அடுத்தடுத்து குட்டு வைத்த உயர் நீதிமன்றம்! பதை பதைப்பில் திணறும் திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 9:10 pm
DMK - Updatenews360
Quick Share

சனாதன ஒழிப்பு விவகாரத்தில் தேசிய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதே நல்லது என்று முதலமைச்சர் ஸ்டாலினும் இப்பிரச்சனையை முதலில் கிளப்பிவிட்ட அமைச்சர் உதயநிதியும் நினைத்தாலும் கூட
அது இன்னும் சூடு தணியாமல் கொதி நிலையில்தான் உள்ளது.

திமுகவின் சனாதன ஒழிப்பு

வட மாநிலங்களில் திமுகவின் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சுகளின் தாக்கம் இன்னும் குறைந்தது போலத் தெரியவில்லை. ஏனென்றால் இண்டியா கூட்டணியில் உள்ள பல பிரதான கட்சிகள் திமுகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாலும் இதை பாஜக தங்களுக்கு கிடைத்த பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்துக் கொண்டிருப்பதாலும் இனி நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த விவகாரம் விவாதத்துக்குரிய ஒன்றாகவே நீடிக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அதேநேரம் சொத்து குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோர் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதும்
அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கித் தவிக்கும் செந்தில் பாலாஜியின் வழக்கும் தமிழக மக்களிடையே பெரும் பேசு பொருளாக மாறிவிட்டதை உணர்ந்து அதை திசை திருப்பும் நோக்கத்தில்தான் திமுக சனாதன தர்ம ஒழிப்பு முழக்கத்தை கையில் எடுத்தது என்று கூறப்படுவதும் உண்டு.

உயர்நீதிமன்றம் கொடுத்த அடி

ஆனால் இதையெல்லாம் ஒருபோதும் மக்களால் மறக்க முடியாது என்கிற அளவிற்கு, கடந்த இரண்டு வாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் திமுக நிர்வாகிகள் தொடர்பான வழக்குகளில் அடுத்தடுத்து பலமான குட்டு வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த வழக்குகள் எல்லாமே உயர் நீதிமன்றம் தொடர்பானவை என்பதால்திமுக ஆதரவு முன்னணி நாளிதழ்களும், டிவி செய்தி சேனல்களும் இருட்டடிப்பு செய்யாமல் அப்படியே வெளியிட நேர்ந்தது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதுவும் மக்களிடையே திமுக அரசு மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.

ஆளும் திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தி கொள்ளும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் திமுக அமைச்சர், பிரபல எம் பி மற்றும் சென்னை நகர திமுக நிர்வாகி ஆகியோரின் வழக்குகளில் அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்தது.

6 வருடமாக வாடகையே தராத திமுக நிர்வாகி

சென்னை தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் கிரிஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், கடந்த 13 ஆண்டுகளாக
வீட்டை காலி செய்ய மறுத்து வந்ததுடன் 2017ம் ஆண்டு முதல் வாடகையும் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரிஜா மீண்டும் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சி தருவதாகவும் அமைந்திருந்தது.

“ராமலிங்கம் திமுக வட்டச் செயலாளராக உள்ளதால் மனுதாரரும், அவருடைய கணவரும் தங்களது வயோதிக வயதில் இந்தவீட்டை திரும்பப் பெற 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த வழக்கில் முன்பு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ராமலிங்கம், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார்.

ஆனால் அவர் சொன்னபடி நடக்கவில்லை. தற்போது தனது வழக்கறிஞரை மாற்றிவிட்டார். அவர் தொடர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி வருகிறார். எனவே இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர் மனுதாரராக சேர்க்கிறேன். அவர் 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றி, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என சாட்டையடி உத்தரவும் பிறப்பித்தார்.

நீதிமன்றம் போட்ட உத்தரவு

இந்த உத்தரவு அத்தனை டிவி சேனல்களிலும், நாளிதழ்களிலும் முக்கிய செய்தியாக இடம் பிடித்ததால் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏற்கனவே வயதான தம்பதிகளிடம் நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, சொத்துக்களை பறிப்பது போன்றவற்றில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள் என்ற எண்ணம் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளதால் இதன் மீது திமுக தலைமை உடனடி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி திமுக நிர்வாகி ராமலிங்கம் நீதிமன்றம் கெடு விதித்த 48 மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த வீட்டை காலி செய்யவும் நேர்ந்தது.

இந்த செய்தியின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக் கூடாது. அதை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு வக்கீல்கள் வைத்தனர். ஆனால் கடந்த 14ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடியின் வேண்டுகோளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்க மறுத்ததுடன் இந்த வழக்கை அக்டோபர் மாதம் 9-ம் தேதி முதல் தொடர்ந்து நானே விசாரிப்பேன்” என்றும் தெரிவித்தார்.

திமுக அமைச்சர்களுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி

தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதால் அதன் காரணமாக வழக்கில் இருந்து, தன்னால் தப்ப முடியாது என்று கருதியோ, என்னவோ இந்த கோரிக்கையை பொன்முடி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதேநேரம் யார் விசாரித்தால் என்ன? தப்பு செய்யாவில்லை என்றால் நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? என்று சமூக நல ஆர்வலர்கள் கிடுக்குபிடி கேள்விகளையும் எழுப்புகின்றனர்.

பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து, வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு ஒரே மாதத்தில் அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இதனை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தால் சிக்கிய திமுக எம்பி

மூன்றாவதாக சென்னை உயர்நீதி மன்றத்தால் பெரும் சோதனைக்கு உள்ளாகி இருப்பவர் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பியும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனுமான கலாநிதி வீராசாமி.

சென்னை கோயம்பேட்டில் எம்பி கலாநிதி வீராசாமிக்கு சொந்தமான வீ கேர் மருத்துவமனை அமைந்துள்ள நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, 2011ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அதனை காலி செய்யும்படி அதே ஆண்டு கலாநிதி வீராசாமிக்கு தமிழக அரசு சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் டாக்டர் கலாநிதி வீராசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

திமுகவுக்கு வைத்த குட்டு

1995ம் ஆண்டு கலாநிதி வீராசாமியின் குடும்பத்தினர் வாங்கியதாகவும் அந்த நிலம் வருவாய்ப் பதிவேட்டில் கிராம நத்தம் நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், அதன் மீது அரசு உரிமை கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் செப்டம்பர் 15ம் தேதிபிறப்பித்த உத்தரவில், ‘கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்கவே ஒதுக்கப்பட்டது. எனவே அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. மனுதாரர் எம்பியாக உள்ளதாலும், அவரது தந்தை தமிழக முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார் என்பதாலும், அவர் நிலமற்ற ஏழை அல்ல. வீடு இல்லாதவரும் கிடையாது.

சமூகநீதி பாதுகாவலர்களா? முதலமைச்சருக்கு தலைவலி

தமிழகத்தில் சமூக நீதியின் பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கவுரவம் வழங்க வேண்டும். எனவே கலாநிதி வீராசாமி எம்பி அடுத்த ஒரு மாதத்தில் நிலத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரிடம் இருந்து நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறி இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.

“இந்தத் தீர்ப்பின் மூலம் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை திமுக எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி சட்ட விரோதமான முறையில் வணிகப் பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தியதுடன், அந்த இடத்திற்கான இழப்பீடு தொகையும் அரசிடம் கேட்டுப் போராடி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதேநேரம் சமூக நீதியின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியினரே இதுபோல் செய்வது வேதனை தருவதை நீதிபதி நேரடியாகவே சுட்டிக் காண்பித்தும் இருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் திமுக அரசு மீதும், திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள் மீதும் தமிழக மக்களிடையே அதிருப்தியை இன்னும் அதிகரித்திருக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 234

0

0