தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பிரதமர் மோடி குறித்து அவமதிப்பு… கொண்டாடும் திமுக… கொந்தளிக்கும் பாஜக!!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
17 January 2022, 1:01 pm
Quick Share

சென்னை : பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை மறைமுகமாக அவமதிப்பு செய்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் தனியார் தொலைக்காட்சிகளில் குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வரும் விதமாக, ஆடல், பாடல் மற்றும் நகைச்சுவை உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் பிரபல நடிகர், நடிகைகளை நடுவராக வைத்து, குழந்தைகளுக்கான நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

பொங்கல் அன்று வெளியான இந்த நிகழ்ச்சியில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் உள்ள வடிவேலு கதாபாத்திரத்தில் குழந்தைகள் 2 பேர் நகைச்சுவை நாடகம் அரங்கேற்றினர். அதில், மறைமுகமாக பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பது பற்றியும், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும், தென்னிந்தியாவில் பிரதமர் மோடிக்கு ஆதரவு கிடையாது என்று அவர்கள் கிண்டலும், கேலியுமாக நடித்துக் காட்டியிருந்தனர்.

Annamalai Advice to Sekar Babu -Updatenews360

இந்த நிகழ்ச்சிக்கு பாஜகவினர் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை திமுக எம்.பி செந்தில்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘சிரிக்க..சிந்திக்க..’ என்று பகிர்ந்திருந்தார்.

பாஜக ஐடி விங் தமிழக தலைவர் நிர்மல் குமார் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியைக் கண்டித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- உங்கள் தொலைக்காட்சியில் சிறுவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். அதில் நடிகை சினேகா, நடிகர் செந்தில் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். கடந்த 15ம் தேதி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், பிரதமர் நரேந்திரமோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

கருப்பு பணம் ஒழிப்பு குறித்தும், பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்வது குறித்தும் அவதூறாக பேசி இருக்கிறார்கள். அதுவும் பத்து வயது குழந்தைகளை வைத்து இதை பேசி இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம்கூட தெரியாது. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் குழந்தைகளிடம் இதை கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நடுவர்கள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், அதை ஊக்குவிக்கும் வகையிலேயே செயல்பட்டனர்.

நாடு முழுவதும் தவறான செய்தியைக் கொண்டு செல்கிறது இது. தவறான செய்திகள் பரவாமல் இருக்க தொலைக்காட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதைத்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பும் தொலைக்காட்சிதான். இதற்கு தொலைக்காட்சித்தரப்பு, இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்களை வைத்து அரசியல் நோக்கத்துக்காக இப்படி நிகழ்ச்சி நடத்துவதையும் கண்டிக்கிறோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 322

0

0