அண்ணாமலையின் வீடியோ ஆதாரம்…! சிக்கலில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…? பதவி ராஜினாமா செய்வாரா…?

Author: Babu Lakshmanan
21 October 2021, 5:01 pm
Senthil balaji - updatenews360
Quick Share

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 6 மாதங்களில், முதல்முறையாக ஊழல் குற்றச்சாட்டை எதிர் கொண்டுள்ளது. ஆளும் திமுக அரசு மீது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மெகா ஊழல்

இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு, உற்பத்தி விலையை விட 4 மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று கூறியிருந்தார்.

annamalai - Updatenews360

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அமைச்சர் விடுத்த கெடு

அண்ணாமலையின் புகார் தொடர்பாக விளக்கம் அளித்த மின்துறை அமைச்சர், செந்தில் பாலாஜி, “நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்தடை ஏற்படும் சூழல் உள்ளது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை தடையில்லா மின்சாரத்தை வழங்க மின் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆட்சியில் 1,800 மெகா வாட் ஆக இருந்த சொந்த மின் உற்பத்தி, தற்போது 3,500 மெகா வாட் ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாள் சராசரி தேவையானது 320 மில்லியன் யூனிட் ஆகும்.

கடந்த செப்.24 முதல் அக்.19-ம் தேதி வரை நிலக்கரி பற்றாக்குறையால், சந்தையில் 397 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்தோம். இந்தக் காலத்தில் 6,200 மில்லியன் யூனிட் விநியோகித்துள்ளோம். இந்த 397 மில்லியன் யூனிட்டில் 65 மில்லியன் யூனிட் மட்டுமே ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது.

senthil balaji - updatenews360

இது பீக் ஹவரில் நம் தேவைகளைப் பூர்த்திசெய்ய மட்டும்தான். இதேபோல் குஜராத்தில் 131 மில்லியன் யூனிட்களும், ஆந்திராவில் 52 மில்லியன் யூனிட்களும் ரூ.20-க்கு வாங்குகின்றனர். பிற மாநிலங்களை ஒப்பிடும் போது நம்முடையது மிகவும் குறைவுதான். இதை அறியாமல் திமுக ஆட்சி மீது அவதூறு பரப்பும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இதை ஏற்க முடியாது. மின் வாரியத்தில் முறைகேடு குறித்த ஆதாரம் இருந்தால் அவர் 24 மணிநேரத்தில் வெளியிடவேண்டும். இல்லையென்றால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கெடு விதித்தார்.

வங்கி பரிவர்த்தனை

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில வங்கிக் கணக்கு விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தத் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக பாக்கித் தொகையை அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது பல்வேறு அரசுப் பொறியாளர்கள் உள்ளிட்ட பல நபர்களின் வங்கிக் கணக்கில் மொத்தம் 29.64 கோடி ரூபாய் திடீரென விடுவிக்கப்பட்டு உள்ளது என்று வங்கி பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

Image

மேலும், ‘நாம் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மின்துறை அமைச்சர் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அவர் வீட்டில் அமர்ந்திருக்கும் 5 ‘ஆலோசகர்’களுக்கு இந்த 4 சதவீதம் எங்கிருந்து வசூலிக்கப்பட்டது? எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பது நன்றாக தெரியும். இந்த வாரம் அனல் மின் நிலையம்; அடுத்த வாரம் சூரிய மின்சக்தி; அதற்கும் அடுத்த வாரம் இன்னொரு பெரியகம்பெனி’ என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில் அவர் அதிரடி காட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில்,‘‘மின் வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த ‘எக்செல்’ கையில் இருந்தும் அந்த தொகையையும் 29.99 கோடி ரூபாய் என சரியாக எழுதத் தெரியாமல், 4 சதவீதம் கமிஷன் என மீண்டும் பொய் புகார் கூறி, திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று காட்டமாக கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜியை விளாசிய ஸ்டாலின்

ஆனால் அண்ணாமலை மன்னிப்பும் கேட்கவில்லை. தனது புகாரை மறுக்கவும் இல்லை. அதுமட்டுமின்றி நீங்கள் கேட்டதற்கான ஆதாரம் இதோ உங்கள் கட்சி தலைவரிடமே இருக்கிறது என்று இன்னொரு ஒரு ட்விட்டை பதிவு செய்தார்.

அதில் 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக பொருளாளராக இருந்த ஸ்டாலின், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் பேசிய வீடியோ காட்சி ஒன்றையும் அவர் இணைத்திருக்கிறார்.

5 வருடங்களுக்கு முந்தைய அந்த வீடியோவில், அதிமுக அரசில் முன்பு போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி செய்த ஊழல்களை பட்டியலிட்டு ஸ்டாலின் பேசியதோடு, அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. நில அபகரிப்பு, ஆட்கடத்தல், போக்குவரத்து துறையில் நடத்துநர், ஓட்டுநர் பணி வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய்களை மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

பதவி விலகுவாரா ?

அதுவரை அண்ணாமலை போட்ட ஒவ்வொரு ட்விட்டுக்கும், மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த வீடியோ பற்றி எந்த பதிலும் கூறவில்லை.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிர்ச்சி தரும் விதமாக இன்றும் ஒரு டுவிட் போட்டார். அதில் எவ்வாறு ஊழல் நடந்துள்ளது என்பதை குறிக்கும் வகையில், “கோபாலபுரம் – பிஜிஆர் எனர்ஜி -மின்சார அமைச்சகம் -V. செந்தில் பாலாஜி இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்… விடை எளிதில் புரியும் ! #ResignEBMin” என்று ஹேஷ்டாக்கும் செய்திருக்கிறார்.

ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து நடத்தியுள்ள இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலகவேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி உள்ளார்.
மேலும் சென்னையை சேர்ந்த பிஜிஆர் எனர்ஜி என்ற நிறுவனத்தின் மூலம் தமிழக மின்வாரியம், இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. என்பதுதான், அண்ணாமலையின் குற்றச்சாட்டு.

அவர், இது தொடர்பாக டுவிட்டரில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்ததால்
அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதற்கு ட்விட்டரிலேயே அடுத்தடுத்து பதிலளித்தார். பல கேள்விகளையும் எழுப்பினார். இப்படி இருவரும் மாறி மாறி சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்டது. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிடுக்குப்பிடி

இதுகுறித்து டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, ” மாநிலத்தில் திமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் நடப்பதால் இதுபோன்ற மோதல்கள் தொடரத்தான் செய்யும். முன்பு 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. அதனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி அப்போதைய காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை.

annamalai - senthil balaji - updatenews360

ஆனால் பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக கூட்டணி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கத்துடன் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் வெற்றி பெற்று விட முடியும் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் நம்புகின்றன. அதை மத்திய பாஜக அரசும் உன்னிப்பாக கவனித்தே வருகிறது. அதனால் திமுக ஆட்சியில் ஏதாவது ஊழல், முறைகேடு என்றால் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே பாஜக விரும்பும். அந்த வேலையைத்தான் தற்போது அண்ணாமலை தமிழகத்தில் செய்து கொண்டிருக்கிறார். வழிபாட்டு தலங்களை வாரத்தின் அத்தனை நாட்களிலும் திறக்கவேண்டும் என்பதில் தொடங்கிய இந்த மோதல் இத்துடன் நிற்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஆதாரம் கேட்ட மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னதை வைத்தே, அவரை பதில் பேச விட முடியாமல் மடக்கி கிடுக்குப்பிடி போட்டிருப்பது அண்ணாமலையின் சாதுர்யம் ” என்று அவர்கள் பாராட்டினர்.

Views: - 350

1

0