‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் 4வது ஆண்டு நினைவுநாள் இன்று…!!

5 December 2020, 8:57 am
jayalaitha - updatenews360
Quick Share

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அவரின் நினைவு நாளையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் பொது மக்கள் வரை மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களை ‘ஜெ. ஜெயலலிதா எனும் நான்’ என்ற கம்பீரமான கணீர் குரலால் தன்வசப்படுத்தியவர்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. செல்வி. ஜெயலலிதாவின் இயர் பெயர் கோமளவல்லி செயராம். இவர் 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாகவும், அரசியல் தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.

ஜெ.வின் இளமைக்காலம்:

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி பெற்றோருக்கு மகளாக ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதாவுக்கு 2 வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த அவரது அன்னை வேதவல்லி என்ற தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர்கள் பெங்களூரில் வசித்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். பிறகு சென்னைக்கு வந்த அவர்கள் 1958ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் 10ம் வகுப்பு படித்தார். அதன்பிறகு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது. அதே சமயம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே தனது படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

ஜெயலலிதா பற்றி அவரது தயார் ‘சிறு குழந்தையாக இருக்கும் போதே எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் முகவும் கெட்டிக்காரி. ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசுக் கூடியவர் என்று கூறியுள்ளார். மேலும், பரதநாட்டியம், கர்நாடக இசை, ஆகியவற்றை முறைப்படி பயின்றுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971-ம் ஆண்டு காலமானார்.

திரைப்பயணம்:

பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கியவர் ஜெயலலிதா அவர்கள் மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1964ல் ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னட படம் மூலம் இந்திய திரை உலகில் நுழைந்தார். இப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து ‘வெண்ணிற ஆடை’ என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அடுத்தடுத்து அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். நடிகர் எம்.ஜி.ஆருடனான அவர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை:

ஜெயலலிதா நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடையவர். நாவல் எழுதியவர். சிறுகதைகள் எழுதியவர். துக்ளக் பத்திரிகையில் இவர் கட்டுரைகளையும், புத்தக விமர்சனங்களையும் எழுதியவர்.1980ம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், அ.இ.அ.தி.மு.க., பிரச்சார செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார். மேலும் 1983ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் தீவிரமாக அ.இ.அ.தி.மு.க., அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அ.இ.அ.தி.மு.க., கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது.

1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் ஜெயலலிதா. அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1988ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா தலைமையில் புதிய பாதையில் நடை போட ஆரம்பித்தது அதிமுக. 1989ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்கள்தான். 27 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.

இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்தார். 1991 முதல் 1996 வரை அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. அதன் பின்னர் 2001ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இதனை தொடர்ந்து, 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.

2016 சட்டசபைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 1984ம் ஆண்டுக்குப் பிறகு மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதை இதிலும் நிரூபித்து விட்டார் ஜெயலலிதா.

ஜெயலலிதா பெற்ற விருதுகள்:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தான் மேற்கொண்ட பணிகளை பலரும் பாராட்டக்கூடிய அளவிற்கு செய்து முடிப்பவர். அவர் வாழ்கையில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

*பட்டிக்காடா பட்டணமா என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான ‘பிலிம்பேர் விருதினை’ பெற்றுக்கொடுத்தது.

  • ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற தெலுங்கு படம் சிறந்த தெலுங்கு நடிகைக்கான ‘பிலிம்பேர் விருதினை’ அவருக்கு பெற்றுக்கொடுத்தது.
  • ‘சூர்யகாந்தி’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான ‘பிலிம்பேர் விருதினை’ பெற்றுக்கொடுத்தது.
  • ‘கலைமாமணி’ விருது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கி இவரை கௌரவித்தது.
  • ‘கவுரவ டாக்டர் பட்டம்’ இலக்கியத்தில் சென்னை பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார்.
  • ‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான அவருக்கு வழங்கியது.
  • ‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்காக அவருக்கு கிடைத்தது.
  • ‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் சட்டத்திற்கான அவருக்கு வழங்கியது.
  • ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டம்’ பாரதிதாசன் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது.
  • ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டம்’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது.

6 முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகை…இப்படி எத்தனையோ சிறப்புகளை பெற்று, அரசியலில் இரும்புப் பெண்மணி என்ற புகழப்பட்டு, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Views: - 24

0

0