GST தெரியாத திருமா…! ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை!!

Author: Babu Lakshmanan
28 September 2021, 11:28 am
GST - thiruma - updatenews360
Quick Share

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை வெற்றி கண்டவர்.

பட்டதாரி திருமாவளவன்

2009 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வானவர். 2001-ல் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். எம்.ஏ. பட்டதாரியான அவர் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டமும் பயின்றவர். பிஎச்டியும் முடித்திருக்கிறார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் அதிகம் படித்தவர் என்ற வரிசையில் அவருக்கும் ஓர் இடம் உண்டு. எந்த ஒரு விஷயத்தையும், புள்ளிவிவரங்களுடனும் நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அனல் பறக்க பேசுபவர் என்றும் 59 வயது திருமாவளவனை கூறுவார்கள்.

ஜிஎஸ்டியால் வம்பு

ஆனால், அண்மையில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசுவதாக கருதி ஜிஎஸ்டி பற்றி கருத்து தெரிவித்து, சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். சர்ச்சை என்று கூறுவதைவிட தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டு இருக்கிறார் என்பதே பொருத்தமாக இருக்கும். அவருடைய அந்த தத்து பித்து பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.

40 நிமிடம் அளித்த அந்தப் பேட்டியில், GST அதாவது சரக்கு சேவை வரி குறித்து நேர்காணல் கண்டவரிடம், திருமாவளவன் எதிர்க் கேள்விகளை வைக்கிறார். ஆனால் அவர் வைக்கும் வாதங்கள் அத்தனையும் படுசொத்தையாக இருப்பது பளிச்சென்று, தெரிகிறது. அவருக்கு ஜிஎஸ்டி பற்றி எவ்வித புரிதலும் இல்லை என்பதையும் உணர்த்துவதாக இருந்தது.

Courtesy : thanthi tv

அதுமட்டுமின்றி, அந்த நேர்காணல் முழுக்க அவர் தட்டுத்தடுமாறி பேசுவதையும் காண முடிகிறது.

“பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் தேவையில்லை. என்னைப்பொறுத்தவரை பழைய வரிவிதிப்பு முறையை போதுமானது. ஜிஎஸ்டி வரியே வேண்டியதில்லை. அதனால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்புதான் ஏற்படுகிறது.

ஒரு தாதாவிடம் வசூல் செய்து கொடுத்துவிட்டு அவரிடம் கமிஷன் கேட்டு வாங்குவதுபோல் ஜிஎஸ்டி உள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்?”என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார். அதாவது முன்பிருந்த பலமுனை வரிவிதிப்பு முறையே தொடரவேண்டும் என்பது அவருடைய வாதம்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பேட்டி கண்ட பெண்மணி ஜிஎஸ்டி பற்றி அவருக்கு திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லியும் கூட அதை புரிந்துகொள்ளாமல் திருமாவளவன், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே கூறிக் கொண்டிருந்தது, பார்ப்பவர்களுக்கு எரிச்சலூட்டுவதாகத்தான் இருந்தது. வழக்கமாக சாதுர்யமாக சமாளித்துப் பேசும் அவர் ஜிஎஸ்டி விஷயத்தில் பதில் கூறமுடியாமல் திணறுவதையும் காண முடிந்தது.

காமெடி கமெண்ட்டுகள்

இதுபற்றி நெட்டிசன்கள் அவரை கலாய்த்த கமெண்ட்களை இங்கே பார்ப்போம்.

“விளங்கும் இவரை நம்பி ஒரு கூட்டம்.

அவர் சொல்ற உதாரணத்தை பாருங்க. ஒரு தாதா வசூல் செய்து பிரித்து கொடுக்கிற மாதிரியாம். அந்த தாதா புத்தி போகவே போகாது போல…

அவருக்கு எதைப் பற்றியுமே தெரியாதுங்க.

ஜிஎஸ்டி என்றால் என்ன
என்று தெரியாமலேயே பேட்டி கொடுத்த மங்குனி.

பேட்டியின்போது திருமா நிதானத்தில்தான் இருந்தாரா?

GST_UpdateNews360

10-ம் வகுப்பு மாணவன் கூட ஜிஎஸ்டி பற்றி அழகாகச் சொல்வான்.

ஜிஎஸ்டி பத்தியே தெரியாத தற்குறிகளையெல்லாம் எம்பி ஆக்கி வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களின் மடத்தனம்.

இப்போ சினிமால வடிவேலு இல்லாத குறையை போக்கிட்டார், திருமா.

கேள்வி பத்தியே தெரியாதவரிடம் கேள்வி கேட்டா தத்தி மாதிரி தான் பதில் வரும்.

திமுகவுக்கு முட்டுக்கொடுக்க போய் திரு திருன்னு முழிக்கிறார், திருமா!

அப்பப்பா அது வந்து… ஐயோ என்ன சொல்வேன் நானு. ஒரு நிமிஷம் வக்கீல் வண்டு முருகனை ஞாபகப்படுத்திட்டீங்க…

ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி ஒன்னுமே தெரியல. இதுல ஜிஎஸ்டியே வேணாமாம்”

பேட்டி கண்ட பெண்மணியும், திருமாவளவனும் பேசுவதை ரிப்பீட் செய்து ஒருவர் போட்ட கமெண்ட்.

“ஜிஎஸ்டி வந்தாலும் செஸ் போடுவாங்க…

இல்லை அதெல்லாம் போட மாட்டாங்க…

அப்படித்தான் எங்க அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறோம்”

இப்படி 200க்கும் மேற்பட்ட லக லக காமெடி கமெண்ட்டுகள், திருமா மீது குவிந்திருக்கின்றன.

சிதம்பரம் சிரித்திருப்பார்..?

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “இந்த பேட்டியை பார்த்தவர்கள், திருமாவளவன் மீது கொண்டிருந்த மிச்சம், மீதி நல்லெண்ணத்தையும் நிச்சயமாக மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு பிரபல செய்தி சேனலுக்கு பேட்டி அளிக்கிறோம் என்றால் அதன் முக்கிய பேசு பொருள் என்ன என்பதை முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். ஏனென்றால், அந்த விஷயத்தை அவர்கள் தெரிந்துகொண்டு பேட்டியளித்தால் அந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் அமையும் என்பது நேர்காணல் காணும் சேனலின் நம்பிக்கை.

ஆனால், இந்தப் பேட்டியைப் பொறுத்தவரை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், திருமாவளவன் அசடு வழிவதை பல இடங்களில் காண முடிந்தது. உண்மையிலேயே அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்தானா? என்ற கேள்வியையும் அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களிடம் அது எழுப்பியிருக்கும்.

நாடாளுமன்றத்தில் 7 வருடங்களுக்கும் மேலாக எம்பி பதவியில் இருக்கிறார். ஒருமுறை சட்டப்பேரவைக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய பேட்டி படு சொதப்பலாக இருந்தது. பேட்டி கொடுத்தவர் அவர்தானா?…என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இவர், நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்கிறாரா? என்கிற கேள்வியும் எழுகிறது.

p_chidambaram_updatenews360

சரி, சரக்கு சேவை வரி பற்றி அவருக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் கூட முன்பிருந்த பலமுனை வரிகளில் இருந்த சிக்கல் பற்றி அவருக்கு தெரிந்திருக்கும். அதனால் அவர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் என்றுதான் கருதவேண்டி உள்ளது. அவருடைய பேட்டியை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பார்த்திருந்தால் நிச்சயம் வாய்விட்டு சிரித்து இருப்பார்.

சிறுத்தை பூனையானது

இப்போதிருக்கும் ஆட்சி முறை சரியில்லை. பேசாமல் நாட்டை வெள்ளைக்காரர்களிடமே மீண்டும் ஒப்படைத்து விடலாம் என்று கூட திருமாவளவன் சொல்வார் போலிருக்கிறது.

ஜிஎஸ்டியில் மட்டுமின்றி நீட் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கும் திருமாவளவன் தடுமாறியதை பார்க்கும்போது, அவர் பதுங்குகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

Thiruma - Updatenews360

நீட் தேர்வு தொடர்பாக முந்தைய அதிமுக அரசை நாங்கள் அவ்வளவாக கண்டிக்கவில்லை. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசைத்தான் கடுமையாக எதிர்த்தோம், என்கிறார். ஆனால் 2017 செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை அதிமுக அரசு பதவி விலகவேண்டும் என்று கோரி எத்தனை முறை அவருடைய கட்சியும் திமுகவும் நீட் போராட்டங்களை நடத்தின என்பதை மக்கள் மறந்து விடவில்லை.

திருமாவளவனுக்கு வேண்டுமானால் ‘செலக்டிவ் அம்னீஷியா’, அதாவது குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே மறக்கும் நோய் இருக்கலாம். ஆனால் அனைவரையும் அவரைப்போல் நினைப்பது தவறு. கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு விஷயத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சீறிப்பாய்ந்த சிறுத்தை, தற்போது திமுக ஆட்சியில் நீட் தேர்வு நடந்து விட்டதால் விழி பிதுங்கிப்போய் பூனைக்குட்டி ஆக மாறி பதுங்கிவிட்டது என்பதே உண்மை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 223

0

0