விஸ்வரூபம் எடுத்த ரூ.2000 கோடி விவகாரம்…! பாஜக வைத்த ‘செக்’… சிக்கலில் திணறும் திருமாவளவன்!!

Author: Babu Lakshmanan
1 December 2021, 4:57 pm
thiruma - bjp - updatenews360 (2)
Quick Share

சமீபகாலமாக, விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் எதைச் செய்தாலும், அது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது.

சேரில் வித்தை

இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை வேளச்சேரியில், தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து புறப்பட்ட திருமாவளவன் தனது ஷூ மழைநீரில் நனைந்து விடக்கூடாது என்பதற்காக விசிக தொண்டர்கள் வரிசையாக வைத்த நாற்காலிகளில் தாவித்தாவி நடந்தார். தொண்டர்கள் அந்த நாற்காலிகளை தொடர்ந்து இழுத்து வர கடைசியில் அதிலிருந்தவாறே குதித்து தனது காருக்குள் உட்கார்ந்து பயணித்தார்.

இந்த வீடியோ காட்சி சமூக ஊடங்களில் வெளியானதை வைத்து தமிழக பாஜகவினர் “என்ன திருமா சார், கூட இருக்கிறவங்களை இப்படித்தான் நடத்துவீர்களா?… சமூக நீதி சமத்துவம் என்று கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா?… மழைத்தண்ணீரில் கால் வைத்து உங்களால் நடக்க முடியாமல் பூர்வகுடி மக்களை அதிகாரம் பண்ணலாமா?” என்று கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினர்.

வழக்கமாக இதுபோன்று சமூக ஊடங்களில் பாஜகவினர் எழுப்பும் கேள்விகளுக்கு, திருமாவளவன் நேரடியாக பதில் சொல்லவே மாட்டார். அவருடைய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுதான் கொந்தளித்து பதில் அளிப்பது வழக்கம்.

திருமா., விளக்கம்

ஆனால் ஒரு சில தனியார் செய்தி சேனல்களிலும் இது பற்றிய செய்தி விரிவாக ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் தனது இமேஜ் முற்றிலுமாக டேமேஜ் ஆகிவிடும் என்று கருதியோ என்னவோ உடனடியாக திருமாவளவனே ஒரு விளக்கம் கொடுத்தார். “டெல்லி கிளம்பியதால் புதிய உடை அணியவோ, ஷூவை கழற்றவோ முடியாது. விமானத்திற்கு தாமதமாகும் என்பதால் தண்ணீர் படாமல் நாற்காலிகள் மீது நடந்து சென்றேன். நான் கீழே விழாமல் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள்.

Thirumavalavan - updatenews360

அடிமைப்படுத்துதல் போன்ற மனநிலை எனக்கு இல்லை என்பது என் மீது குற்றம்சாட்டும் பாஜக போன்ற கட்சிகளுக்கு தெரியும். பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு எங்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேநேரம் பாஜகவினர் இதுபோல நடந்து கொண்டிருந்தால் திருமாவளவன் அதை பூதாகரமாக்கி இந்துத்துவா, சனாதன தர்மம் என்றெல்லாம் நீட்டி முழங்கி இருப்பார். அரசியல் ரீதியாக பேச வேண்டிய விஷயங்கள், பிரச்சனைகள் எத்தனையோ இருந்தாலும் கூட சுற்றிச்சுற்றி ஆதிக்க சக்தி, சமூகநீதி என்றே வலம் வந்து கொண்டிருப்பார்.

சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டார். போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று குதிப்பார் என்ற விமர்சனமும் அவர் மீது வைக்கப்படுகிறது. மேலும் தான் செய்தது தவறு என்பதை இதில் அவர் ஒப்புக்கொள்ளாமல் பூசி மெழுகி இருக்கிறார், என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ரூ.2,000 கோடி சொத்து

திருமாவளவன் மீதான இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராஜன் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கடந்த 4 நாட்களாக வேகமாக பரவி, அது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதில் அவர் “திமுக, கிறிஸ்துவ, இஸ்லாமிய உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அமைப்புகளிடமிருந்து திருமாவளவன் பணத்தைப் பெற்று இருக்கிறார். எங்களது நினைவுக்கு எட்டியவரை 2000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்திருக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

thiruma - udpatenews360

திருமாவளவன், 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு, 58 லட்சத்து 71 ஆயிரத்து 292 ரூபாய்க்கு அசையும் சொத்துகளும் 18 லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிற்கு அசையா சொத்துகளும் என மொத்தம் 76 லட்சத்து 99 ஆயிரத்து 92 ரூபாய் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

2014 தேர்தலின்போது அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 76 லட்சத்து 50 ஆயிரத்து 241 ரூபாய் ஆக இருந்தது. அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் அவரது சொத்தின் மதிப்பு 48 ஆயிரத்து 851 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. அப்படி இருக்கும்போது திடீரென திருமாவளவன் 2000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருக்கிறார், என்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரம் தற்போது இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக பாஜகவினர், இதை தங்களுக்கு கிடைத்த துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அரசியல் ஆட்டத்தை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து டெல்லி பாஜக மேலிடத்தின் கவனத்திற்கும் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

மவுனம்

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “திருமாவளவன் மீது ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நாகராஜன் மிகப் பெரியதொரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதுவும் அவர் யாரிடம் இருந்து பணம் வாங்கி இருக்கிறார் என்பதையும் பட்டவர்த்தனமாக கூறுகிறார். சொல்கிறவர் பெரியவரா? சிறியவரா? என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பிட்ட சில மத அமைப்புகளிடமிருந்து திருமாவளவன் பணம் வாங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் அவையெல்லாமே அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பொத்தாம் பொதுவாக இருந்ததே ஒழிய யாரும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அந்த குற்றச்சாட்டை கூறவில்லை. இப்போது முதல்முறையாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒரு தலைவரே, திருமாவளவன் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு வைக்கிறார். ரோட்டில் போகிற யாரோ ஒருவர் இந்த குற்றச்சாட்டை கூறவில்லை.

THirumavalavan - updatenews360

நாகராஜன் சொல்வது பொய்யான குற்றச்சாட்டு என்றால் அதை உடனடியாக மறுக்க வேண்டியது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருடைய பொறுப்பு. இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றால் குற்றச்சாட்டை கூறியவர் மீது மான நஷ்ட வழக்கும் தொடரலாம். ஆனால் நான்கு நாட்கள் ஆகியும் திருமாவளவன் இதற்கு பதில் சொல்லவில்லை.

பாஜக ‘செக்’

இதற்கு அவர் தெளிவான பதிலை அளிக்காமல் போனால் அவர் மட்டுமின்றி அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வருமான வரி சோதனைக்கு உள்ளாக நேரிடலாம். மத்திய அமலாக்கத் துறையும், தேசிய புலனாய்வு அமைப்பும் கூட இதில் தலையிடும் வாய்ப்பு உள்ளது.

மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும், இந்துக்களையும் தொடர்ந்து திருமாவளவன் கடுமையாகத் தாக்கிப் பேசி வருவதால் தமிழக பாஜகவினர் இந்த இரண்டாயிரம் கோடி ரூபாய் சொத்து குவித்த விவகாரத்தில் திருமாவளவன் எளிதில் சிக்கி விடுவார் என்று காய்களை நகர்த்தத் தொடங்கி இருக்கின்றனர்.

சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரிது படுத்திப்பேசும் திருமாவளவன் இதை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிப் போய் விடக்கூடாது. ஏனென்றால் இன்றைய இளைஞர்களில் 90 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை அலசி ஆராய்கிறார்கள். இதை மறுக்காத பட்சத்தில், திருமாவளவன் மீது இளைய தலைமுறையினருக்கு அவ நம்பிக்கைதான் ஏற்படும்.

BJP_FLAG_UpdateNews360

எனவே உடனடியாக இதில் தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டியது, அவசியம்.
மழை நீரில் ஷூ நனையாமல் இருக்க தொண்டர்கள் பிடித்துக் கொண்ட நாற்காலிகள் மீது நடந்ததற்கு திருமாவளவன் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது.
அவரால் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியவில்லை என்பதும் அதில் தெரிகிறது. இரண்டாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறப்படும் இந்த விவகாரத்திலும் வழவழ கொழகொழ வென்று பிரச்சனையில் இருந்து நழுவிக் கொள்வதுபோல் அவர் விளக்கமளிக்காமல் தெளிவாக பதில் கூறவேண்டும் என்பது மிக முக்கியம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தினர்.

விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம் திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 489

0

0