திருமாவுக்கு சூடு வைத்த தேர்தல் முடிவு : முர்மு அதிக ஓட்டு வாங்கியதன் ரகசியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 9:59 am
Thiruma Murmu - Updatenews360
Quick Share

தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த பதவிக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல்

இதையடுத்து 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மத்தியில் ஆளும் பாஜக யாரை நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.

எனினும் எதிர்க்கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்

முதலில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை வேட்பாளராக்க முயற்சி நடந்தது. ஆனால், அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக கடந்த மாதம் 15-ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டமும் நடந்தது. அப்போது, பரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இருவரும் மறுத்துவிட்டனர்.

இதனால், கடந்த மாதம் 21ம் தேதி டெல்லியில் 16 எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. அப்போது பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்துவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.

திருமா கோரிக்கை நிராகரிப்பு

இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில், கிறிஸ்தவர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து ஆரம்பம் முதலே தொடர்ந்து வெளிப்படையாக வலியுறுத்தி வந்த அவர் தனது விருப்பம் ஏற்கப்படாததால் அசடு வழியத்தான் நேர்ந்தது.

இதனால் வேறு வழியின்றி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 84 வயது யஷ்வந்த் சின்ஹாவை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டார்.

பாஜக வேட்பாளர் அறிவிப்பு

அதேநேரம் அன்று மாலையே, பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான 64 வயது திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

ஒடிசா மாநிலத்தில் மிகவும் ஏழ்மையானதொரு குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறியவர்தான் திரவுபதி முர்மு. பள்ளிக்கூட ஆசிரியையாக பணியாற்றி கல்லூரி பேராசிரியை ஆகவும் உயர்ந்தவர். நான்கு ஆண்டு கால இடைவெளியில் கணவரையும் இரண்டு மகன்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தவர்.

ஷாக்கான எதிர்க்கட்சிகள்

இத்தகைய உருக்கமான பின்னணி கொண்ட ஒரு பழங்குடியின வகுப்பு பெண் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று
எதிர்க்கட்சிகள் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.

ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றி உறுதி என்ற நிலையில் முர்மு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் என்பதால் சமூகநீதி, பெண்கள் அதிகாரம் பற்றி முழங்கும் அரசியல் கட்சிகளுக்கு இது பேரிடியாகயும் அமைந்தது.

பாஜக வேட்பாளருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

அதேநேரம் சமூகநீதியில் உறுதியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட பல கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு வெளிப்படையாக தங்கள் ஆதரவை தெரிவித்தன.

இதுதவிர எதிர்கட்சிகளின் எம்பி, எம்எல்ஏக்களில் பலர் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக, முர்முவுக்கு வாக்களிப்போம் என்றும் பகிரங்கமாக அறிவித்தனர்.

தேர்தலில் முர்மு வெற்றி

இந்த நிலையில்தான் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடத்தப்பட்டது. எம்பிக்கள் மக்களவை செயலகத்திலும், எம்எல்ஏக்கள் மாநில தலைமைச் செயலகத்திலும் வாக்களித்தனர். இந்த தேர்தலில் எம்பிக்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டுகளும் எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.

தேர்தலில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் என சுமார் 4800 வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுபோட தகுதி பெற்றவர்களாக இருந்தனர்.

பல்வேறு மாநில தலைமைச் செயலகங்களில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் அன்று மாலையே விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். இந்த மதிப்பில் 50 சதவீதத்தை காட்டிலும் அதிகமாக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்ற நிலையில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஓட்டுகளைப் பொறுத்தவரை முர்முவுக்கு 540 எம்பிக்களும், யஷ்வந்த் சின்ஹாவிற்கு 208 எம்பிக்களும் ஓட்டுப் போட்டிருந்தனர்.15 செல்லாத வாக்குகளும் பதிவாகி இருந்தது.

எம்பிக்களின் மொத்த ஓட்டு மதிப்பு அடிப்படையில் பார்த்தால் முர்முவுக்கு 3 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹாவிற்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 600 ஓட்டுகளும் கிடைத்தன.

பிரம்மாண்ட வெற்றி

இதையடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான எம்எல்ஏக்களின் ஓட்டுகள் என மேலும் 3 சுற்றுகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திரவுபதி முர்முவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் கிடைத்தன. இறுதியில், அவர் பெற்ற ஓட்டு மதிப்பு, 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 ஆக அறிவிக்கப்பட்டது.

இது மொத்த ஓட்டுகளில் 64 சதவீதமாகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா பெற்ற ஓட்டு மதிப்பு, 3 லட்சத்து 80 ஆயிரத்து 177. இது மொத்த ஓட்டுகளில் 36 சதவீதம். பதிவான மொத்த எம்எல்ஏக்களின் ஓட்டுகளில் 38 ஓட்டுகள் செல்லாதவை ஆகும்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளை சேர்ந்த 17 எம்பிக்களும் 125 எம்எல்ஏக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முர்முவின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் கூட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அடியோடு சிதைக்கும் விதமாக முர்மு 64 சதவீத ஓட்டுகளை வாங்கி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக அவருக்கு 58 சதவீத வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹாவிற்கு 42 சதவீத ஓட்டுகளும் கிடைக்குமென்று என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து 64 சதவீத ஓட்டுகளை முர்மு பெற்று எதிர்கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

பழங்குடியினர், பாஜகவினர் கொண்டாட்டம்

அவருக்கு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முர்முவின் பூர்வீக கிராமமான ஒடிசாவின் உபர்பேடாவில் முர்முவின் வெற்றியை கொண்டாடும் விதமாக அந்த கிராமத்தினர் 50 ஆயிரம் லட்டுகளை தயாரித்து அதை மக்களுக்கு வழங்கி கொண்டாடியும் மகிழ்ந்தனர்.

திரவுபதி முர்மு வருகிற 25-ம் தேதி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கிறார். இதனால் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

ஜனாபதியாக முதல் பழங்குடியின பெண்

திரவுபதி முர்முவின் வெற்றி, உண்மையிலேயே சமூக நீதிக்கு கிடைத்த மிகப்பெரியதொரு அங்கீகாரம் ஆகும் என்று டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“பழங்குடியின பெண் ஒருவர் முதல் முறையாக நமது நாட்டின் குடியரசுத் தலைவராக மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டிருப்பது சமூகநீதி, பெண்களின் விடுதலை, பெண்களுக்கு அதிகாரம் என்று கடந்த 70, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மேடைகளில் வெறும் வாய்ஜாலம் மட்டுமே காட்டிவரும் மாநிலக் கட்சிகள் பலவற்றுக்கு கிடைத்த சரியான சவுக்கடியும் கூட. ஏனென்றால் அந்தக் கட்சிகள் தங்களது சுயலாபம் கருதியும், பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பெயரிலும் சமூகநீதியை மூட்டை கட்டி வைத்து விட்டன.

சைலண்ட் மோடில் திருமா

அதுவும் தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எந்த நேரமும் பட்டியலின, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு நாட்டில் எதுவும் நடக்கவில்லை, அவர்களுக்கு சமூகத்தில் அநீதிதான் இழைக்கப்படுகிறது என்று கொந்தளிப்பார். ஆனாலும் முதல் முறையாக குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்க அவருக்கு மனம் வரவில்லை. மாறாக பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவை தெரிவித்தார்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஜார்கண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் ஆதரவுடன் தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை நடத்தி வருகிறது. ஆனால் அந்தக் கட்சியே கூட, முதல் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில், பழங்குடியின பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுகிறார் என்பதால் அவரை நிறுத்தியது யார் என்ற ஆராய்ச்சியில் எல்லாம் இறங்காமல் முர்முவுக்கு
ஆதரவாக வாக்களித்துள்ளது. அதேபோல மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்பி எம்எல்ஏக்களும் காங்கிரஸ் நிறுத்திய எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் என்பதற்காக யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்காமல் முர்முவுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

தலைகுனியும் தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள்

ஆனால் தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் உறுதியாக உள்ளதாக கூறும் ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பழங்குடியின பெண் ஒருவர் போட்டியிடுகிறார் என்பதை கண்டு கொண்டது போலவே தெரியவில்லை. என்றபோதிலும் பெரும்பாலான எம்எல்ஏக்கள் எம்பிக்களின் ஓட்டுகளை அள்ளிக்குவித்து திரவுபதி முர்மு வெற்றிவாகை
சூடிவிட்டார்.

அவருக்கு எதிராக வாக்களித்த தமிழக எம்பிக்கள் எம்எல்ஏக்களும், அவர்களின் கட்சி தலைவர்களும் முர்முவை சந்திக்க நேர்ந்தால் நமது எதிர்ப்பையும் மீறி வெற்றி பெற்றுவிட்டாரே என்று தான் மனதுக்குள் நினைப்பார்கள். அந்த அளவிற்கு மகத்தானதொரு வெற்றியை முர்மு பெற்றிருக்கிறார்.

திருமாவுக்க பலத்த அடி

பாஜகவை பொறுத்தவரை, திருமாவளவனை பெரிய அரசியல் கட்சி தலைவராக கருதவில்லை. ஆனால் சமீபகாலமாக கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தன்னை பட்டியலின சமூக மக்களின் ஏகோபித்த ஒரு தலைவர் போல் கருதிக்கொண்டு அவர் பேசுவதுதான் பாஜகவுக்கு எரிச்சலூட்டுகிறது. அதனால் முர்முவின் அபார வெற்றியானது திருமாவளவனுக்கு விழுந்த பலத்த அடியாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

உண்மையில் சமூக நீதியை பின்பற்றுவதில் பாஜக அதிக அக்கறை செலுத்துகிறது என்பதே உண்மை. முதலில் 2002ல் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இஸ்லாமியருமான அப்துல் கலாமுக்கு குடியரசுத் தலைவர் வாய்ப்பை பாஜக உருவாக்கிக் கொடுத்தது. 2017 குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டியலின வகுப்பை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை நிறுத்தி இரண்டாம் முறையாக நிரூபிக்கவும் செய்தது. அதேபோல தற்போது திரவுபதி முர்மு மூலம் அதை மக்கள் மனதில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் திருமாவளவன் போன்ற மாநில கட்சிகளின் தலைவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி பாஜக என்பதை புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Views: - 572

0

1