விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உயருகிறது…? மறைமுகமாக சொன்ன நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!!

Author: Babu Lakshmanan
9 August 2021, 1:10 pm
ptr - eb - updatenews360
Quick Share

தமிழக அரசின் நிதிநிலை மோசமாக இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வரிகளை உயர்த்த இருப்பதாக சொல்லப்படுகிறது.

20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நடப்பு நிதி ஆண்டின் இடைக்கால நிதிநிலை மதிப்பீடுகளின்படி தமிழகத்தின் மொத்த கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி மாற்றப்படாமல் இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிக குறைவாக உள்ளது. ஜீரோ % வரிகள் என்பது அர்த்தம் இல்லாதது; வளர்ச்சிக்காக உரிய வரிகள் பெறப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வரி அதிகமாக விதிக்கப்படுவதால் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி 30% குறைந்துள்ளது. 2014க்கு பிறகு மின்சார கட்டணமும் உயர்த்தப்படாமல் இருக்கிறது. அதேபோல, பல ஆண்டுகளாக சொத்து வரியையும் உயர்ந்தவில்லை. கடந்த ஆட்சியில் சரியான நேரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் ரூ. 2,577 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1% ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7%ஆக குறைந்துள்ளது. 2008-09 ஆண்டில் 13.35% ஆக இருந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-21ம் ஆண்டில் 8.7% ஆக குறைந்துள்ளது. உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருவாய் 28% சரிந்துள்ளது.

வணிக வரியில் இருந்து வரும் வருமானம் 4.19% குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 %ஆக சரிந்துள்ளது. பெட்ரோல் விற்பனை மூலமாக மாநிலங்களுக்கு கிடைத்த வருவாயையும் மத்திய அரசு பறித்து கொண்டது. பெட்ரோல் விற்பனை மூலமாக செஸ் வரியால் மத்திய அரசுக்கு ரூ.31.50 கிடைக்கிறது. செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை பெருமளவு மத்திய அரசு குறைத்துவிட்டது. பெட்ரோல் விற்பனை மூலமாக செஸ் வரியால் மாநில அரசுக்கு 2 பைசாதான் கிடைக்கிறது.

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ரூ.20,033 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது. தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய 1200 கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமல் வைத்துள்ளன. தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது. தமிழகத்தில் 1 கி.மீ. தூரம் பொது போக்குவரத்து இயங்கினால் ரூ.59.15 இழப்பு ஏற்படுகிறது. இதற்கு டீசல் விலை உயர்வு முக்கிய காரணம். போக்குவரத்து துறையில் தவறான நிதி மேலாண்மை இதற்கு காரணம், எனக் கூறினார்.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை தொடர்பாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், ” நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தமிழக அரசின் வெள்ளை அறிக்கையின் விபரங்களை பார்க்கும் போது திகைப்பாக உள்ளது. வருவாய் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். இதனால், பாதிக்கப்படப் போவது மக்களாகத்தான் இருப்பார்கள். வருவாயைக் கூட்ட அரசு இனி வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் கடனுக்கே வரி உயர்த்துவது என்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். ஆனால், தற்போதை ஆளும் திமுக அரசும் பணப்பலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இன்னும், தேர்தலில் அறிவித்த பணப்பலன் சார்ந்த அறிவிப்புகளை நிறைவேற்ற தமிழக அரசு ஆரம்பிக்கவில்லை. இந்த சூழலிலேயே தமிழக அரசின் நிதிநிலை பரிதாப நிலையில் உள்ளது. இப்படியிருக்க, தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றம் போது தமிழக அரசின் கடன் சுமை இன்னும் அதிகரிக்கும். இதனைக் கட்டுப்படுத்த அரசின் பல்வேறு துறைகளில் வரிகளை உயர்த்துவதே ஒரே வழியாக இருக்கும்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கூட மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்படாமல் இருப்பதாக அமைச்சர் பழனிவேல் நியாகராஜன் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால், அவர் மறைமுகமாக வரி உயர்வு இருப்பதை தெளிப்படுத்தியுள்ளார். தற்போது ஒரு குடும்பத்தின் மீது 2.63 லட்சம் கடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்குமா..? இல்லை வரிச்சுமை மக்களின் மீது திணிக்கப்படுமா..? என்பது அரசின் எதிர்வரும் நடவடிக்கைகளை பொறுத்துதான் இருக்கும், எனக் கூறினர்.

Views: - 588

0

0