ஒன்றிய அரசு விவகாரத்தை தொடர்ந்து ஜெய்ஹிந்த் நீக்கம் : அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திமுக!!

Author: Babu Lakshmanan
25 June 2021, 10:03 pm
dmk - updatenews360
Quick Share

நெருக்கடி தரும் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இரு நாட்களுக்கு முன்பு டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,”ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்கள் தேசத்தை இந்தியப் பேரரசு என அடையாளப் படுத்தாமல் ஒன்றிய அரசு என்று இழிவுபடுத்துவதால் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் பெரும் ஆதங்கத்திற்கு ஆட்பட்டு உள்ள நிலையில் ஒன்றிய அரசு என்ற சொற்றொடர் ஆளுநர் உரையில் தமிழகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. இனி சட்டப்பேரவை பதிவேடுகளிலும் இடம் பெற்றுவிடும்.

Krishnasamy - Updatenews360

ஆட்சேபனைக்குரிய இந்த தமிழ் வார்த்தை ஆளுநரின் கவனத்திற்கு வரவில்லையா?அல்லது தற்காலிகமாக கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று தெரியவில்லை” என அவர் கூறியிருந்தார்.

பேரவையில் ஒலித்த ஒன்றியம் :

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அன்மையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி ஒன்றையும் எழுப்பினார். “ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தற்போது தமிழகஅரசு பயன்படுத்துவது ஏன்? ஆங்கிலத்தில், ‘டேக் யுவர் சீட்’ என்று கூறுவதால் அதற்காக சேரை தூக்கிக்கொண்டு நிற்க முடியாது. எந்த இடத்தில், எப்படி பொருள் கொள்ளவேண்டும் என்பது தெரிய வேண்டும்.

தற்போது எதற்காக ஒன்றிய அரசு என்று சொல்லப்படுகிறது எனத் தெரியவில்லை. சொல்லில் குற்றமில்லை. ஆனால் பொருளில் குற்றம் இருக்கிறது. ஒன்றிய அரசு என்று எந்த எண்ணத்தோடு, எந்த உள்நோக்கத்தோடு சொல்லப்படுகிறது என்பதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

stalin assembly - updatenews360

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல. மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதால் அதனுடைய அர்த்தம். இன்னும் சிலர் அண்ணாவும், கருணாநிதியும் சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாக குறிப்பிட்டு அதை விமர்சனம் செய்கிறார்கள். 1957-ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையிலேயே இந்திய யூனியன் என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனவே ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம்” என்று பதிலளித்தார்.

ஆளுநருக்கு கடிதம்

எனினும் இந்த ஒன்றிய அரசு சர்ச்சை இன்னும் ஓய்ந்ததாக தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த பின்பு டாக்டர் கிருஷ்ணசாமி ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “இதற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மத்திய அரசை, ‘இந்திய மத்திய அரசு’, இந்திய மைய அரசு’, ‘இந்திய நடுவண் அரசு’ என்றே தமிழில் அழைத்தார்கள். அண்மைக் காலத்தில் பதவியில் இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் வேறு பதங்களில் அழைத்ததில்லை.

மே 7-ந்தேதி முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கிறார். தமிழில் ஒன்றிய என்பது பஞ்சாயத்து அளவில் அழைக்கப்படும் பெயராகும். அரசியலமைப்பில் கூறப்பட்டதை மாநிலங்களின் ஒன்றியம் என்று வேண்டுமென்றே சிதைப்பதற்கு இந்த வார்த்தையை திமுக பயன்படுத்துகிறது. இதனால் இந்த வார்த்தை மத்திய அரசை இழிவுபடுத்துகிறது. அவர்கள் இந்தியா அல்லது பாரதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த தயாராக இல்லை. ஆனால், அவர்கள் மாநிலத்தை தமிழ்நாடு அரசு என்று அழைக்கிறார்கள் .

TN Secretariat- Updatenews360

கடந்த 21-ம் தேதி தாங்கள் சட்டப்பேரவையில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசினீர்கள். ஆளுநரின் தமிழ்ப் பேச்சில், ‘ஒன்றிய அரசு’ என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தவில்லை. இதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளார்கள். தமிழ் உரையை நான் படித்தபோது ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையில் இந்திய தேசம் அல்லது இந்திய அரசாங்கத்திற்கு பதிலாக  ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த அரசின் தலைவரான தாங்கள், ஸ்டாலினும் அவரது சகாக்களும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த வார்த்தை இந்திய இறையாண்மை மீதான பிடியைக் குறைத்து, தமிழ் மக்களிடையே இந்திய தேசத்திற்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்திவிடும். ஏனென்றால் பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவை இந்த ஒற்றை வார்த்தையுடன்தான் தொடங்குகிறது

ஒன்றிய அரசு என்னும் பயங்கரத்திற்கு, மாநிலத்தின் தலைவராகிய தாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சரியான தருணம் இது. இல்லையென்றால் நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த வார்த்தை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இது இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையும்.

முதலமைச்சர் ஸ்டாலினையும் அவருடைய அமைச்சர்களையும் நீங்கள் நேரில் வரவழைத்து, அவர்களிடம் ஒன்றிய அரசு என்பது போன்ற ஆபத்தான வார்த்தைகளை இனி பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கவேண்டும்” என்று அந்த கடிதத்தில் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்ஹிந்த் நீக்கம்

இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு நாளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய கொங்குநாடு மக்கள் கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன், “சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே நன்றி, வணக்கம், ஜெய் ஹிந்த்! என்று போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப் படுகிறேன். இந்த வார்த்தையை ஆளுநர் உரையில் இடம் பெறாமல் தவிர்த்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

national flag - updatenews360

ஜெய் ஹிந்த் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வெல்க இந்தியா! என அர்த்தம். இந்த முழக்கத்தை முதன் முதலில் 1907-ல் எழுப்பியவர் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திலும் பணியாற்றிய பிரபலத் தலைவரும் ஆவார்.

சுதந்திர இந்தியாவில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியன்று முதன்முதலாக தபால்களின் மீது குத்தப்பட்ட முத்திரை ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்துடன்தான் இருந்தது, என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதனால் ஜெய்ஹிந்த் நீக்கம் பற்றி ஈஸ்வரன் எம்எல்ஏ பெருமையுடன் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தரம் தாழ்ந்த அரசியல்

மாநில பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை இதுபற்றி கூறும்போது, “தமிழகத்தில் அரசியல் பேச்சுகள் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துபோய்விட்டது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

Bjp Annamalai - Updatenews360

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர் ஒருவர் எழுப்பிய தேசிய முழக்கத்தை எம்எல்ஏ ஈஸ்வரன் கேலி செய்வதுபோல் பேசியிருப்பது, சமூக வலைத்தளங்களில் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும்போது, “ஈஸ்வரன் கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்ந்தவர் என்றாலும், அவர் திருச்செங்கோடு தொகுதியில் திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதனால் அவர் திமுக எம்எல்ஏவாகவே கருதப்படுவார். அவர், தேசபக்தி தொடர்பான ஒரு முழக்கத்தை கேலி செய்வதுபோல் பேசியிருப்பது திமுகவுக்குத்தான் நெருக்கடியை உருவாக்கும். ஒன்றிய அரசு விவகாரத்தில் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு இதுதான் சரியான தமிழ் அர்த்தம் என்று கூற வாய்ப்புள்ளது. ஆனால் ஜெய்ஹிந்த் விஷயத்தில் அப்படி சாக்கு போக்கு எதுவும் கூறுவதற்கு இடமில்லை” என்று குறிப்பிட்டனர்.

Views: - 435

0

0