மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் துரைமுருகன்..!!

6 July 2021, 8:29 am
Duraimurugan - Updatenews360
Quick Share

புதுடெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திக்கிறார்.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.


மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய மந்திரியை சந்தித்து பேசுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். சென்னையில் இருந்து காலை 10.50 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட அவர் டெல்லி விமான நிலையத்தில் இறங்கி, பகல் 2 மணி அளவில் டெல்லியில் உள்ள தமிழக அரசின் பொதிகை இல்லத்துக்கு வந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து துரைமுருகன் இன்று பகல் 2 மணிக்கு மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் குறித்து மத்திய மந்திரியிடம் விவாதிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து இன்றும் டெல்லியில் தங்கும் துரைமுருகன், நாளை பகல் 1.30 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறார்.

Views: - 94

0

0