ஏமாற்றி கர்ப்பமாக்கியதால் அவமானத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை : டிரைவருடன் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வார்டன்..!!

Author: Babu Lakshmanan
19 January 2022, 5:17 pm
Quick Share

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதால் அவமானம் அடைந்து விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதால் அவமானம் அடைந்து விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். கர்ப்பத்துக்கு காரணமான டிரைவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் கர்ப்பமானதை போலீசுக்கு தெரிவிக்காததால் தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, சென்னை கோவளத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார். இவர் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், பெற்றோர் சென்னைக்கு வந்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.

இந்த சூழலில் அவர் வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசாரி மாணவியிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால், அவர் போதிய உடல்நலம் இல்லாததால், பக்குவமாக பேசி, கர்ப்பத்திற்கு காரணமானவர் விபரத்தை அறிந்து கொண்டனர். அப்போது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரிபிரசாத் (31) என எழுதி காட்டினார். அவர் மாணவியின் வீட்டருகே வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.

விடுமுறை நாட்களில் மாணவி வீட்டிற்கு வரும் போது, அவரிடம் ஆசைவார்த்தைகள் கூறி ஓட்டுநர் அரிபிரசாத் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், மாணவி கர்ப்பம் தரித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாணவி படித்த சென்னை உண்டு உறைவிட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் அதிர்ச்சியும் வெளிவந்தது.

மாணவி கர்ப்பமாக இருந்த விவகாரம் வார்டன் செண்பகவள்ளி (35) மற்றும் தலைமை ஆசிரியர் குமரகுருபரன் (51) ஆகியோருக்கு ஏற்கனவே தெரிந்தும் பெற்றோரிடம் அதனை மறைத்துள்ளனர். இதையடுத்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக தலைமை ஆசிரியர் குமரகுருபரன் மற்றும் செண்பகவள்ளியை விசாரணைக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, விஷம் குடித்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன்னை ஏமாற்றி கர்ப்பிணியாக்கியதால் அவமானம் தாங்காமல் மாணவி விஷம் குடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 304

0

0