‘எம்.எல்.ஏ.வின் கை என்னால் வெட்டப்படும்’: மனு கொடுத்து மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி…ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
30 November 2021, 10:53 am
Quick Share

திருப்பூர்: வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என்.விஜயகுமாரின் கை என்னால் வெட்டப்படும் என எழுதிய பதாகையுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் கணக்கம்பாளையம் அடுத்த நாதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாககுமார். தொழிலாளியான இவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு பதாகை ஒன்றை ஏந்தியபடி வந்தார். அதில், ”திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமாரின் கைகள் என்னால் வெட்டப்படும்” என எழுதப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்க வந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் வேலுச்சாமி என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் எனது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருட்டு போனது. இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தேன்.

இதன்பேரில் வீட்டு உரிமையாளர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., விஜயகுமார் அவர்களை கைது செய்ய வேண்டாம் என பெருமாநல்லூர் போலீசாரிடம் கூறவே, போலீசார் கைது செய்யவில்லை.

பின்னர் வழக்கை திரும்ப பெற்றால், என்னுடைய வீட்டில் திருட்டுப்போன அனைத்து பொருட்களையும் வாங்கி தந்துவிடுவதாக போலீசார் தெரிவித்தனர். அதை நம்பி நானும் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டேன். ஆனால் எனது உடைமைகளை இதுவரை எனக்கு திருப்பி தரவில்லை.

இதுதொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே எனது வீட்டில் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமாரின் கையை வெட்ட உள்ளேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் விடுத்ததால் நாககுமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் பதாகை மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 430

0

0