திமுகவின் இந்தி எதிர்ப்பு, திணிப்பாக மாறியது எப்படி…? திருமாவளவன் அடித்த திடீர் யூ டேர்ன்…!

Author: Babu Lakshmanan
25 October 2022, 5:53 pm
Quick Share

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அவ்வப்போது ஏதாவது வீராவேசத்துடன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிப்பதையும், அதற்கு தமிழக மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பினால் அடுத்த சிலநாட்களில் அப்படியே யூ டேர்ன் அடிப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

ஆ.ராசா

கடந்த மாதம் 6ம் தேதி திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா தற்போதைய நீதித்துறை நிகழ்வுகள் சிலவற்றை ஒப்பிட்டு பொதுவெளியில் இந்துக்களை மிகவும் இழிவு படுத்திப் பேசினார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

A Raja 1 - Updatenews360

இந்த விவகாரத்தில் பாஜகவுடன், அதிமுகவும் சேர்ந்து கொண்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆ ராசாவின் சொந்த தொகுதியான நீலகிரிலேயே மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக பாஜகவினர், இந்து அமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த மாவட்டத்தில் நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டமும் வெற்றி பெற்றது.

ஆனால் மனு ஸ்மிருதியில் இருப்பதைதான் நான் குறிப்பிட்டேன் என்று
எந்தக்காலத்திலோ யாரோ எழுதிய, இன்று நடை முறையிலேயே இல்லாத ஒன்றை சொல்லி, இந்த விவகாரத்தை ஆ ராசா மேலும் விஸ்வரூபம் எடுக்க வைத்தார்.

திருமா., ஆதரவு

அப்போது உடனடியாக விசிக தலைவர் திருமாவளவன், இந்துக்கள் பற்றி ஆ ராசா சொன்னதில் எந்த தவறும் கிடையாது என்று ஆதரவுக் குரல் கொடுத்தார். அவருக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வேறு வழியின்றி, மனு ஸ்மிருதியில் உள்ளதைத்தான் நானும் சொன்னேன். நாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை சனாதனத்தைதான் எதிர்க்கிறோம்” என்று திரும்பவும் ஜகா வாங்கினார்.

thirumavalavan - updatenews360

அடுத்ததாக திருமாவளவன் தற்போது, திமுகவின் இந்தி எதிர்ப்பு கொள்கையை கையில் எடுத்துள்ளார்.

இந்தி எதிர்ப்பு

அண்மையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

udhayanidhi - updatenews360

அப்போது திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி பேசும்போது, “இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திமுக. ஆளும் கட்சி என்பதால் மட்டுமே இந்தியை எதிர்க்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தோடு ஏதோ கோஷமிட்டோம், எதிர்ப்பு தெரிவித்தோம் கலைந்து விட்டோம் என்று நாங்கள் இருக்க மாட்டோம். நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை கொண்டு வந்தாலும் எங்களது ஒரே பதில் ’இந்தி தெரியாது போடா’ மூன்று மொழிப்போரை திமுக சந்தித்துள்ளது. மீண்டும் நீங்கள் இந்தியை திணித்தால் முதலமைச்சரின் ஆணையைப் பெற்று டெல்லியிலும் போராட்டம் நடக்கும். இந்தியை எப்போதும் எதிர்ப்போம். மீண்டும் மொழிப்போர் ஏற்படுத்த வேண்டாம்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

பாஜக கடுப்பு

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக பதிலடி கொடுத்தார். “உதயநிதி தமிழகத்தில் இந்தி சினிமா படங்களை விற்பதற்காகவும், இந்தி நடிகைகளை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காகவும் தற்போது இந்தி மொழியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என கூறுகிறார்.

ஆனால் இந்தியை பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய சாதனை கணக்கெடுப்பில் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 25 சதவீத மாணவர்கள் மட்டுமே தமிழில் பிழையின்றி எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது. பல காலமாக இந்தி எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு தமிழில் கோட்டை விட்டதன் விளைவு தான் இது.

Annamalai Condemned - Updatenews360

தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27-ம் தேதி தமிழக பாஜகவின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்! நமது தமிழ் மொழியை பாது காப்போம்” என்று கடுமையாக சாடினார்.

பாஜகவின் தேசிய மகளிர் அணிசெயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏவோ இன்னும் ஒருபடி மேலே சென்று திமுகவை அட்டாக் செய்தார்.

அவர் கூறும்போது, “இந்தியை எதிர்க்கிறோம். தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு என பேசும் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் படிக்க வைக்கின்றனரா என்பது குறித்து திமுக பட்டியல் வெளியிட தயாரா? திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக திமுக தலைமை வெளியிட வேண்டும். தமிழில் மருத்துவ படிப்பு வரும் போது அதை திமுக ஏற்குமா? எதிர்க்குமா? அதில் என்ன நிலைப்பாடு என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

திருமா., குட்டிகரணம்

இதற்கிடையே உதயநிதியின் ஆவேசமான பேச்சுக்கு முதலில் திருமாவளவன் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

ஆனால் தமிழகத்தில் வெளியிட இந்தித் திரைப்படங்களின் உரிமையை உதய நிதி வாங்கி லாபம் பார்க்கிறார். இந்தியில் புகழ் பெற்ற சினிமா பட கதாநாயகிகளையும் இங்கே கொண்டு வருகிறார். திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் எத்தனை பேர் சிபிஎஸ்இ பள்ளிகளை தமிழகத்தில் நடத்தி இந்தி மொழியை கட்டாயமாக மாணவரிடம் திணிக்கிறார்கள் என்று பாஜக கிடுக்குபிடி கேள்விகளை எழுப்ப திருமாவளவன் இந்த விவகாரத்திலும் ஒரு குட்டி கரணம் போட்டு இருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி படிப்பதோ கற்றுக்கொடுப்பதோ பிரச்சனையில்லை. ஆனால், இந்தி பேசாத பிற மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களின் மீது திணிப்பது எதேச்சதிகார போக்கு. இது அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் சொல்கிற பன்மைத்துவத்துக்கு எதிரான ஒரு கொடூரமான ஒடுக்குமுறை போக்கு” என்று
தற்போது அடக்கி வாசித்திருக்கிறார்.

thirumavalavan - updatenews360

சரி, அரசியல் ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள்?…

“தமிழகத்தில் 2006-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில்
55 சிபிஎஸ்இ பள்ளிகள்தான் இருந்தன. 2019-ல் அது 1171 ஆக அதிகரித்தது. தற்போது 1700க்கும் அதிகமான சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்களுக்கு இந்தி மொழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது.

இதில் சில நூற்றுக்கணக்கான சிபிஎஸ்இ பள்ளிகள் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமானது என்றும் . திமுகவினர் நடத்தும் இந்த பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதமும் உண்டு எனவும் கூறப்படுகிறது.
இதனால்தான் இந்தி எதிர்ப்பு என்று திமுக போடுவதெல்லாம் வெளிவேஷம் என்ற குற்றச்சாட்டை தமிழக பாஜக முன்னெடுக்கிறது. விரைவில் இது தொடர்பான பட்டியல் ஒன்றும் சேகரித்து வெளியிடப்படும் என்று பாஜக அதிரடியாக கூறி இருக்கிறது. இந்த பீதியில்தான் திமுகவை தீவிரமாக ஆதரிக்கும் திருமாவளவன் போன்ற ஒரு சில தலைவர்கள் தற்போது இந்தி படிப்பதோ, கற்றுக்கொடுப்பதோ பிரச்சனையில்லை என மடை மாற்றம் செய்யத் தொடங்கி விட்டனரோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது.

அதனாலேயே தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகரித்து வருவது பற்றி அவர்கள் வாய்திறப்பதும் இல்லை.

தவிர எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இங்கே தமிழ் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், அண்மையில் மன வேதனையோடு கூறிய ஒரு தகவலையும் குறிப்பிட்டாக வேண்டும்.

மூன்று லட்சம் சொற்களை கொண்ட தமிழ் களஞ்சியத்தில் இருந்து, 50 சொற்களைக் கூட கையாளத் தெரியாத ஒரு இனமாக தமிழ் இனம் மாறிக் கொண்டிருக்கிறது. பிற மொழி சொற்கள் கலக்காமல் பேசவோ, நான்கு வரிகள் பிழை இன்றி தமிழை எழுத முடிவதில்லை. ஆனால், எதற்கெடுத்தாலும் சங்க இலக்கியங்களை பெருமையாக மேற்கோள் காண்பித்து, தமிழை ஓசையில்லாமல் அழித்து வருகிறோம். தமிழர்கள் எனும் பெயரில் சிறிதும் குற்ற உணர்வின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Views: - 347

0

0