தீவிரமடைந்த தந்தை, மகன் மரணம் வழக்கு : சாத்தான்குளம் காவல்நிலையம், வீட்டில் ஒரே நேரத்தில் ஆய்வு..!

1 July 2020, 1:21 pm
Sattankulam_FatherSon_PoliceBrutality- updatenews360
Quick Share

வியாபாரிகளான தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், சாத்தான்குளம் காவல்நிலையம் மற்றும் வீட்டில் ஒரே நேரத்தில் சிபிசிஐடி குழுவினர் ஒரே நேரத்தில் ஆய்வு செய்தனர்.

ஊரடங்கு விதிகளை மீறியதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், சிறையில் அவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண வழக்கை சிபிஐ எடுக்கும் வரை,
சிபிசிஐடி விசாரிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன்வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலரும், தந்தை, மகன் இருவரும் போலீசாரால் விடிய விடிய அடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேக மரணம் என்ற ரீதியில் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை மேற்கொண்டார். அதேவேளையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீட்டிலும் மற்றொரு சிபிசிஐடி குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும், ஜெயராஜ் கடை இருக்கும் பகுதிகளிலும் வியாபாரிகளிடம் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே, காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதால், மீதமுள்ள சாட்சிகளிடம் விருந்தினர் மாளிகையிலேயே விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் முடிவு செய்துள்ளார்.