கூட்டணிக் கட்சிகளை சமாளிக்க மீண்டும் தமிழக சட்ட மேலவை…? திமுகவுக்கு விசிக கொடுத்த புது ‘அட்வைஸ்’!!

Author: Babu Lakshmanan
9 August 2021, 6:01 pm
dmk - vck - updatenews360
Quick Share

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, தமிழகத்தில் மீண்டும் சட்டப்பேரவை அமைக்கப்படும் என்பது.

சட்டமேலவையின் வரலாறு

சென்னை மாகாணம் தன்னாட்சி அதிகாரம் பெற்றபோது 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சட்டமேலவை உருவாக்கப்பட்டது. அப்போது அதன் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 54.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் பதவி இழந்து புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்கும் வகையில் அப்போது நடைமுறை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்ற பின்பு 1952-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தமிழக சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிக்கப்பட்டது.

TN Assembly- updatenews360

அதன்படி உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மூலம் 24 பேரும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் 24 பேரும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று மறு வரையறை செய்யப்பட்டது. இதுதவிர பட்டதாரி உறுப்பினர்களுக்கு 6 பதவிகளும், ஆசிரியர்கள் பிரதிநிதிகளுக்கு 6 பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 12 உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உண்டு. இப்படி மொத்தம் 72 பேர், தமிழக சட்ட மேலவையில் உறுப்பினர்களாக இருந்தனர். அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 78. பதவி காலம் 6 ஆண்டுகள்.

மேலவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ராஜாஜியும்… அண்ணாவும்

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் 1986-ல் தமிழக சட்ட மேலவை கலைக்கப்பட்டது. தேவையற்ற நிர்வாக செலவு மற்றும் புகழ்ச்சி மேடையாக திகழ்ந்ததால் அதை விரும்பாத எம்ஜிஆர் சட்டமேலவையை அதே ஆண்டு நவம்பர் மாதம் கலைத்தார், என்பார்கள். 1952-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தேர்தல் நடந்தபோது நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களையும், மாகாணங்களையும் காங்கிரஸ் எளிதில் கைப்பற்றி விட்டது.

ஆனால் சென்னை மாகாணத்தில் மட்டும் வெற்றி பெற இயலவில்லை. எனினும் அதிக அளவில் வெற்றி பெற்றிருந்த சுயேச்சைகளையும், சிறுசிறு கட்சிகளையும் ஒன்று சேர்த்து காங்கிரசின் மூத்த தலைவர் ராஜாஜி முதலமைச்சர் ஆகிவிட்டார்.

அவர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாமல், “கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்து விட்டார்” என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கு காரணம், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், அவர் சட்டமேலவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதுதான். அப்போது திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சியும் இதை ஏளனம் செய்தன.

இதுபோன்ற பிரச்சனையை 1967-ல் திமுகவும் சந்திக்க நேர்ந்தது. அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 138 தொகுதிகளில் வென்று திமுக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருந்த அண்ணா முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகே சட்டமேலவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதை காமராஜர் கேலியாக விமர்சிக்கவும் செய்தார்.
“ராஜாஜி, குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆகிவிட்டார் என்று சொன்னீர்களே, இப்போது நீங்கள் மட்டும் எப்படி வந்தீர்கள்?…” என்று கேள்விக்கணை தொடுத்தார்.

திமுகவுக்கு பிடித்த சட்டமேலவை

எம்ஜிஆரின் மறைவுக்கு பின்பு 1989-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதும் சட்டமேலவை அமைக்க முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியும் வைக்கப்பட்டது. டெல்லி மேல் சபையில் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. ஆனால் நாடாளுமன்ற மக்களவையின் ஒப்புதலை பெற முடியவில்லை.

இதேபோல் 1996-ம் ஆண்டும் தமிழகத்தில் சட்டமேலவையை மீண்டும் உருவாக்க அப்போதைய திமுக அரசு முயற்சி மேற்கொண்டது. எனினும் மத்திய அரசிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

2001-ல் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அதிமுக சட்ட மேலவை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது. 2006-ல் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் சட்ட மேலவையை கொண்டுவர தீவிர முயற்சியில் இறங்கியது. அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தாலும்கூட திமுகவின் கோரிக்கையை அது ஏற்கவில்லை.

இத்தனைக்கும் திமுகவின் ஆதரவுடன்தான் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. 2011,2016 தேர்தல்களில் அதிமுக அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் தமிழகத்தில் மேலவை அமைப்பது பற்றி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிந்திக்கவே இல்லை.

இந்த நிலையில்தான் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு மீண்டும் சட்ட மேலவையை அமைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் மத்தியில் பாஜக அரசு இருப்பதால் திமுகவின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

விசிக ஆர்வம்

ஏனென்றால் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது சட்டமேலவை இல்லை. ஆந்திரா, பீகார், கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகியவற்றில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது. அதாவது நாட்டில் உள்ள 29 மாநிலங்களில், 6-ல் மட்டுமே சட்டமேலவை இருக்கின்றன.

அதேநேரம் திமுக போலவே அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்றவையும் சட்ட மேலவை அமைக்க ஆதரவு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது.

VCK ravikumar- updatenews360

இதுபற்றி அக்கட்சியின் நாடாளுமன்ற மக்களவை எம்பி ரவிக்குமார் கூறும்போது, “நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் பட்டியலின சமூக மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் இத்தகைய இட ஒதுக்கீடு சட்ட மேலவையிலோ, டெல்லி மேல்-சபையிலோ கிடையாது. தற்போது, தமிழகத்தில் மீண்டும் மேலவை கொண்டுவரப்பட்டால் அதில் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டியது மிக மிக அவசியம்” என்று முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்படி விசிக திடீரென கூறுவதற்கு மிகப்பெரியதொரு பின்னணி உண்டு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். “இரு நாட்களுக்கு முன்பு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசியபோது, 9 மாவட்ட ஊராட்சி தேர்தல் மற்றும் நகராட்சி தேர்தல்களில் விசிகவுக்கு கணிசமான இடங்களை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு ஸ்டாலின் பிடி கொடுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்க மாவட்ட திமுக செயலாளர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்தே சட்டமேலவை அமைக்கும்போதாவது தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும்படி திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால்தான் விசிக எம்பி ரவிக்குமார் திடீரென சட்டமேலவை தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு, அதில் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்காமல் போனால்கூட பரவாயில்லை. சட்ட மேலவையில் உரிய பிரதிநிதித்துவம் கொடுங்கள் என்பதுதான்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 575

0

0