ஒரு சில அம்சங்கள் பாதிப்பு… சில அறிவிப்புகள் சூப்பர்.. மத்திய பட்ஜெட்டிற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

1 February 2021, 7:53 pm
Quick Share

சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, வீட்டுக்கடன் வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.

மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கருத்துக்களும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், குறிப்பாக தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. கொரோனாவிற்கு எதிராக போராடும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவியை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 3,500 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரூ.1.03 லட்சம் கோடி சாலைப் பணிகள் தமிழக பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டும்.

சென்னை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கும், கடல் பாசி உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க தேவையான நிதியை, அதாவது தமிழகம் அரசு கோரியுள்ள 50 சதவீத பங்கு நிதியை உடனடியாக அளிக்க வேண்டும்.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ லைட் மற்றும் மெட்ரோ நியோ திட்டங்களை கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் செயல்படுத்திட ஒப்புதல் அளிக்க வேண்டும். நாடு முழுவதும் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதில் இரண்டு ஜவுளிப் பூங்காக்கள் தமிழகத்தில் (தென் மாவட்டங்களில் ஒன்றும், சேலத்தில் ஒன்றும்) அமைத்திட வேண்டும் கோரிக்கை வைக்கிறேன்.

சர்வதேச நிதி நிறுவனத்தை தமிழகத்தில் ஏற்படுத்திட மத்திய அரசு திட்டம் அறிவிக்க கோரிக்கையை முன்வைக்கிறேன். மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி (cess) மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் நிதிநிலையையும் பாதிக்கக்கூடியதாகும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0

1 thought on “ஒரு சில அம்சங்கள் பாதிப்பு… சில அறிவிப்புகள் சூப்பர்.. மத்திய பட்ஜெட்டிற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

Comments are closed.