குமரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி… இன்று இரவு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்தும் வருகை : உச்சகட்ட பாதுகாப்பில் குமரி!!
Author: Babu Lakshmanan19 January 2022, 8:18 pm
கன்னியாகுமரி : கன்னியாகுமரி வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கேந்திர வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற பெயரில் புதிய அவைக்கூடம் கட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நாளை காலை 9.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தலைமை தாங்குகிறார். விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். பொதுச்செயலர் பானுதாஸ் வரவேற்று பேசுகிறார்.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி விவேகானந்த சபாகிரகம் அவைக்கூடத்தையும் அன்னபூரணா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடத்தையும் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் வெள்ளி மலை விவேகானந்த ஆசிரம தலைவர் சுவாமிசைதன்யானந்த ஜி மகராஜ் ஆசியுரை வழங்குகிறார். முடிவில் கேந்திர பொதுச்செயலர் பானு தாஸ் நன்றி கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு வந்தடைந்தார். அங்கு அவரரை குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பகவத் இன்று கொச்சியிலிருந்து பரசுராமர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கன்னியாகுமரி வருகையை யொட்டி குமரி மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0
0