மீண்டும் தமிழகம் நம்பர் 1… யார் காரணம்..? பெருமை கொள்ளும் ஸ்டாலின்… மார்தட்டிய எஸ்பி வேலுமணி…!!

Author: Babu Lakshmanan
29 November 2021, 2:17 pm
tn 1- updatenews360
Quick Share

சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை பிரபல செய்தி ஊடகமான இந்தியா டுடே நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இமச்சாலப் பிரதேசம் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா டுடே நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது :- இந்தியா டுடே நிறுவனத்தின் இயக்குநர் ராஜ்‌ செங்கப்பா அவர்கள்‌ எனக்கு ஒரு கடிதம்‌ அனுப்பி இருந்தார்கள்‌. அந்த கடிதத்தில்‌ இந்தியா முழுவதும்‌ உள்ள அனைத்து மாநிலங்களின்‌ செயல்பாட்டைக்‌ கணித்ததாகவும்‌, அதில்‌ ஒட்டுமொத்த செயல்திறனிலும்‌ சிறந்து விளங்கும்‌ பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும்‌ தெரிவித்து இருந்தார்‌. இதைப்‌ படித்தபோது நான்‌ அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இது தனிப்பட்ட எனக்குக்‌ கிடைத்த பெருமை அல்ல; ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்குக்‌ கிடைத்த பெருமை ஆகும்‌. தமிழ்நாட்டுக்குக்‌ கிடைத்த சிறப்பு ஆகும்‌! இந்தியா டுடே வழங்கிய இந்த விருதை, தமிழ்நாட்டு மக்கள்‌ அனைவருக்கும்‌ சொந்தமாக்க விரும்புகிறேன்‌. கொரோனா காலத்திய செயல்பாடுகளால் என்னை இந்தியாவின்‌ தலைசிறந்த முதலமைச்சர்‌ – நம்பர்‌ 1 முதலமைச்சர்‌ என்றும்‌ கருத்துக்கணிப்புகளை வெளியிட்டார்கள்‌. அப்போது, நான்‌ நம்பர்‌ 1 என்று சொல்வதை விட, தமிழ்நாடு நம்பர்‌ 1 ஆக வேண்டும்‌, அதுதான்‌ என்னுடைய விருப்பம்‌ என்று நான்‌ சொன்னேன்‌.

அந்த அடிப்படையில்‌ பார்த்தால்‌ இந்தியா டுடே இதழானது தமிழ்நாடு நம்பர்‌ ஒன்‌ என்று அறிவித்துள்ளது மிகமிக மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது. நம்பர்‌ 1 என்று சொன்னபிறகு தான்‌ எனக்கு பயமே வருகிறது. இதனைத்‌ தக்க வைப்பதற்காக முன்பை விடக்‌ கூடுதலாக நான்‌ உழைத்தாக வேண்டும்‌ என்று நான்‌ உறுதி எடுத்துக்‌ கொள்கிறேன்‌, எனக் கூறியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பதில் கடிதம் வெளியான சில நிமிடங்களிலேயே, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “இந்தியா டுடே நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து 4-வது ஆண்டாக, “ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்” பிடித்து சாதனை படைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மாவின் ஆசி பெற்ற கழக பொற்கால ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொலைநோக்கு மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வாயிலாக தமிழ்நாடு தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

புயல், மழை வெள்ளம், கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பு காலங்களில் மக்கள் நலன் காத்த கழக அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலனையே முதல் குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட அம்மாவின் ஆசி பெற்ற கழக ஆட்சிக்கு தமிழக மக்கள் கொடுத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் இது என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், தமிழகம் தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடம் பிடிக்க யார் காரணம்..? என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது :- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோன பாதிப்பை தொடர்ந்து கனமழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை, குமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. அப்போது, கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான், தற்போது சென்னையில் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறினர். ஆட்சிக்கு வந்த இந்த குறுகிய காலத்தில் ஆளும் அரசால் தடபுடலாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, இது கடந்த ஆட்சியாளர்களின் தவறாகத்தான் இருக்கும் என்று சொல்லலாம்.

இந்த நிலையில், சிறந்த பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப் பெருமை யாருக்கு என்பதில்தான் தற்போது கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் யார்..? என்பதை அறிந்து கொள்ள திமுகவின் கடந்த 200 நாட்கள் ஆட்சியின் செயல்பாடுகளையே நாம் எடுத்துக் கொண்டால் விடை தெரிந்து விடும்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது கொரோனா பாதிப்பு, அதிமுக ஆட்சியில் இருந்ததை விட 10 சதவீதமாகத்தான் இருந்துள்ளது. அதேவேளையில், கொரோனா தடுப்பூசி என்ற கேடயமும் நோய் கட்டுப்பாட்டிற்கு சிறப்பானதாக இருந்துள்ளது. மேலும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதா..? என்றால், அதுவுமில்லை. ஒரு சில வாக்குறுதிகளே நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா, வெள்ள பாதிப்புகளின் போது, பிற முதலமைச்சர்களைக் காட்டிலும், ஸ்டாலின் சற்று கூடுதலாகவே கவனம் எடுத்து களப்பணியாற்றினார். ஆனால், முழுக்க முழுக்க இதுவே காரணம் என்று சொல்லி விட முடியாது.

கடந்த 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போதும், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது, அதன் நீட்சியாகவே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதுதான் உண்மை. காரணம், கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள், நடவடிக்கைகள் தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, தமிழகம் முதலிடத்தை பிடித்ததற்கு அதிமுகவிற்கும் பங்கு உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும், எனக் கூறினர்.

இதனிடையே, பிரச்சனை என்று வந்தால் முந்தைய அரசின் மீது பழி சுமத்தி விட்டு, பாராட்டு என்று வரும் போது மட்டும், அதனை தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொள்வாரா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்கட்சியினர் சமூக வலைதளங்கள் மூலமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 270

0

0