மாதங்களில் உயிரிழந்த அனைவரின் இறப்புக்கான காரணங்களையும் ஆய்வு செய்து, கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு மருத்துவச் சான்றை வழங்க வேண்டும்; அதற்காக வல்லுனர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை தமிழக அரசு அமைக்கவேண்டும். கொரோனா உயிரிழப்பு குறித்த அரசின் உதவிகளைப் பெறுவதற்கு அச்சான்றிதழை ஆதாரமாகக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் கடமை

உண்மையிலேயே, இரண்டே மாதங்களில் கொரோனாவால் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்க வாய்ப்பு உண்டா? இதை மறைக்க முடியுமா? என்பது பற்றி சுகாதாரத்துறை முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மருத்துவமனையில் நிகழும் மரணங்களை தற்போது 5 விதமாக கூறலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போர் முதல் வகை. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு காரணமாக, இறப்போர் இரண்டாவது பிரிவினர். விபத்து காரணமாக சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழப்போர் மூன்றாவது ரகம். தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறப்போர் நான்காவது பிரிவினர் ஆவர். மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழப்போர் கடைசி வகை.

Corona_Death_UpdateNews360

இதுபோன்ற மரணங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் அன்றாடம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதை வைத்து கொரோனாவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என்று கணிப்பது தவறு. நிச்சயம் அந்த அளவிற்கு மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. அதேநேரம் கிராமங்களில் வீடுகளிலேயே கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு உயிரை இழந்தோர் அரசின் கொரோனா மரணப் பட்டியலில் சேர்க்கப்படுவதும் கடினம்.

மே இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக இருந்ததால், அந்த நேரத்தில் உயிரிழப்புகள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம். கடந்தாண்டு ஜூன் மாதம் இதுபோல்தான் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டு போயின. பின்னர் அது முறைப்படி கணக்கிடப்பட்டு மாநகராட்சியின் பட்டியலில் சேர்க்கப்பட்டது

TN Secretariat- Updatenews360

இத்தனைக்கும் அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் அன்றாட எண்ணிக்கை அதிகபட்சமாக 4 ஆயிரத்திற்குள்தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் மிக அதிகபட்சமாக 36 ஆயிரமாக இருந்துள்ளது. எனவே அதே விகிதாச்சாரத்தில் கொரோனா உயிரிழப்புகள் நேர்ந்து இருக்க வாய்ப்பு உண்டு. அந்தக் கணக்கின்படி பார்த்தால் மாநிலம் முழுவதும் கூடுதலாக 4 ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம். மேலும் கொரோனாவின் இரண்டாம் அலை வீரியம் மிக்கதாக இருக்கிறது. இந்த வகையில் இன்னொரு 4 ஆயிரம் மரணங்கள் அதிகம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு. தோராயமான கணக்கு என்று வைத்துக்கொண்டாலும் கூட மிக அதிகபட்சமாக 10 ஆயிரம் கொரோனா இறப்புகள் வரை பதிவாகாமல் போயிருக்கலாம்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரணங்களை மறைப்பது என்பதெல்லாம் இக்காலத்தில் சாத்தியமில்லை. எனினும் எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில் அளிக்கவேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. ஏனென்றால் திமுக அரசு மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது” என்று அந்த முன்னாள் அதிகாரி குறிப்பிட்டார்.

Views: - 181

0

0