திமுகவின் கவர்ச்சி வாக்குறுதிகள்… ரூ.1,000 எதிர்பார்ப்பில் குடும்பத் தலைவிகள்… தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?…

10 June 2021, 10:03 pm
DMK election assurance - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடப்பதற்கு முன்பாக கடந்த மார்ச் 13-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் 505 தேர்தல் வாக்குறுதிகளை செய்தியாளர்கள் முன்பாக வெளியிட்டார்.

கவர்ச்சி வாக்குறுதிகள் :

அப்போது அவர், “தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வாக்குறுதிகளாக உள்ளன. இவை அனைத்தையும் உன்னிப்பாகப் படித்து ஊடகங்கள், பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் ஒரு சிலருக்கு வரலாம். என்றபோதிலும் தமிழகத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவற்றில் மிக முக்கியமான வாக்குறுதிகளை மட்டும் தலைப்புச் செய்திகளாக உங்கள் முன்னால் வாசிக்கிறேன்” என குறிப்பிட்டார்.

stalin cm - updatenews360

அப்படி அவர் அறிவித்தவற்றில் பணப் பயன் சார்ந்தவை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

*அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.

*மாற்றுத் திறனாளிக்களுக்கும் உள்ளூர் பேருந்துகளில் பயணச் சலுகை.

*நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.

*கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

*ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

நிலுவையில் உள்ள வாக்குறுதிகள் :

*அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.

Deadline For 20 Percent Ethanol Blended Petrol Is Now 2023 In India

*சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

*மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

*கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

*100 நாட்கள் வேலைத் திட்டம்,150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

*30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

*மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

*கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது.

*நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

*கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை:

முன்னதாக மார்ச் 7-ம் தேதி திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதாந்திர உரிமைத் தொகை ரூ1000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது.

woman queue - updatnews360

இந்த வாக்குறுதிகளில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, கொரோனா காலத்தில் பரிதவித்த அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேபோல் மகளிருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டமும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை பொறுத்தவரை, புதிய அரசு பதவியேற்றவுடன் நேரடியாக பணப் பயன்கள் கிடைக்கும் திட்டங்கள் எப்போது நிறைவேற்றப்படும் என்பதைத்தான் மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

மக்களின் எதிர்பார்ப்பு:

தற்போது, தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும், வெகுவாக பாதித்துள்ளது. ஏனென்றால் இன்று இரு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை நெருங்கி இருக்கிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 ரூபாயை கடந்து விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

குறைந்தபட்சம் தினமும் இரண்டு லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள், மாதத்திற்கு குறைந்தபட்சம் கூடுதலாக 300 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
இதனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி முதலில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என்பதாக உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சியமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் விலை குறைப்பிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்துவோம். அதனால் அவற்றின் விலை இன்னும் கணிசமாக குறையும் என்றார்கள். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.

பெட்ரோல் விலை தினமும் உயர்வதால் ஒவ்வொரு மாதமும் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கையைக் கடிக்கிறது. இந்த கொரோனா பரவல் காலத்தில் மாதச் சம்பளம் கிடைப்பதே மிகக் கடினமாக உள்ளது. அதிலும் இழுத்தடித்துதான் தருகிறார்கள். அன்றாடம் கூலி வேலைக்கு போகிறவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம்தான். அவர்களுக்கு வேலையும் நிரந்தரமில்லை சம்பளமும் கிடைக்கவில்லை. எனவே அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில்
கொண்டு, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு முன்வர வேண்டும்” என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.

எங்கே மாதம் ரூ.1,000?

இதில், குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பும், சிந்தனையும் வேறு மாதிரியாக உள்ளது.

“கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், லட்சக்கணக்கான பெண்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் வேலை கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. வேலை பார்த்த இடங்களில் ஆட்குறைப்பும் செய்துவிட்டார்கள் எங்களைப் போன்றவர்களுக்கு வேறு எந்த வருவாய் ஆதாரமும் கிடையாது. இக்கட்டான சூழலில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

எனவே இந்த நேரத்தில், 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைத்தால் குடும்பத் தலைவிகளின் துயரம் தீரும். அதேபோல் எரிவாயு சிலிண்டருக்கு100 ரூபாய் மானியம் தருவதாக கூறியதையும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும். ஏனென்றால்
இந்தத் தொகைகள் எல்லாம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான் திமுகவிற்கு ஓட்டு போட்டோம்.

cash - updatenews360

இந்தப் பணம் மாதாமாதம் கைக்கு வந்தால் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் குடும்பத் தலைவிகளின் மாதாந்திர செலவுக்கு ஓரளவு கைகொடுக்கும்” என்று தங்களுடைய எதிர்பார்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.

பாஜக வலியுறுத்தல் :

Murugan Slams VCK -Updatenews360

தமிழக பாஜக தலைவர் முருகன் இதை வலியுறுத்திக் கூறும்போது “தி.மு.க. தலைமையிலான அரசு அமைந்து 30 நாட்கள் நிறைவடைந்துள்ளன. அக்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியான, பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்னும் தொடங்கவில்லை. அத்திட்டத்தையும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும், தி.மு.க. அரசு உடனே நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்”என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

குடும்பத் தலைவிகள், வாகன ஓட்டிகளின் இன்னல்களைப் போக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Views: - 239

0

0