அரசியல் கண்ணோட்டம் : சசிகலா வருகையால் அதிமுகவுக்கு பாதிப்பா?
7 February 2021, 7:13 pmமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த 27-ம் தேதி விடுதலையானார்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே கொரோனா பெருந்தொற்று நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையும் பெற்றார்.
கடந்த வாரம் டிஸ்சார்ஜ் ஆன சசிகலா தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் 8-ம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அவர் சென்னை வருவதற்குள்ளாகவே அவரைப் பற்றிய செய்திகள் இங்குள்ள ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக திமுக ஆதரவு ஊடகங்கள் சசிகலா மீது மிகுந்த அக்கறையுடனும், ஆர்வத்துடனும் செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன.
சமீப காலமாக அமைதி காத்துவந்த அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரனும் சசிகலாவின் வரவால் உற்சாக மூடில் இருக்கிறார்.
66 வயதாகும் சசிகலா விடுதலை பெற்று விட்டதால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும், அவரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் ஸ்லீப்பர் செல்கள் அரசை கவிழ்த்து விடுவார்கள் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
குறிப்பாக பாஜக எம்பி சுப்பிரமணியசாமி மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் வெளிப்படையாகவே சசிகலா இல்லாமல் அதிமுகவே இல்லை என்ற கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இவர்கள் எதற்காக சசிகலாவை ஆதரிக்கிறார்கள் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 30 வருடங்களுக்கு முன்பே சசிகலாவை மிக நன்கு அறிந்தவர் சுப்பிரமணியசாமி என்று சொல்லலாம்.
அப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். அதேநேரம் ஒரு வீடியோ கேசட் கடையை ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் பகுதியில் சசிகலா நடத்தி வந்துள்ளார்.
இந்த சமயத்தில் கடலூர் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த சந்திரலேகாவிடம், நடராஜன் தனது மனைவி சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல் அவரும் அறிமுகம் செய்து வைத்தார்.
82 வயது சுப்பிரமணியசாமி 1977-ல் ஜனதா கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர். பிற்காலத்தில் அந்தக் கட்சியில் தமிழ்நாட்டில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர்தான், சந்திரலேகா.
இதை வைத்தே சுப்ரமணியசாமி எதற்காக சசிகலாவை தீவிரமாக ஆதரிக்கிறார் என்பதை ஓரளவு அனுமானிக்கலாம். அதனாலேயே ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் தொடர்ந்து சசிகலாதான் அதிமுகவில் முதல்வர் பதவி வகிக்க தகுதியானவர் எனக் கூறியும் வருகிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உண்டு.
சரி, ஆடிட்டர் குருமூர்த்தி எதற்காக சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள காரணங்கள் உள்ளன.
2017 பிப்ரவரியில் சசிகலா சிறை செல்வதற்கு முன்பு முதல்வராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நீண்ட காலம் பதவியில் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று நினைத்தவர்கள் ஏராளம். அவர்களில் ஆடிட்டர் குருமூர்த்தியும் ஒருவர் என்கிறார்கள்.
ஏனென்றால் அந்த நேரத்தில் இப்போதைய துணை முதல்வர்
ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் ஓர் தனி அணியை உருவாக்கி இருந்தார். பின்னர் டெல்லி மேலிட பாஜக ஆதரவுடன் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இதன் பிறகும் கூட தன்னை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாடுவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி எதிர்பார்த்தார் என்று கூறப்படுவது உண்டு.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நான்காண்டுகளாக ஆட்சியை திறம்படவே நடத்திவருகிறார். தவிர, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துணையுடன் இன்று தேர்தலில் திமுகவை வீழ்த்தக் கூடிய மிகப் பெரிய சக்தியாகவும் அதிமுகவை அவர் கட்டமைத்து விட்டார்.
மத்திய அரசுடன் பல்வேறு விஷயங்களில் இணக்கமான உறவை கொண்டிருந்தாலும் கூட தமிழகத்திற்கு ஏதாவது பாதகமான திட்டங்கள் என்றால் அதை முதல்வர் எதிர்க்கவும் செய்கிறார்.
அதிமுகவை எப்படியும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்று நினைக்கும் சுப்பிரமணியசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களுக்கு இது பேரதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த கோபம்தான் அவர்கள் இருவரும், எதிரிக்கு எதிரி நண்பன் என்று கூறுவதைப்போல தினகரனை தங்களுடைய காரியங்களை சாதித்துக் கொள்வதற்கு கொம்பு சீவி விட ஆரம்பித்ததாக சொல்லப் படுகிறது. அதுதான் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் தற்போது ஒரு தற்காப்பு கேடயம் போல் ஆகி விட்டது.
சரி, அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் என்ன நினைக்கிறார்கள். அவர்களில் சிலர் சொல்வதையும்தான் கொஞ்சம் காது கொடுத்து கேட்போமே.
“எம்ஜிஆர் திமுகவை எதிர்த்துத்தான் அதிமுகவை தொடங்கினார். அவரை திரையுலக ரீதியாக வீழ்த்திட கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவை படங்களிலும் நடிக்க வைத்தார்.
அதுவும் எம்ஜிஆர் போலவே மேக்கப் போட்டு நடிக்க வைத்தார். ஆனால் அசலுக்கு நகல் ஒருபோதும் ஈடாகாது என்பதைப் போல மு.க.முத்துவின் படங்கள் ஓடவில்லை. சினிமாவில் இருந்து அவர்தான் ஓடினார்.
1987 டிசம்பரில் எம்ஜிஆரின் மறைவுக்கு பின் கட்சி இரண்டாக பிளவுபட்டு ஆட்சியும் கவிழ்ந்து இன்னொரு மாபெரும் சோதனையும் வந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் ஒரு அணியாகவும், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா இன்னொரு அணியாகவும் 1989 சட்டப் பேரவை தேர்தலை சந்தித்தனர்.
அந்தத் தேர்தலில் எம்ஜிஆரின் வாரிசாக ஜானகி அம்மாளை அதிமுகவினர் ஏற்காமல் நிராகரித்தனர். இதை அவரும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு ஆதரவு கொடுத்து ஒன்றுபட்ட அதிமுகவை மீண்டும் உருவாக்க வழிவிட்டார். அரசியலில் இருந்தும் விலகிக் கொண்டார்.
2016 டிசம்பர்பரில் ஜெயலலிதா இறந்த துயரம் நீங்காத நிலையில் ஜெயலலிதா வசித்த அதே போயஸ் கார்டன் இல்லத்தின் பால்கனியில் இரட்டை விரலை காட்டினார், சசிகலா. ஜெயலலிதா போலவே உடையும் அணிந்தார். அவரால் சில அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அந்தநேரத்தில் திருப்திப்படுத்த முடிந்ததே தவிர தொண்டர்களை முழுவதுமாக ஈர்க்க இயலவில்லை.
அதிமுக தலைமைக்கு பொருத்தமானவர் என்ற தாக்கத்தை லட்சோப லட்ச தொண்டர்களிடம் ஏற்படுத்தவும் முடியவில்லை என்பதே உண்மை.
அதனால்தான் கட்சியில் தங்களைப் போல் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறிய எடப்பாடி பழனிசாமியை அவர்கள் மனதார முதல்வராக ஏற்றுக் கொண்டுள்ளனர். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அவரை அங்கீகரித்து இருக்கின்றனர்.
2017-ல் சசிகலாவை ஆதரித்த ஒரு சில அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கூட இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஆதரிக்கிறார்கள்.
அதனால் மனம் குழம்பிப் போய் அன்று கருணாநிதி எடுத்த அதே அட்டை கத்தியை இன்று தினகரனும் கையில் எடுத்திருக்கிறார். சசிகலாவை முன்னிறுத்தி அதிமுகவை சிதறடிக்க துடிக்கிறார்.
முன்பு சசிகலாவின் கணவர் நடராஜன் அதிமுகவின் கட்சி விவகாரங்களில் தலையிட்டார். தன்னை அரசியல் சாணக்கியர் போல கருதி பேச ஆரம்பித்ததால் அவர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார்.
இப்போது சசிகலாவின் அக்காள் மகன் தினகரனும் அதே பாணியில் வலம் வருகிறார். அவருடைய நோக்கமெல்லாம் அதிமுகவை கைப்பற்றி முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும் அல்லது சசிகலாவை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அவரை பின்னால் இருந்து, தான் ஆட்டுவிக்கவேண்டும் என்பதுதான்.
அவர் தனது கட்சியை ஒரு சாதி அமைப்பு போலவும் உருவாக்கிவிட்டார். அதையே அதிமுகவிலும் திணிக்க முயற்சிக்கிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்குள் சாதிய அடையாளம் இல்லாமல் மிகக் கவனமாக பார்த்துக் கொண்டனர். அதே நிலைதான் தற்போதும் உள்ளது.
ஆனால் தினகரன் தனது கட்சிக்கு சாதிச் சாயம் பூசி கொண்டது போல் அதிமுகவிலும் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காக அதிமுகவுக்கு வந்தவர்கள் இதனை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் சாதி, மத பேதமற்றவர்கள்.
இங்கே எந்த பாதிப்பையும் சசிகலாவோ, தினகரனோ ஏற்படுத்தவே முடியாது.
இவர்களால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே இவர்கள் அதிமுகவிடம் இருந்து விலகி நிற்பதே நல்லது” என்று அந்த விசுவாசிகள் மனம் திறந்து கொட்டினர்.
பல்லாயிரம் விழுதுகள் தாங்கி நிற்கும் சக்தி வாய்ந்த அதிமுக என்னும் ஆலமரத்தை அசைத்துப் பார்க்க நினைக்கும் ஒரு சிலரின் முயற்சி கை கூடாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் ஆணித்தரமான கருத்தாக உள்ளது.
0
0