ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன் சித்தப்பா: வசந்தகுமார் மறைவுக்கு தமிழிசை கண்ணீர்!

28 August 2020, 11:09 pm
Quick Share

சென்னை: ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டு இருக்கிறேன் என்று வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மூத்த எம்பிக்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் இன்று காலமானார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இவர் உடல்நிலை நலிவடைந்தது. இதையடுத்து இன்று மாலை இவர் மரணம் அடைந்தார்

. இவரின் மறைவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழிசை சௌந்தராஜன் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகள் ஆவார். குமரி ஆனந்தனின் சகோதரர்தான் வசந்த குமார். இந்த நிலையில் தனது சித்தப்பாவின் மறைவிற்கு தமிழிசை சௌந்தராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சித்தப்பா !

நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது… என் சிறு வயது முதல் அவருக்குத் திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்… அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால், வேறு வேறு பாதையில் பயணித்தோம்…

இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர ரத்த பாசம் இருவரிடமும் உண்டு, தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்… சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது…

வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பல பேருக்குப் பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது… கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் … கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது… ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்… இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 32

0

0