கல்லூரியில் 5 மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்… மவுனம் காக்கும் அரசியல், திரை பிரபலங்கள்…!!

Author: Babu Lakshmanan
1 July 2021, 10:03 pm
Quick Share

கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களால் மாணவிகளுக்கு அளிக்கப்படும் பாலியல் சீண்டல்கள், தொல்லைகள், கொடுமைகள் பற்றிய செய்திகள் கடந்த 2 மாதங்களாகவே தமிழகத்தையே உலுக்கும் விதமாக, வெளியாகி வேதனையும் அதிர்ச்சியும் அளித்து வருகின்றன.

ராஜகோபாலன் முதல் கைது

கடந்த மே மாதம் அடுத்தடுத்து இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் பல வெளிச்சத்துக்கு வந்தன.
முதலில் சென்னையின் பிரபல பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவனில் பிளஸ்-2 மாணவிகளுக்கு வாட்ஸ்அப் வழியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

psbb teacher- updatenews360

இதேபோல் தமிழக தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பிரபல பயிற்சியாளர் நாகராஜன் வசமாக சிக்கினார். அவர் மீது 15-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் அடுத்தடுத்து புகார் கொடுத்தது விளையாட்டு உலகையே அதிர வைத்தது. அவரும் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு கம்பி எண்ணி வருகிறார்.

பெண் சிஷ்யைகளும் உடந்தை

அடுத்து சிக்கியவர், பிரபல சாமியார் சிவசங்கர் பாபா. இவர் சென்னையில், தான் நடத்தி வரும் ஆசிரம பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு. அந்த சாமியாருக்கு, இதில் ஒரு சில பெண் சிஷ்யைகளே உடந்தையாக இருந்துள்ளனர், என்பது மிக வேதனை தருவதாகும். இந்த சல்லாப சாமியாரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

sivashankar baba - updatenews360

பிஷப் ஹீபர் கல்லூரியிலும் சீண்டல்கள்

இதற்கெல்லாம் சற்றும் சளைத்தது அல்ல என்பதுபோல் திருச்சியில் உள்ள புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் பட்டமேற்படிப்பு பயிலும் மாணவிகள் 5 பேர் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர், என்ற செய்தி இதயத்தில் ஈட்டியை பாய்ச்சியதுபோல் உள்ளது.

55 ஆண்டு பழமையும், சிறப்பான கல்வித் திறனுக்காக தன்னாட்சி அதிகாரமும் பெற்றுள்ள அந்த கல்லூரி கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் 39-வது இடத்தை பிடித்த பாரம்பரியமிக்க பிஷப் ஹீபர் கல்லூரி ஆகும். 2019-ம் ஆண்டு அக்கல்லூரி 44-வது இடத்தில் இருந்தது.

தற்போது இந்த சிறப்பை எல்லாம் புதை குழிக்குள் தள்ளிவிட்டதுபோல் பிஷப் ஹீபர் கல்லூரியின் மாண்பு, ஒரு காமக் கொடூர பேராசிரியரின் செயலால் அப்படியே சிதைந்துபோய் விட்டது.

அந்தப் பேராசிரியரின் பெயர் பால் சந்திரமோகன். தமிழ்த்துறை தலைவர். அவர் மீது, அவரிடம் முதலாமாண்டு பயிலும் 5 மாணவிகள் ஒன்றாக இணைந்து பாலியல் புகார் ஒன்றை கல்லூரி நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர்.

5 பக்கங்களுக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மாணவிகளின் பெற்றோரை மட்டுமல்ல, இந்த சமூகத்தையே அதிர்ச்சியில் உறைய வைக்கும் அளவிற்கு அடுக்கடுக்கான பகீர்
கொடுமைகள் விவரிக்கப் பட்டுள்ளன.

அதில், ”பால் சந்திரமோகன் மிக மோசமான முறையில் எங்களிடம் நடந்துகொள்வார். வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடப்பார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்தும் கொள்வார். கண்ட இடங்களிலும் கைவைத்து சில்மிஷமும் செய்வார். எந்த நேரமும் இரட்டை அர்த்தத்தில்தான் பேசுவார். எங்களையும் அப்படி பேசும்படி வற்புறுத்துவார்.

வகுப்பறையில் சில மாணவிகள் மட்டும் தனியாக இருக்கும்போது, காதல் ஜோடிகளை பார்த்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? திருமணத்தன்று உங்களை எப்படி தயார்படுத்திக் கொள்வீர்கள்? என்றெல்லாம் ஆபாசமாக கேட்பார். அதற்கு பதில் கூறும்படி கட்டாயப் படுத்துவார்” என்று அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு 20-க்கு மேற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து மனம் கொந்தளித்துப் போய் கல்லூரி முதல்வருக்கு அவர்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர்.

மேலும் அதில், `அதே துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை நளினி மாணவிகளிடம், பால் சாரை பார்க்க செல்லவேண்டும் என்றால் முகம் கழுவி அழகாக மேக்கப் போட்டு புன்னகையுடன்தான் போகவேண்டும் என்று வற்புறுத்துவார்” எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அறிக்கையும்… பணியிடை நீக்கமும்

இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரியின் விசாரணைக் குழு உறுப்பினரான வக்கீல் ஜெயந்தி ராணி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்ட பலரிடம் தீவிர விசாரணை நடத்தி அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் கடந்த வாரம் தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து, பால் சந்திரமோகன் அதிரடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பேராசிரியை நளினி மீதும் நடவடிக்கை பாயும் என்று கருதப்படுகிறது.

Rape_UpdateNews360

இந்த விவகாரம், கல்லூரி மாணவர்கள் வாயிலாக வெளி உலகிற்கு வெளிச்சத்துக்கு வர தற்போது போலீஸும் வேறுவழியின்றி இது தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளது. காவல்துறை கூடுதல் உதவி ஆணையர் வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகள் நேரடியாக போலீசில் புகார் செய்தாலோ அல்லது கல்லூரி நிர்வாகம் போலீசுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தாலோதான் பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

அதனால் கல்லூரி நிர்வாகம் எடுத்த அடிப்படையில் போலீசார் பால் சந்திரமோகனை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மகளிர் அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராடி வருகின்றன.

மவுனம் காக்கும் பிரபலங்கள்

“இதில் ஒரு வேதனை என்னவென்றால், சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் இதுபோன்ற சம்பவம் நடந்தபோது சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களை வைத்துத்தான் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, தி.க. தலைவர் வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன் போன்றோர் கொதித்தெழுந்து பள்ளி நிர்வாகத்தை தமிழக அரசு உடனே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று ஆவேசமாக முழங்கினர். ஆனால் கடந்த 3 தினங்களாக இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய்பரவி வருகிறது. ஆனால் இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட 5 மாணவிகளுக்காக இதுவரை குரல் கொடுக்கவில்லை. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போன்றோரும் இன்னும் மவுனம் காத்து வருகிறார்கள்.

Kanimozhi Minister - Updatenews360

இதுபோன்ற பாலியல் புகார்களில் சிக்கும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அது எந்த பள்ளி, கல்லூரியாக இருந்தாலும் பாகுபாடு காட்டாமல் அதன் நிர்வாகத்தை உடனடியாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களில் நடக்காது. ஆசிரியர்களுக்கு பயமும் வரும்.

அதேபோல தமிழக அரசியல் கட்சிகளும், கனிமொழி போன்ற பெண்ணியப் போராளிகளும் தங்களுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று பார்க்காமல் குரல் கொடுக்க முன்வரவேண்டும்” என்று அந்த மகளிர் அமைப்பினர் வலியுறுத்தினர்.

Views: - 563

1

0