திமுக எம்எல்ஏவுக்கு மிரட்டல்: வைகோவால் மகனுக்கு புதிய தலைவலி..!!

Author: Aarthi Sivakumar
5 December 2021, 5:57 pm
Quick Share

மதிமுகவுக்கு இது மிகவும் சோதனையான காலம் போலிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் வையாபுரியை அரசியலில் தீவிரமாக ஈடுபட அனுமதித்த பின்னர், அக்கட்சியில் நெருக்கடிகள் அதிகமாகிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

முதலில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் மதிமுக பொதுக்குழு கூடி துரை வையாபுரியை தலைமைக் கழக செயலாளராக தேர்வு செய்தபோது அவர் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்றார் என்றனர். அதாவது வைகோ தனது மகனை வலுக்கட்டாயமாக அரசியலில் திணிக்கவில்லை, அவருக்கு எந்த பதவியும் விரும்ப கொடுக்கவில்லை. கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்
என்றுதான் சொல்லப்பட்டது.

ஆனால் சமீப காலமாக மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொரும் தனிப்பட்ட முறையில் கூறும் கருத்துகள் வேறு மாதிரியாக உள்ளன. அதாவது வையாபுரி தலைமை கழகச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் கசிந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, தனது மகனை வைகோ கட்டாயமாக அரசியலுக்குள் திணித்து இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்று ஒருசில மாவட்ட செயலாளர்கள் முணுமுணுக்கவும் தொடங்கிவிட்டனர்.

இதன் எதிரொலியாக, மதிமுக மாவட்ட செயலாளர்கள் 17 பேர் விரைவில் விலகி, திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அவர்கள் தாய்க் கழகமான திமுகவிற்கு திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு மாவட்ட மதிமுக செயலாளர்கள் கூறும் சில காரணங்கள், அரசியல் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட நாடாளுமன்ற, சட்டப் பேரவை தேர்தல், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் போன்றவற்றில் போட்டியிட மதிமுகவினருக்கு
போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. எதிர்காலத்திலும் அதற்கு வாய்ப்பு இருப்பதுபோல் தெரியவில்லை. வைகோவும் கிட்டத்தட்ட கட்சியை திமுகவுடன் ஐக்கியமாகிவிட்டார். பிறகு எதற்கு மதிமுகவில் நீடிக்க வேண்டும், பேசாமல் இப்போதே திமுகவில் இணைந்து விட்டால் எதிர்காலத்தில் திமுக சார்பில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

மேலும் வைகோவின் பேச்சாற்றலில் மயங்கி மதிமுகவில் இணைந்தவர்களில் பலர் தற்போது அவருடைய உடல் நலத்தை கருத்தில்கொண்டு, கட்சி பணியாற்றுவதில். அவ்வளவாக தீவிரம் காட்டுவது இல்லை. அதனால்தான் மதிமுகவில் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படி மதிமுக அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் வைகோவுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இன்னொரு சிக்கலும் முளைத்துள்ளது.

தென்காசி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி வைகோவின் சொந்த ஊராகும். இந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு, விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜாவிடம் வைகோ கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆனால் அவர் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே எம்எல்ஏ ராஜா, சாய மலை அல்லது குருவிகுளம் கிராமத்தில் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை அமைக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் அனுமதி பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்டதும் வைகோ கொதித்துப் போனார்.

உடனே தென்காசி மாவட்ட மதிமுக செயலாளரின் போன் மூலம் ராஜா எம்எல்ஏவை தொடர்பு கொண்ட வைகோ, “நீ எனக்கே அரசியல் கத்துக்கொடுக்கிறீயா? உன்ன ஜெயிக்க வச்சதுக்கு காட்டுற நன்றி விசுவாசம் இதுதானா ? முதலமைச்சர்கிட்ட சொல்லி, உனக்கு இனி அரசியல் எதிர் காலமாக இல்லாமல் செய்துவிடுவேன். தொகுதி பக்கம் நீ வரவும் முடியாது, எதுவும் செய்ய முடியாது” என்று மிகக் கடுமையாக சாடியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து கட்சி மேலிடத்திற்கு ராஜா எம்எல்ஏ முறையிட்டுள்ளார். அதுமட்டுமின்றி வைகோ மிரட்டியதாக கூறப்படும் ஆடியோவையும் அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக இருந்தால் வைகோ மீதான புகார் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இப்போது திமுக மேலிடம் இப்பிரச்சனையை தூசிதட்டி கையில் எடுத்துள்ளது.

முதலமைச்சரிடம் சொல்லி உன் அரசியல் வாழ்க்கையையே அழித்துவிடுவேன் என்று எம்எல்ஏ ராஜாவை வைகோ மிரட்டியதாக செய்திகள் வெளியானதே, அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?”என்று ஒரு வார இதழ் திமுகவின் அமைப்பு செயலாளரும் எம்பியுமான ஆர் எஸ் பாரதியிடம் கேள்வி எழுப்பியது.

அதற்கு அவர், “அது உள்ளூர் பிரச்சனை. இதுவிஷயமாக ஸ்டாலின், சம்பந்தப்பட்ட திமுக மாவட்டச் செயலாளரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். இப்போது மழை, வெள்ளம் பிரச்சனை வந்துவிட்டதால், இதில்தான் முதலமைச்சரின் கவனம் இருக்கிறது. இதற்குப் பிறகு இந்தப் பிரச்னையில் தீர விசாரித்து முடிவு எட்டப்படும்” என்று பதில் கூறியிருக்கிறார்.

ஆர்எஸ் பாரதியின் இந்த பதிலை கேட்டு, மதிமுக அரண்டு போயுள்ளது. முடிந்து விட்டதாக நினைத்த பிரச்சனை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது வைகோவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டாலின் தலையிட்டு நேரடியாக தன்னிடம் ஏதாவது கேட்டு விட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமே என்று வைகோ இப்போது கலங்குகிறாராம்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “மதிமுகவின் தலைமைப் பொறுப்பை மகனிடம் வைகோ ஒப்படைத்துவிட்டார். அவருடைய உடல்நிலை தற்போது அரசியலில் ஈடுபடும் அளவிற்கு இல்லை. அதனால் முழுப் பொறுப்பையும் மகனிடமே விட்டு விட்டார்.

ஆனால் சொந்த ஊர் பிரச்சனை என்பதால், அவருக்கு கலிங்கப்பட்டியை விட்டுக் கொடுக்க மனசு இல்லை. அதுதான் திமுக எம்எல்ஏவை மிரட்டும் அளவுக்கு அவரை நிலைதடுமாறச் செய்துள்ளது.
தனது ஊரில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை அமையவேண்டும் என்பதற்காக அவர் இப்படி நடந்துகொண்டது சரியல்ல. ஏற்கனவே அவருடைய கட்சியின் மாவட்ட செயலாளர்கள் திமுகவுக்கு தாவிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வைகோவின் இந்த மிரட்டல் பேச்சு திமுக தலைமையை கடும் கோபம் அடையச் செய்துள்ளது.

மூத்த தலைவரான அவர் மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும் கூட அவரை ஸ்டாலின் நிச்சயம் கண்டிக்க மாட்டார். ஏனென்றால் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை முதலமைச்சராக துடிக்கிறார் என்று 28 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ குற்றம்சாட்டினார். 2018-ல் அதே வைகோதான், ஸ்டாலினை நான் முதலமைச்சர் ஆக்குவேன் என்று சபதமும் எடுத்தார். 2021சட்டப் பேரவைத் தேர்தலில் அதை அவர் நிறைவேற்றியும் காட்டிவிட்டார்.

அதனால் அவர் மீது திமுக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. அதேநேரம் விரைவில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதிமுக எதிர்பார்க்கும் வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை திமுக நிச்சயம் ஒதுக்குமா?என்பது சந்தேகம்தான். அதுதான் திமுகவின் அதிகபட்ச நடவடிக்கையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்பிரச்சனை கூட வைகோவை விட அவருடைய மகனுக்குத்தான் சிக்கல் தரும் ஒன்றாக இருக்கும். ஏனென்றால் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும், என்று சபதம் எடுத்து துரை வையாபுரி மதிமுகவின் தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் வையாபுரி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 276

0

0