அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தல் : வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்ற அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சி..!
23 September 2020, 2:17 pmதிருப்பூர் : கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் அரசியல் உதவியாளர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணனின் அரசியல் உதவியாளர் கர்ணன் என்ற கனகராஜ், உடுமலை சட்டமன்ற மன்ற அலுவலகத்தில் இருந்தார். அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சரின் நேர்முக உதவியாளர் கடத்தப்பட்டதை அடுத்து தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ரா, அருள்ரசு உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் கே.ஜி சிவகுமார் மேற்பார்வையில், பொள்ளாச்சி உடுமலை சாலை சோதனை சாவடிகள், பொள்ளாச்சி திருப்பூர் சோதனைச் சாவடிகள், கோவை முக்கிய பிரதான சாலைகளில் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் தீவிர வாகன சோதனையும், வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, உடுமலை தளி பகுதியில் கடத்தப்பட்ட கர்ணனை போலீசார் மீட்டனர்..கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.