கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மக்கள் முடிவெடுப்பார்கள் : குருமூர்த்திக்கு டிடிவி தினகரன் பதிலடி..!!

16 January 2021, 1:24 pm
gurumoorthi - ttv dinakaran - updatenews360
Quick Share

சென்னை : சசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை நீருடன் ஒப்பிட்டு பேசிய துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்திக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர் குருமூர்த்தி, “வீடு பற்றி எறியும் போது, கங்கை ஜலத்திற்காக காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம். அதுபோல, திமுகவை தோற்கடிக்க அதிமுக – பாஜக கூட்டணியில் சசிகலாவையும் ஏற்றுக் கொள்ளலாம்,” எனக் கூறினார்.

thuglak- updatenews360

சசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை நீருடன் குருமூர்த்தி ஒப்பிட்டு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ” தான் ஒரு கிங் மேக்கர், சாணக்கியர் என்னும் நினைப்பில் குருமூர்த்தி பேசி வருகிறார். டிடிவி தினகரனிடம் கையூட்டை பெற்றுக் கொண்டு, இதுபோன்று அவர் பேசி வருகிறார்,” எனக் கூறினார்.

Jayakumar -Updatenews360

இந்த நிலையில், குருமூர்த்தியின் பேச்சுக்கு அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல.

துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா இன்னும் சில நாட்களில் சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்ற முடிவில் அக்கட்சியின் தலைமை உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே, அமமுக தரப்பில் மறைமுகமாக கூட்டணி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 7

0

0