தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்: எவற்றுக்கெல்லாம் அனுமதி…எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாட்டு…முழு விவரம்..!!

Author: Aarthi Sivakumar
6 January 2022, 10:18 am
Quick Share

சென்னை: ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், இதனால் பல மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசும் இரவு நேர ஊரடங்கை இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைந்து 27-12-2021 அன்றைய நாளில் 605 ஆக இருந்தது. பொது இடங்களில் கொரோனா நோய்த்தடுப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காததன் காரணத்தினால் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து கடந்த 3ம் தேதி 1,728 ஆக உள்ளது.

கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த தவறினால்பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, கொரோனா மேலாண்மைக்குழுவின் தலைவர் ஆர்.பூர்ணலிங்கம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின்போது சில அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது, மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படும்.

மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பஸ் சேவைகள் அனுமதிக்கப்படும். ஆனால், பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதேபோல், அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வருகிற 9ம் தேதி தமிழகத்தில் முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசிய பணிகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் வினியோகம், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனப்போக்குவரத்து மற்றும் பெட்ரோல் – டீசல் பங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகியவை இயங்காது. முழு ஊரடங்கின்போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

9ம் தேதி மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்துகொள்ள வேண்டும்.

மேலும், மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு வருகிற 20ம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மெட்ரோ ரயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்து பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 பேருடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து சினிமா தியேட்டர்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியும், 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும். அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 293

0

0