இது போதாதா..? தமிழகத்தில் தலைவிரித்தாடும் ரவுடிசம்.. வீடியோவை போட்டு தமிழக அரசை தாக்கிய எடப்பாடி பழனிசாமி..!!!

Author: Babu Lakshmanan
25 November 2021, 4:05 pm
EPS Condemned - Updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதற்கு, உதாரணமாக ஒரு வீடியோவை பதிவிட்டு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அண்மையில், திருச்சி நவல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டி அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறார்கள் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல, கரூர் அருகே வாகன தணிக்கையில் இருந்த போலீசார் ஒருவர், வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மதுரை அருகே சொகுசு காருக்கு வழிவிடாத அரசுப் பேருந்து ஓட்டுநரின் தாக்கி, கையில் ரத்தம் வழிய வழிய சொட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இதன்மூலம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வந்தனர். ஆனால், ஆளும் கட்சியான திமுகவோ, ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை குறை சொல்வதை ஏற்க முடியாது என்று விளக்கமளித்து வந்தது.

இந்த சூழலில், சென்னையில் இளைஞர்களை சிலரை மடக்கி பிடித்திருந்த போலீசார், ஒரு இளைஞரின் இடுப்பில் இருந்து பட்டா கத்தி ஒன்றை இலாவகமாக எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோவை பதிவிட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக-வினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல், போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளன, அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Oppostion Party Leader EPS - Updatenews360

ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு. காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை விடியா அரசு நிலைநாட்ட வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 185

0

0

Leave a Reply