தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக மாறுகிறது மேகமலை..! மத்திய அரசு ஒப்புதல்..!

7 February 2021, 6:23 pm
Tiger_Drinking_Water_UpdateNews360
Quick Share

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மேகமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில் சரணாலயத்தின் கீழ் வரும் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்கிய புதிய புலிகள் காப்பகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

முன்னதாக ஜனவரி 7’ஆம் தேதி தமிழக அரசு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது ஜனவரி 22 அன்று நடைபெற்ற தொழில்நுட்பக் குழு கூட்டத்தின் அடிப்படையில் அமைந்தது.

மத்திய அரசின் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மாநில அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் வல்லுநர்கள், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, நீர் மேலாண்மை மற்றும் பிராந்தியத்தில் புலிகளின் எண்ணிக்கையை மேம்படுத்த ஐந்தாவது புலிகள் காப்பகத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி வந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, மேகமலை வனவிலங்கு சரணாலயம் (தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவியுள்ளது) மற்றும் கேரளாவின் பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் திருநெல்வேலியின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள, மேகமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் சரணாலயத்தின் மொத்தமுள்ள 1.48 லட்சம் ஹெக்டேர் நிலம் மாநிலத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த புதிய புலிகள் காப்பகம் கேரளாவின் பெரியார் ரிசர்வ் புலிகளுக்கும் ஒரு இடையகமாக இருக்க உதவும். இதுவரை, மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயங்களில் 14 புலிகளை வன அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். 2017 மற்றும் 2018’க்கு இடையில், வன அதிகாரிகள் ஆய்வு செய்து இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏராளமான ஏலக்காய் மலைகளைக் கொண்ட மேகமலை, அதிக எண்ணிக்கையிலான பாலூட்டிகள், புள்ளி மான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் பிற மாமிச உண்ணிகளைக் கொண்டுள்ளது.

மறுபுறம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாபெரும் அணில், பறக்கும் அணில், சிறுத்தைகள், நீலகிரி தஹ்ர்கள், காட்டு பூனைகள், சாம்பார் இன மான்கள், யானைகள் மற்றும் சிங்கம் வால் கொண்ட மாகாக் உட்பட பல வகையான பறவைகளைக் கொண்டுள்ளது.

மேகமலை-ஸ்ரீவில்லிபுத்துர் புலிகள் காப்பகம் என்று அறிவிப்பதன் மூலம், வைகை நதி புத்துயிர் பெற பெரும் வாய்ப்புகள் இருப்பதாக சூழலியல் பாதுகாவலர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில் தற்போது 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் இந்த மேகமலை-ஸ்ரீவில்லிப்புத்தூர் புலிகள் காப்பகம் நாட்டின் 51’வது புலிகள் காப்பகமாக மாறும். 1988 மற்றும் 1989’க்கு இடையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் புலிகள் காப்பகம் களக்காடு முண்டந்துரை ஆகும்.

பின்னர் 2008 மற்றும் 2009’க்கு இடையில் ஆனைமலை மற்றும் முதுமலை உருவானது. மாநிலத்தின் நான்காவது புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் ஆகும். இது 2013 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

1 thought on “தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக மாறுகிறது மேகமலை..! மத்திய அரசு ஒப்புதல்..!

Comments are closed.