2016 தேர்தலில் தலைமையேற்க பாஜக அழைத்தது… திருமா., கிளப்பிய திடீர் சர்ச்சை!! தமிழக அரசியலில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
24 November 2021, 11:52 am
Thiruma - bjp - updatenews360
Quick Share

தமிழக அரசியலில் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை எழுவதும் பின்பு சில நாட்களில் அது அடங்கிப் போவதும் வழக்கமான ஒன்று. இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை கூறுவதில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இணை யாரும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

பாஜக முதலமைச்சர் வேட்பாளர்

அண்மையில், அவர் அளித்த பேட்டியில் ஒரு சர வெடியை கொளுத்தி போட்டார். அது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Thirumavalavan - updatenews360

அதாவது பாஜக தலைமை தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயாராக இருந்தது, என்பதுதான் அது.

ஒரு யூ டியூப் சேனலுக்கு அளித்த அந்த பேட்டியில் அவர் கூறும்போது,”2016 ம் ஆண்டிலேயே மக்கள் நலக் கூட்டணியை கலைத்துவிட்டு நீங்கள் வெளியே வாருங்கள். எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குங்கள். உங்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயாராக இருக்கிறோம். நீங்கள் வருவதாக இருந்தால் பாமக வெளியே சென்றாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

உங்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறோம். அதைவிட என்ன ஒரு மாற்றம் வேண்டும்? இன்றைக்கு உங்களுக்கு ஒரு சாதிக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள், உங்களை எதிரியாக நினைக்கும் மற்ற சாதியினர், நீங்கள் பாஜகவுக்கு வந்தால் ஒரே நிமிடத்தில் சாதித் தலைவர் என்ற முத்திரையை நீக்கி, பொதுத் தலைவர் என்ற இமேஜ் உருவாகிவிடும். நீங்கள் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டாம். சமூக இயக்கத் தலைவர்களை சந்தியுங்கள். 

அரசியல் கட்சிகளிடம் விளக்கம் சொல்லி எந்த பயனும் இல்லை. சமூக இயக்கத் தலைவர்களும் சந்தித்து விளக்கம் சொல்லுங்கள் என்று கூறினார்கள். ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் காட்டிய ஆசைக்கு மயங்கவில்லை. மத்திய அமைச்சர் பதவி கூட தருகிறேன் என்றும் கூறினார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை நட்பை பேணும். அதேசமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சமரசம் செய்து கொள்ளாது” எனத் தெரிவித்தார்.

பாஜக கிண்டல்

திருமாவளவனின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர் தனது ட்விட்டர் பதிவில், “கேக்க ஆள் இருந்தால் கேப்பையிலும் நெய் வடியுமாமே” என்று கிண்டலாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதாவது, விசிக தலைவர் திருமாவளவன் நன்றாக கதை விடுகிறார். அது கேட்பதற்கு சுவையாக இருக்கிறது. ஆனால் அதை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற அர்த்தத்தில் இப்படி கூறியிருக்கிறார்.

கயிறு திரிக்கும் திருமா.,

இதுபற்றி தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “திருமாவளவன் இப்படி சொல்லி இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ஏனென்றால் அவர் பாஜகவால் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அழைக்கப்பட்டதாக கூறப்படும் காலகட்டத்தில் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மாநில பாஜக தலைவராக இருந்தார். அவர் இப்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் கூடுதல் துணைநிலை ஆளுநராகவும் பதவி வகிக்கிறார். ஆளுநராக இருக்கும்போது அவரால் வெளிப்படையாக அரசியல் பேச முடியாது என்பதால் அதை சாக்காக வைத்து திருமாவளவன் கயிறு திரிக்கிறார்.

இன்னொரு விஷயம் மக்கள் நலக் கூட்டணி என்பது 2016 தேர்தலுக்காக அவசரகதியில் உருவானது. அதற்கு கொள்கையே கிடையாது. மேலும் விஜயகாந்த்தை நம்பித்தான் அவருடைய தலைமையில் அந்த கூட்டணியே அமைந்தது. திருமாவளவன் தலைமையில் அல்ல.

தேர்தல் முடிந்த பிறகு அந்த கூட்டணி கலைந்து விட்டது. அதன்பிறகு மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தங்களது அரசியல் லாபம் கருதி திமுகவுடன் சேர்ந்து கொண்டன. விஜயகாந்த் அம்போவென்று தனித்து விடப்பட்டார். இதுதான் அவர்களுடைய கொள்கை. அரசியலில் லாபம் இருந்தால் மட்டுமே இவர்கள் ஓரிடத்தில் இருப்பார்கள். இல்லையென்றால் அங்கிருந்து ஓடி விடுவார்கள்.

வடிகட்டிய பொய்

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் பாமக இருந்தது உண்மைதான்.
அதேநேரம் 2016 பிப்ரவரி மாதமே டாக்டர் அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக பாமக அறிவித்துவிட்டது. அதனால் இயல்பாகவே பாஜக-பாமக கூட்டணி முறிந்து போனது. மேலும் அப்போது திருமாவளவன் மக்கள் நலக்கூட்டணியில் 5-வது தலைவராகத்தான் இருந்தார்.
எனவே அவர் மட்டுமே எப்படி கூட்டணியை கலைக்க முடியும்?

அவ்வாறு இருக்கும்போது, நீங்கள் வருவதாக இருந்தால் பாமக வெளியே சென்றாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்று பாஜக எப்படி கூறியிருக்கும்? அவர் சொல்வது வடிகட்டிய பொய். மேலும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அண்ணன்- தம்பி போல் பாமகவும், விசிகவும் இருந்தன என்பதையும் மறந்துவிட முடியாது.

Thiruma updatenews360

ஒருவேளை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்குமோ என்ற ஏக்கத்தில் திருமாவளவன் இப்படி பேசியிருக்கலாம்.

தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதால்தான் கிராமங்களில் கூட சங்பரிவார் அமைப்பினர் ஊடுருவி விட்டனர் என்று அவர் புலம்புகிறார்.

பாஜகவின் வளர்ச்சியை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் மித மிஞ்சிய கற்பனையில் திருமாவளவன் இஷ்டம்போல் பேசுகிறார்.

கிராமங்களில் பாஜக வலு அடைந்துவிட்டால் தனது கட்சியின் சித்தாந்தம் கிராம மக்களிடம் அடிபட்டுப் போய்விடுமே என்று பயப்படுவதால் இப்படி கதறுகிறார். தமிழகத்தில் பாஜக விரைவிலேயே வலுவான சக்தியாக மாறிவிடும் என்பதும் நன்றாக அவருக்குத் தெரிகிறது. அதனால்தான் கடந்த 5 வருடங்களாக இதுபற்றி பேசாத திருமாவளவன் இப்போது புதுக் கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்” என்று அவர்கள் காட்டமாக குறிப்பிட்டனர்.

சிறுத்தை ஏன் பதுங்கியது

அரசியல் விமர்சகர்கள் இது பற்றி பேசும்போது, “2004 நாடாளுமன்றத் தேர்தலின் போதே, தனக்கு போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்க முன் வந்ததாகவும் அதை, தான் மறுத்துவிட்டதாகவும் இப்போது திருமாவளவன் கூறுகிறார். ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் இதுபற்றி யாரும் தன்னை கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் இப்படி கூறியிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது. இது நாகரீகமான கருத்தாக தெரியவில்லை. ஏனென்றால் கடந்த 17 வருடங்களில் அவர் இதுபற்றி மூச்சுவிட்டதே இல்லை.

அதனால் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை பாஜக போட்டியிட அழைத்தது என்று இப்போது கூறுவதையும் கட்டுக்கதையாகவே கருதத் தோன்றுகிறது.

கடந்த 6 மாதங்களில் அவரிடம் ஒரேயொரு மாற்றம் மட்டுமே பளிச்சென்று தெரிகிறது.
தற்போது மிகப் பொறுமையாக பேசி தன்னை ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதிபோல காட்டிக் கொள்கிறார். உண்மையில் முன்பிருந்த வீராவேசம் இப்போது அவரிடம் கொஞ்சமும் இல்லை. தோழமையின் சுட்டுதல் கூட காணப்படவில்லை. சிறுத்தை ஏன் பதுங்கியது என்றுதான் தெரியவில்லை” என்றனர்.

Views: - 336

0

0