தென்காசி மாவட்டத்தில் 4 நீர்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறப்பு..! முதல்வர் உத்தரவு

18 August 2020, 7:09 pm
Quick Share

சென்னை: தென்காசி மாவட்டத்தில் 4 நீர்தேக்கங்களில் இருந்து வரும் 21ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு நடப்பாண்டு கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு கார் சாகுபடிக்கு 21.8.2020 முதல் 25.11.2020 வரை 97 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தென்காசி மாவட்டம், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் ஆகியவற்றில் உள்ள 8225.46 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Views: - 0 View

0

0