கொட்டோ கொட்டுனு கொட்டப்போகும் மிக அதி கனமழை : 24, 25ம் தேதிகளில் கொஞ்சம் கவனமாக இருங்க மக்களே…!!!

21 November 2020, 2:24 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் 23ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, இன்றே உருவாகியுள்ளது. சென்னையிலிருந்து 1200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒரே சமயத்தில் அரபிக் கடலிலும் வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மூன்று பாதைகளில் இந்த தாழ்வு மண்டலம் பிரிந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளதால், காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த இடத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வரும் 24, 25ம் தேதிகளில் தமிழகத்தில் மிக அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் 25ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 0

0

0