இரவு நேரத்தில் 3 மணிநேரம் மின்தடை ஏற்படும் அபாயம்… தமிழக அரசை எச்சரிக்கும் ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 12:39 pm
Quick Share

கோடைக்காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்கும் மிகப்பெரிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மின் உற்பத்தி மற்றும் மின்தேவை குறித்த அறிக்கையை தென்மண்டல மின்பளு வழங்கும் மையம் வெளியிட்டிருக்கிறது. நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏப்ரல் மாதத்தில் பகல் நேர மின்தேவை 20,900 மெகாவாட் அளவுக்கும், இரவு நேரத்தில் 19,900 மெகாவாட் அளவுக்கும் அதிகரிக்கும்.

பகல் நேரத்தில் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கும் என்பதால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மத்திய தொகுப்பிலிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கப்படும் மின்சாரம் ஆகியவற்றைக் கொண்டு தேவையை சமாளித்து விடும். ஆனால், இரவு நேரத்தில் சூரிய மின்சாரம் கிடைக்காது என்பதால், அனைத்து ஆதாரங்களில் இருந்தும் 17,917 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இரவு நேரங்களில் 1983 மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.

சென்னை எண்ணூரில் அமைக்கப்பட்டு வரும் 800 மெகாவாட் திறன்கொண்ட வடசென்னை அனல் மின்நிலையத்தின் (மூன்றாம் நிலை) பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த சில வாரங்களில் மின்னுற்பத்தி தொடங்கப்படவேண்டும். அத்துடன் தனியாரிடம் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி முழுமையாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டால், சராசரியாக 1000 மெகாவாட் அளவுக்கும், அதிகபட்சமாக 2800 மெகாவாட் அளவுக்கும் பற்றாக்குறை ஏற்படும்.

ஒருவேளை வடசென்னை அனல் மின்நிலையம் பயன்பாட்டுக்கு வராமல், மின்சார கொள்முதலும் முழுமையாக செய்யப்படாத நிலையில், சராசரியாக 3800 மெகாவாட் முதல் 4000 மெகாவாட் வரை மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தின் உதவியுடன் பகல் நேரத்தில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லாமலோ, குறைந்த அளவு மின்வெட்டுடனோ தமிழ்நாடு தப்பிவிடக்கூடும். ஆனால், இரவு நேரங்களில் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் கோடை வெயில் முன்கூட்டியே சுட்டெரிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இரவு நேரத்தில் இந்த அளவு அதிக மின்வெட்டை தமிழ்நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படவுள்ள மின்வெட்டை சமாளிக்க இப்போதிலிருந்தே உரிய திட்டமிடலும், செயலாக்கமும் செய்யப்பட வேண்டும். கோடைக்காலத்தில் அனைத்து மாநிலங்களுக்குமே கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்பதால், சந்தையில் மின்சாரம் வாங்குவது மிகவும் கடினமானதாக இருக்கும். அதனால், தமிழகத்திற்கு தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வாங்குவதற்காக தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுடன் இப்போதே மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் மின்தேவை இந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதையோ, மின்சார பற்றாக்குறை ஏற்படும் என்பதையோ ஒப்புக்கொள்வதற்கே மின்வாரிய அதிகாரிகள் தயாராக இல்லை.

தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் அதிக அளவில் தொடங்கப்பட்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறி வரும் நிலையில், மின்தேவை அதிகரிக்காது என்று எந்த அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர் என்பது தெரியவில்லை. அலட்சியப் போக்கை கைவிட்டு, மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பது தான் மின்சார வாரியத்தின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மின்வெட்டு ஆபத்து இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு மின்னுற்பத்தி திட்டங்கள் போதிய அளவில் செயல்படுத்தப்படாதது தான் காரணம் ஆகும். கோடைக்காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்கும் மிகப்பெரிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, 800 மெகாவாட் திறன்கொண்ட வடசென்னை அனல் மின்நிலையத்தில் (மூன்றாம் நிலை) மின்னுற்பத்தியை தொடங்குதல், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்தல் ஆகிவற்றின் மூலம் மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவையும் தற்காலிகத் தீர்வுகள் தான். கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட அனல் மின்திட்டங்களை மட்டுமே நிறைவேற்றுதல், 2030&ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டங்கள், 15,000 மெகாவாட் நீரேற்று மின்திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் மின்வெட்டை நிரந்தரமாக தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 178

0

0