ஊழலுக்காகவே வேலைக்கு ஆள் எடுத்த செந்தில் பாலாஜி..? டிரான்ஸ்பார்ம் வாங்கியதில் ரூ.397 கோடி ஊழல்… திமுக ஆட்சியில் தான் சாத்தியம் ; அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
6 July 2023, 7:45 pm
Quick Share

திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்ம் வாங்கியதில் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு மின்சார வாரியத்தில்‌, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில்‌ டிஸ்ட்ரிபியூஷன்‌ டிரான்ஸ்பார்மர்‌ கொள்முதலில்‌, ரூபாய்‌ 397 கோடி அளவிலான மிகப்‌ பெரிய ஊழல்‌ நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அரசு அதிகாரிகள்‌ துணையோடு கிட்டத்தட்ட 30 ஒப்பந்தக்காரர்கள்‌, ஒவ்வொரு டெண்டரிலும்‌ ஒரு ரூபாய்‌ கூட மாறாமல்‌ ஒரே தொகையை அனைவரும்‌ ஒப்பந்தப்‌புள்ளியில்‌ கோரியுள்ளனர்‌. கடந்த இரண்டு ஆண்டுகளில்‌, 45 ஆயிரம்‌ டிரான்ஸ்பார்மர்‌ கொள்முதல்‌ செய்வதற்கான ஒப்பந்தங்கள்‌ கோரப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள்‌ அனைத்திலும்‌, அனைத்து ஒப்பந்தக்காரர்களும்‌ ஒரே தொகையைக்‌ குறிப்பிட்டிருப்பதைப்‌ பார்த்ததுமே, ஒப்பந்த ஆய்வுக்‌ குழு, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்திருக்க வேண்டும்‌. ஆனால்‌, அப்படிச்‌ செய்யாமல்‌, சந்தை மதிப்பை விட மிக அதிகத்‌ தொகைக்கு ஒப்பந்தங்கள்‌ வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு டிரான்ஸ்பார்மருக்கும்‌, சந்தை மதிப்பை விட சுமார்‌ 4 லட்சத்துக்கும்‌ மேலாக அதிக விலைக்கு ஒப்பந்தம்‌ வழங்கப்பட்டிருப்பதாகத்‌ தெரிகிறது.

இப்படி இரண்டு ஆண்டுகளில்‌ வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும்‌ கணக்கில்‌ கொண்டால்‌, சுமார்‌ 397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத்‌ தெரிகிறது. அனைத்து ஒப்பந்தக்காரர்களும்‌ சேர்ந்து மின்துறை அதிகாரிகள்‌
மற்றும்‌ துறை அமைச்சருடன்‌ இணைந்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்‌. இந்த ஊழலில்‌ முக்கிய நபரான காசி என்பவர்‌, மின்சார வாரியத்தில்‌ கொள்முதல்‌ நிதிப்‌ பிரிவில்‌ வேலை செய்பவர்‌ என்றும்‌, ஆனால்‌, அலுவலகத்துக்குச்‌ செல்லாமல்‌, அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜி விட்டில்‌ இருந்தபடியே மின்சார வாரிய ஒப்பந்தங்களை முடிவு செய்வார்‌ எனவும்‌ கூறப்படுகிறது.

இந்த நபர்‌, கடந்த 2020 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டு, 2021 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ கட்டாய ஓய்வு வழங்கப்பட்டவர்‌ என்றும்‌, திமுக ஆட்சிக்கு வந்ததும்‌, அவரது பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும்‌ பணியில்‌ அமர்த்தப்பட்டுள்ளார்‌. ஊழல்‌ செய்வதற்காகவே, கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட ஒருவரை மீண்டும்‌ பணியிலமர்த்தி, அமைச்சர்‌ வீட்டில்‌ இருந்து ஒப்பந்தங்களை முடிவு செய்வது எல்லாம்‌ திறனற்ற திமுக ஆட்சியில்‌ மட்டும்தான்‌ சாத்தியம்‌.

அமைச்சருக்கும்‌, மின்சார வாரிய நிர்வாகத்தின்‌ தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும்‌ நேரடித்‌ தொடர்பில்லாமல்‌, 397 கோடி ரூபாய்‌ அளவுக்கான ஊழல்‌ நடந்திருக்க வாய்ப்பில்லை. உடனடியாக, அமைச்சர்‌, அதிகாரிகள்‌, ஒப்பந்தக்காரர்கள்‌, மற்றும்‌ காசி உட்பட இதில்‌ தொடர்புடைய மின்சார வாரிய பணியாளர்கள்‌
அனைவரின்‌ மீதும்‌ வழக்குப்‌ பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று, தமிழக பாஜக சார்பில்‌ வலியுறுத்துகிறேன்‌.

இந்த ஊழல்‌ வழக்கு குறித்த தெளிவான தகவல்கள்‌ அனைத்தையும்‌ வெளிக்‌ கொண்டு வந்து, லஞ்ச ஒழிப்புத்‌ துறையில்‌ புகார்‌ அளித்து நடவடிக்கை கோரியிருக்கும்‌ அறப்போர்‌ இயக்கத்திற்கு, தமிழக பாஜக சார்பில்‌ மனமார்ந்த நன்றிகளையும்‌ பாராட்டுக்களையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 373

0

0