தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடக்கம் : கைரேகை இருந்தால் போதும்.. எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம்..!

1 October 2020, 11:47 am
Quick Share

சென்னை : ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழகத்தில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், சுமார் 79 கோடி பேர் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை வாங்கி நுகர்ந்து வருகின்றனர். அவர்களில் சுமார் 7 கோடி பேர் வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி செல்வதால், அவர்கள் செல்லும் பகுதிகளில், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தின்படி, எந்த மாநிலத்தில் இருந்தாலும், அவர்கள் தங்களது குடும்ப அட்டையை பயன்படுத்தி, ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை வாங்க முடியும். இந்த திட்டத்தை, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, ஒரே நாடு- ஒரே ரேசன் கார்டு திட்டம் நாடு முழுவதும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 32 மாவட்டங்களில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 6 மாவட்டங்களில் 16ம் தேதி முதல் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பிற மாநில கார்டுதாரர்களும் தமிழக ரேஷன் கடைகளில், கைரேகையை பதிவு செய்து, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டிருந்தது.