தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடிசம்..? ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரு ரவுடிகள் என்கவுண்டர்..!!

Author: Babu Lakshmanan
15 October 2021, 6:28 pm
tamilnadu encounter -updatenews360
Quick Share

தமிழகத்தில் ஒரே வாரத்தில் இரு ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பில் சந்தேகம் எழுந்தது.

தமிழகத்தில் நக்சலைட்டுக்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காகவே என்கவுண்டர் என்ற முறை அறிமுகமானது. இதைத் தொடர்ந்து, அட்டகாசம் செய்யும் ரவுடிகளுக்கு தக்க பாடம் புகட்டும் ஆயுதமாக என்கவுண்டர் மாறியது. 1996ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரபல ரவுடி ஆசைத்தம்பியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

இதைத் தொடர்ந்து, வெங்கடேச பண்ணையார், அயோத்திக்குப்பம் வீரமணி, சந்தனக் கடத்தல் வீரப்பன், பங்க் குமார், வெள்ளை ரவி, மணல்மேடு சங்கர், பாபா சுரேஷ், கோவையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த ஓட்டுநர் மோகன்ராஜ், கிட்டப்பா, கோவிந்தன், முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், ஆனந்தன், கதிர்வேல், வல்லரசு என 25க்கும் மேற்பட்ட ரவுடிகள், கிரிமினல் பின்னணி கொண்டவர்களையும் போலீசார் என்கவுண்டர் மூலமாக சாய்த்துள்ளனர்.

இப்படியிருக்கையில், தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி மலர்ந்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்னே, இனி தமிழகத்தில் குற்றச்செயல்கள் தலைவிரித்தாடப் போகிறது..? என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, காவல்துறையில் உள்ள தலைமை பொறுப்புகளில் பிரபலமான நபர்களை பணியமர்த்தி தமிழக அரசும் அதிரடி காட்டியது. இந்த சூழலில், தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் இரு ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய துரைமுருகன் என்ற ரவுடியை கைது செய்ய காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது, காவல்துறையினரை அரிவாளால் வெட்ட துரைமுருகன் முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக அவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத் துப்பாக்கி கொள்ளையர்களில் ஒருவனை, அதிரடிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை நிலைநாட்ட, ரவுடிகளை களையெடுக்கும் போலீசாரின் இந்த செயல்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், சில கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் இதுபோன்ற என்கவுண்டர்களை நடத்துவது வரவேற்புக்குரியதுதான். அப்போது,தான் பிற ரவுடிகளுக்கும் அச்சம் வரும். ஆனால், இத்தனை நாட்கள் இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்கள், தற்போது இவ்வாறு செயல்படுவதுதான் சந்தேகமாக உள்ளது. இவர்களை யாரேனும் தூண்டி விடுகிறார்களா..? அல்லது அரசியல் தலைவர்களின் பின்புலத்தினால் இந்த தைரியம் வருகிறதா..? என்று தெரியவில்லை.

இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வது தமிழகத்தை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக இருக்கச் செய்யுமா..? என்பதில் சந்தேகம்தான். தமிழக அரசு ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, சட்டங்களை கடுமையாக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு ஆதரவானவர் என்று பாகுபாடு காட்டாமல் நடக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

Views: - 563

0

0